காலம் நகர்ந்து கொண்டே போகிறது. ஆனால் அது வானிலை மாற்றங்களுடன், மீண்டும் சுழன்று வருகிறது, எனவே அதற்கு ஒரு ஆரம்பப் புள்ளி இருக்க வேண்டும். அந்தப் புள்ளிதான் வருடப் பிறப்பு. இந்த வருடப் பிறப்பு, பாரத தேசமெங்கும், பெரும்பாலான இடங்களில், சித்திரை மாதத்தை ஒட்டியே வருகிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை; “ஒரே பாரதம்” என்னும் உன்னதத்தை நிறுவும் ஒரு சாட்சியாகவும் இது இருக்கிறது.
சித்திரை முதல் தினத்தை, புத்தாண்டு என்று தமிழ் நாட்டில் வரவேற்கிறார்கள் என்றால், அது “விஷு” என்று கேரளத்திலும், “யுகாதி” என்று தெலுங்கர்களாலும், “குடபட்வா” என்று மராட்டியர்களாலும், “பைசாகி” என்று பஞ்சாப் முதாலான இடங்களிலும், “சைத்ர சுக்லாதி” என்று வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. சில தினங்கள் முன் பின்னாக இருந்தாலும், இவற்றின் பின்னே அரிய விண்வெளிச் செய்திகள் இருப்பது, நம் பாரத முன்னோர்களது அறிவியல் அறிவை நிலைநாட்டுகிறது.
வருடம் என்பது ஆரம்பப் புள்ளி என்றோம். அந்த ஆரம்பம் எது என்று ஆராய்ந்தால், அது பன்னிரண்டு ராசிகளைக் கொண்ட ராசிச் சக்கரத்தின் ஆரம்பம் என்று தெரிகிறது. சக்கரம் என்றாலே வட்டம். வட்டத்துக்கு ஆரம்பப் புள்ளி ஏது? தெய்வ சங்கல்பம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்னும் நம் நம்பிக்கையைப் பறைசாற்றும் விதமாக, அந்த ஆரம்பப் புள்ளி, தமிழ் கடவுள் என்ற அடையாளத்தையும் தாண்டி, பாரதமெங்கும் வணங்கப்படும், முருகப் பெருமானால் நமக்கு அறிவிக்கப்பட்டது.
முருகர் காட்டிய வருடப் பிறப்பு
முருகர், மயில் மீது ஏறி, உலகைச் சுற்றினார் என்னும் விவரம்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அவர் ஆடு மீது ஏறி, ராசி மண்டலத்தையே சுற்றினார் என்பதை, சிவபுராணம் சொல்கிறது. வைகுண்டத்தில் திரிந்து கொண்டிருந்த ஒரு மலையாட்டை முருகப் பெருமான் அடக்கி, அதன் மீது அமர்ந்து, இந்தப் பிரபஞ்சத்தை ஒரு முஹூர்த்தத்தில் சுற்றி வந்து, ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேர்ந்தார் என்பதே அந்தக் கதை. அது முதல், ஆடு முதலாக ராசி மண்டலம் கணக்கிடப்பட்டது. ஆடு எனப்படும் மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரமும், ஆரம்பப் புள்ளியாகக் கணக்கிடப்பட்டது. அப்பொழுதுதான் சித்திரை மாதம் ஆரம்பிக்கிறது. அந்த தினத்தையே தமிழ் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
சூரியன் மட்டும் இருந்தால் போதாது. சூரியனும், சந்திரனும் சேர்ந்த அமாவாசைக்கு அடுத்த நாள் தெலுங்கு மக்கள் சந்திரனையும் இணைத்து, புது வருடம் ஆரம்பிக்கிறார்கள். இந்த தினம் “யுகாதி” என்னும் சிறப்பையும் கொண்டது. ஏனெனில், தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் கலி மஹாயுகம், சித்திரையில் சூரியனும், சந்திரனும் இணைந்த தினத்துக்கு மறுநாள்தான் ஆரம்பித்தது. எனவே, அது யுகத்தின் ஆதி, அதாவது, யுக ஆரம்பம் எனப்படுகிறது. காலக் கண்ணாடிகளான சூரியன், சந்திரன் மட்டுமல்ல, ராகு நீங்கலாக மீதி ஆறு கிரகங்கள் (புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, கேது) இந்த ஆரம்பப் புள்ளியில்தான் யுக ஆரம்பத்தில் சங்கமித்தன. கிரகங்கள் சூழ்ந்த இந்த ஆரம்பப் புள்ளியே வருடத்தின் ஆரம்பம் என்று இந்த தேசமே ஏற்றுக் கொண்டது.
சோழர் காலத்தில் விஷு
விஷு என்பது ஒரு வித்தியாசமான விவரத்தைத் தருகிறது. கேரள நாட்டில் மட்டும்தான் வருட ஆரம்பத்தை விஷு என்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழர் காலத்தில், விஷு என்பதை, சித்ரா பௌர்ணமியிலும், ஐப்பசி பௌர்ணமியிலும் கொண்டாடியிருக்கிறார்கள். விஷு என்றால் சம பகல்-இரவு நாள் என்று அர்த்தம். சூரியன் பூமத்திய ரேகையைக் கடக்கும் தினம் விஷு எனப்படும். அன்று உலகெங்கும், பகலும், இரவும், சமமான கால அளவே இருக்கும். வானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சூரியன், 3,600 ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் பயணத்தில் மத்திய பகுதியைக் கடக்கிறார். அது சித்திரை முதல் நாள், அதாவது, மேஷ ராசியின் ஆரம்பப் புள்ளி. எனவே அதை விஷு என்றார்கள்.
ஆனால், சூரியன் முன்னும், பின்னும் செல்லச் செல்ல, இந்த மையப் பகுதியை அது சித்திரை முதல் நாள் கடக்காது. ஆனால், சூரியனும், சந்திரனும் இல்லாமல், காலம் என்பதே கிடையாது. அதனால், சித்திரை மாதப் பௌர்ணமியிலும், அதற்கு நேர் எதிரான ஐப்பசி பௌர்ணமியிலும், விஷு கொண்டாடலாம் என்று வாயு புராணங்கள் கூறுகின்றன. அந்தக் கருத்து, இராஜராஜ சோழர் காலத்தில் பின்பற்றப்பட்டது என்பதை, திருவல்லம், பில்வநாதீஸ்வரர் கோயிலில் காணப்படும், முதலாம் ராஜராஜனது ஏழாம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. ஐப்பசி விஷுவில், சந்திர கிரகணம் நடந்த விவரத்தை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. பிற்காலத்தில், சித்திரை முதல் நாளே விஷுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கல்வெட்டுகளில் ஆட்டை வட்டம்
ஆட்டினை அடையாளமாகக் கொண்ட, மேஷ ராசியையும், அது சமயம் வரும் சித்திரை மாதத்தையும்தான் வருட ஆரம்பமாகத் தமிழ் மக்கள் ஏர்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ‘ஆட்டை வட்டம்’ என்னும் சொல் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஆட்டை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வட்டம் என்பதை இது குறிக்கிறது. இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வண்ணம், உக்கல் திருமால் கோயிலின் மேற்குப் புறச் சுவரில் காணப்படும் பொ.யு. 1014 ஆம் ஆண்டு செதுக்கப்பட்ட முதலாம் இராஜராஜன் கல்வெட்டில், “ராஜராஜன் கிணற்றுக்கும், தொட்டிக்கும் செதத்துக்கும் ஆட்டாண்டு தொறும் புதுக்குப்புறமாக வெச்ச” என்று எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். ஆட்டை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கவே, ‘ஆட்டாண்டு’ என்ற சொல்லும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
இதனையே, ‘திண் நிலை மருப்பின் ஆடு தலையாக விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலன் மண்டிலத்து’ அதாவது ஆடு எனப்படும் மேஷ ராசியை முதலாகக் கொண்டுதான் விண் கோள்கள் செல்கின்றன என்று நெடுநல் வாடை கூறுகிறது.
தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியனாரும்,
“மேடமென்னும் ராசியாம் அதனிற்கேளு
மேலானா யசுவினி முதலாம்பாதம்
குலவியே கதிரவந்தான் வந்துதிக்க
வருச புருசன் அவதரிப்பானென்றே
பரிவுடன் உலகிற்கு நீ சாற்றே”
என்று அகத்தியர் பன்னீராயிரத்தில் கூறுகிறார்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கதிரவன் என்னும் சூரியனை முன்னிட்டே வருடம் ஆரம்பிக்கிறது. ஆடு, ராசியான மேஷத்திலிருந்து பயணத்தைத் தொடங்குவதாலும், அந்த ராசியில் உச்சமடைவதாலும், சூரியனுக்கு விசேஷமான இடம் “ஆடுதுறை” என்றானது.
ஆடுதுறைக்கு “மருத்துவக்குடி” என்று மற்றொரு பெயர் உண்டு. ஆடு ராசியான மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரம் தொடங்கி வருடம் ஆரம்பிப்பதால், இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. அஸ்வினி நட்சத்திர தெய்வம், மருத்துவர் என்று பெயர் பெற்ற இரட்டையர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஷம் என்னும் வரையாடு
ஆடு முதல் ஆண்டு ஆரம்பிக்கவே, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் சேர மன்னனும், வருடை என்னும் மலையாட்டை, விந்திய மலையிலிருந்து கொணர்ந்து, தன்னாட்டு மலைப் பகுதியில் குடியேற்றினான். அவை இன்றும் வரையாடு (Nilgiri Tahr) என்னும் பெயரில், மூணாறு பகுதியில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கும் ஒரு ஆச்சரியம். அந்த இடத்தின் பெயர் ‘ரவி குளம்’. ரவி என்றால் “சூரியன்” என்று பொருள். இப்படிப்பட்ட இடப்பெயரின் மூலம் சூரியக் குளத்தில் இந்த ஆடுகளை வளர்த்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. எதனால் அந்தப் பெயர்? சூரியன் தன் வருடாந்திரப் பயணத்தை மேஷத்திலிருந்து ஆரம்பிக்கவே, அந்த மேஷத்தில் உச்சம் பெறவே, அந்த மேடங்கள் (ஆடுகள்) வளர்க்கப்படும் இடத்துக்கு ரவி குளம் என்று பெயர் வைப்பது பொருத்தம்தானே!
மாற்றக் கூடியதா வருடப் பிறப்பு?
விண்ணியலையும், சூரியனையும் முன்னிட்டு, தொன்று தொட்டு, வருட ஆரம்பத்தை வைத்துள்ளார்கள். அதை மாற்றலாமா? மாற்ற வேண்டும் என்றால், வருடாரம்பத்தின் பின்னுள்ள விண்ணியலை மிஞ்சும் வண்ணம் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய தலைவர்கள், தங்கள் மனம் போல் வருடத்தை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். தையில் வருடப்பிறப்பாம். கேட்டால், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கிறார்கள்.
திருவள்ளுவர் ஆண்டைக் கொண்டே தொடர் ஆண்டு வைத்துக்கொள்ள வேண்டுமாம். ஜோதிடத்துக்குப் பெயர் போன வள்ளுவக்குடியில் பிறந்த திருவள்ளுவரே விண்ணியலைப் புறந்தள்ளி, இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாமல், நம் பாரத தேசத்தில்தான், அறிவியலும், விண்ணியலும் சார்ந்த கால பகுப்பும், வருடசுழற்சியும் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல், தெய்வத்தின் தொடர்பும், முனிவர்கள் அறிவுறுத்தலும் கொண்டதாக இருக்கிறது. இதை மாற்றுவது கண்டனத்துக்குரியது. விண்ணியல் சார்ந்த காலம் என்னும் செல்வத்தை, இழக்காமல், மாற்றாமல், போற்றிப் பாதுகாப்பதே நம் கடமையாகும்.
கட்டுரையாளர்: ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர்