சிந்து தந்த செல்வன்

சிந்து பகுதி ஹிந்துக்களால் வருண பகவானின் அம்சமாகக் கருதப்படும் ஜூலேலால் ஸ்வாமியின் அவதார தினம். அதுவே சிந்தி புத்தாண்டாக சேத்தி சாந்த் என கொண்டாடப்படுகிறது. சிந்து தேச ஹிந்துக்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் அந்நிய  ஆக்கிரமிப்பாளர் கீழ் அடிமைப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர். படையெடுப்பாளர்கள் ஹிந்து அரசர்களை தோற்கடித்து அடக்கி ஆண்டனர்.
அதில், ஒருவன்  மீரக் ஷா. ஹிந்துக்களை மதம் மாற கட்டாயப்படுத்தி மதம் மாறு, இல்லாவிட்டால், மரண தண்டனை என பயமுறுத்தினான். பீதியடைந்த மக்கள் சிறிது கால அவகாசம் வேண்டினர். ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளை நினைவு கூர்ந்து, புனித சிந்து நதிக் கரையில் நாற்பது நாட்கள் தொடர்ந்து வழிபட்டனர். நாற்பத்தி ஒன்றாம் நாள் வானிலிருந்து வந்த அசரீரி குரல், மாதா தேவகிக்கு ஒரு தெய்வீகக் குழந்தை பிறக்குமென்றும், அக்குழந்தை உங்களைக் காக்கும் என்றும் கூறியது. நாற்பதாம் நாள் தவம் ‘சாலீஹோ சாஹிப்’ எனக் கொண்டாடப்படுகிறது.
சித்திரை மாதம், மாதா தேவகி ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அந்தப் புனித நாள் தான் சேத்தி சாந்த்  விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அக்குழந்தையை தொட்டிலில் இட்டதும், தொட்டில் தானாகவே ஆடிய அதிசயத்தால் ‘ஜூலேலால்’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. குழந்தை பிறந்த தகவலறிந்த மீரக் ஷா தனது அமைச்சர் அஹிரியோவை அங்கு அனுப்பி மதம் மாற உத்தரவிட்டான். குழந்தைக்கு விஷம் தோய்ந்த ரோஜாப்பூவை அஹிரியோ கொடுக்க , குழந்தை அதை உதைத்துவிட்டது. மேலும் , அஹிரியோ கண் முன்னாலேயே இளைஞனாகவும், வயோதிகராகவும் தோன்றியது குழந்தை. பிரமித்துப்போன அஹிரியோ தலை வணங்கி ஜூலேலாலின் பக்தரானார்.
குரு கோரக்நாதரிடம், குருகுலக் கல்விப்    பயின்ற ஜூலேலாலுக்கு ‘அலக் நிரஞ்சன்’ என்ற  மந்திரோபதேசம் செய்தார் குரு. பலவானாகவும், புத்திமானாகவும் திரும்பிய ஜூலேலால் பல அதிசயங்களை நிகழ்த்தினார். மக்களின் நம்பிக்கை உறுதி பெற்றது. மீண்டும்  மீரக் ஷா ஜூலேலாலைத் துன்புறுத்த முயன்றபோது அவனுடைய அரசவையில் வெள்ளம் புகுந்தது, அரண்மனை தீப்பற்றியது என பல அசம்பாவிதங்கள் நடந்தன. ‘எத்தனை பெயர்களில் விளித்தாலும், வணங்கினாலும் இறைவன் ஒருவனே. உன் அராஜகத்தை நிறுத்து’ என முழங்கினார் ஜூலேலால். பயந்துபோன மீரக் ஷா மன்னிப்பு கோரினான். ஹிந்துக்கள் அமைதியாக வாழ வகை செய்தான்.
ஜூலேலாலுக்கென பிரத்யேகமாக லால் ஸாயி மந்திர் உள்ளது. இங்கு பஞ்ச பூதங்களில் ஒன்றான ஜோதி (அக்னி) வழிபாடும் ஜல (நீர்) வழிபாடும் நடக்கிறது. ஜூலேலால் ஜெயந்தி என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல. நம்பிக்கை, உறுதி, ஒற்றுமை, இறைவன் ஒருவனே என்ற சத்தியத்தின் வெளிப்பாடு. சங்கத்தில்  பாடும் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் ஜூலேலாலையும் நாம் வணங்குகிறோமே! 