வாக்காளர்கள் தீவிர திருத்தப்பட்டியல்

தமிழகம், கேரளா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகிய 12 மாநிலங்களில், ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி துவங்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதன்படி பி.எல்.ஓ (பூத் லெவல் ஆபீசர்) ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர் விபரங்களை சரி பார்ப்பார்கள். மேலும் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தேர்தல் பதிவு அலுவலர் நியமிக்கப்படுவார். அவர்தான் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியல், வாக்காளர்கள் திருத்தம், வாக்காளர்கள் நீக்கம், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், ஆட்சேபனைகள், கோரிக்கைகள் இருந்தால் அது குறித்தும் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.
இதன் முக்கிய நோக்கம், போலி வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் ஆகியோரை பட்டியலில் இருந்து நீக்குவது, தகுதியான புதிய வாக்காளர்களை பட்டியலில் இணைப்பது, பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தகுதியான வாக்காளர்கள்தான் என்பதை உறுதி செய்வது.

மக்கள் தொகை வளர்ச்சியின் பொருட்டு புதிய வாக்காளர்கள் தகுதியின் அடிப்படையில் சேர்க்க, தீவிர திருத்தப்பணி மிகவும் இன்றியமையாதது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து “தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை சந்தேகத்திற்குரியதாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதற்கிடையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை செய்ய திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்துள்ளது.

முறையற்ற குடியேற்றத்தை தடுக்க, இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் அவசியம் என்பதை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏன் உணரவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, வாக்காளர் பட்டியல்களில் இறந்த வாக்காளர்களை, மேலும் இடம் பெயர்ந்த வாக்காளர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தது மட்டுமல்லாமல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டையும் நாடினார் ஸ்டாலின் என்பது அவருக்கு நினைவு இல்லையா?

காங்கிரஸ் ஆட்சியில் வாக்காளர் திருத்தப்பணி 10 முறைக்கு மேல் நடந்ததை மறைத்து, இதுவரை இப்பேர்பட்ட பணி நடந்ததில்லை என்பதை போல் பேசி, உண்மையை மறைக்க முயல்கிறாரா?
2017ல், ஸ்டாலின் வாக்காளர் பட்டியல்களை திருத்தக் கோரி, ஆதார் அட்டைகளை வாக்காளர் அடையாள அட்டைகளுடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் விண்ணப்பித்ததை மறந்து விட்டாரா?

தமிழகத்தில் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் மாநில அரசாங்கத்தின் அலுவலர்கள், அதிகாரிகள்தான் என தெரிந்திருந்தும், சொந்த மாநில அரசு பணியாளர்களையே சந்தேகிறாரா ஸ்டாலின்?