மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெற்கு டெல்லியில் கழிவுகள், மற்றும் குப்பைகள் மூலம் எரிசக்தியை தயாரிக்கும் முதல் எரிசக்தி ஆலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித் ஷா, இந்த ஆலை ஒரு நாளைக்கு சுமார் 2,000 மெட்ரிக் டன் கழிவுகளைக் கையாளும். இதன் மூலம் 25 மெகாவாட் பசுமை ஆற்றல் உற்பத்தி செய்யப்படும். இது ஒரு பல்நோக்கு ஆலை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்தின் மூலம் டெல்லி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். பத்திரிகை நேர்காணல்கள் வளர்ச்சியைத் தரும், விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்தலாம் என்று கெஜ்ரிவால் கருதுகிறார். இது தவறான கருத்து. டெல்லி மக்கள் இனியும் விளம்பரம் என்ற போர்வையில் சிக்க மாட்டார்கள். தேர்தல் காரணமாக இந்த ஆலை திறக்கப்படுகிறது என்று சிலர் கூறுவது தவறு. டெல்லியை குப்பையில்லா நகரமாக்க மோடி அரசு செயல்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள நரேலாவில் மற்றொரு ஆலை தொடங்கப்பட உள்ளது. அதன் மூலம் 3,000 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படும். டெல்லி தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கப் போகிறது. 2025ம் ஆண்டுக்குள் டெல்லி மாநகராட்சி உதவியுடன் தினசரி கழிவுகளை பதப்படுத்தும் வசதிகளை டெல்லியில் அமைப்போம் என்று உறுதியளிக்கிறேன். இதனால், குப்பைக் குவியல்கள் எதிர்காலத்தில் காணப்படாது. விளம்பர அரசியலை விரும்புவதா அல்லது வளர்ச்சி அரசியலை விரும்புவதா என்பதை டெல்லி மக்கள் முடிவு செய்ய வேண்டும்” என கூறினார்.