வாழ்க்கையின் யதார்த்தம்

குரு ஒருவர் திருமணமான ஒரு இளைஞனை தனது சொற்பொழிவின்போது எழுந்து நிற்கச் சொன்னார். “நீங்கள் கடற்கரையில் நடக்கும்போது ஒரு அழகான இளம் பெண் முன்னால் வருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?” அந்த இளைஞன் “அவளை பார்ப்பேன்” என பதிலளித்தான். “அந்தப் பெண் சென்ற பிறகு, திரும்பிப் பார்ப்பீர்களா?” என கேட்டதற்கு “ஆம், என் மனைவி அருகில் இல்லை என்றால்” என சொன்னான். கூட்டத்தில் அனைவரும் சிரித்தனர். குருஜி “அதனை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள்?” என கேட்க, “இன்னொரு அழகான முகம் தோன்றும்வரை அல்லது 10 நிமிடங்கள்” என்று பதிலளித்தான்.

குரு அந்த இளைஞனிடம், இப்போது கற்பனை செய்யுங்கள், நீங்கள் செல்லும்போது, ​​நான் உங்களிடம் ஒரு புத்தகப் பொட்டலத்தைக் கொடுக்கிறேன். உங்கள் வீட்டிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள ஒருவரிடம் அதனை கொடுக்க சொல்கிறேன். நீங்கள் செல்கிறீர்கள். அவருடைய வீட்டைப் பார்த்தாலே அவர் கோடீஸ்வரர் என்பது தெரிகிறது. புத்தகப் பொட்டலத்துடன் நீங்கள் வந்த தகவலை அனுப்பிவிட்டீர்கள். அந்த பெரிய மனிதர், தானே வெளியே வந்து உங்களை வரவேற்கிறார். புத்தகங்களை பெற்றுக் கொள்கிறார், வீட்டிற்குள் வரும்படி கனிவுடன் அழைக்கிறார், உங்கள் அருகில் அமர்ந்து உங்களுக்கு சூடான தேநீர், உணவு கொடுக்கிறார். புத்தகங்களை கொண்டு சேர்த்ததற்கு நன்றி கூறுகிறார்.

நீங்கள் திரும்பும்போது, ​அவர் உங்களிடம் “நீங்கள் எப்படி வந்தீர்கள்?” என்றுகேட்கிறார். நீங்கள் உள்ளூர் ரயிலில் என்று சொல்கிறீர்கள். உடனே அவர் தனது டிரைவரிடம் தனது சொகுசு காரில் உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடையும்போது, உங்களை அலைபேசியில் அழைத்து “தம்பி வசதியாக சென்று சேர்ந்தீர்களா?” என கேட்கிறார்.

குருஜி கேட்டார், சரி, இப்போது சொல்லுங்கள் “அந்த மனிதரை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள்?” அந்த இளைஞன் “குருஜி! பெரிய கோடீஸ்வரராக இருந்தும் பணிவான, அன்பான அவரின் நடத்தைக்காக அவரை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்” என்றான். கூட்டத்தினரிடம் பேசிய குரு, “இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். அழகான முகம் குறுகிய காலம் நினைவில் இருக்கும், ஆனால் அழகான நடத்தை, வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். உங்கள் உடலின் அழகை விட, நடத்தையின் அழகில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை சுவாரஸ்யமாகவும், மறக்க முடியாத அழகாகவும் மற்றவர்களுக்கு உத்வேகமாகவும் மாறும்” என்றார்.