வனவாசி என மக்களின் நலனுக்காக செயல்படும் வனவாசி சேவா கேந்திரம்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் பழங்குடியின மக்களின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காக செயல்படும் வனவாசி சேவா கேந்திரம் பற்றி அறிவோம்…

 

“வனவாசி கல்யாண் ஆஸ்ரம்” என்பது தமிழ்நாட்டில் “வனவாசி சேவா கேந்திரம்” என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது, பழங்குடியின மக்களின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காக செயல்படும்.

எப்போது துவக்கப்பட்டது?
1947-ல் பாரத நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அன்றைய மத்தியப் பிரதேசம் (இன்றைய சத்தீஸ்கர்) ஜஷ்பூர் மலைப்பகுதிக்குச் சென்ற அப்போதைய முதல்வர் பண்டிட் ரவிசங்கர் சுக்லாவிற்கு எதிராக சில விஷமிகள் கருப்புக் கொடி காட்டி, ‘முதல்வரே, இயேசு நாட்டை விட்டு வெளியே போ! இயேசு நாட்டிற்கு ஜெய்! இயேசுவிற்கு ஜெய்!’ என கோஷமிட்டனர். இதைக் கண்டு அதிர்ந்து போன முதல்வர் ரவிசங்கர் சுக்லா, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் மற்றும் ஆதிம்சாதி சேவா சங்கத் தலைவர் டக்கர் பாபா ஆகியோர் இது நமது பாரதத்திற்கு பெரிய ஆபத்தாக முடியும் என்று கருதினர். எனவே அரசாங்கத்தின் சார்பாக மகாராஷ்ட்ராவில் வக்கீலாக இருந்த ஸ்வயம்சேவக் பாளாசாகேப் தேஷ்பாண்டே அவர்களை, ஜஷ்பூர் பகுதியின் பின்தங்கிய மக்கள் முன்னேற்ற திட்டத்தின் அதிகாரியாக நியமித்தது. அதன்பின் ஒரே வருடத்தில் நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளைத் துவக்கி, அம்மக்களை தேசிய நீரோட்டத்தில் தேஷ்பாண்டே அவர்கள் இணையச் செய்தார். ஆனால் சர்தார் வல்லபாய் படேல், டக்கர்பாபா ஆகியோரின் அகால மரணத்திற்குப் பிறகு அரசாங்க உதவிகள் நிறுத்தப்பட்டது. ஆனால் இப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள வனவாசி மக்களை ஒருங்கிணைப்பதற்காகவும் பரமபூஜனீய குருஜி அவர்களின் ஆலோசனைப்படி 1952-ல் ‘அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆஸ்ரம் ஜஷ்பூரில் துவங்கப்பட்டது.

அதன் நோக்கம்…
வனவாசி மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைக் காப்பாற்றி அவர்களை தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிக்க நினைக்கும் கிறிஸ்தவ, தேச விரோத, பிரிவினைவாதிகளின் சதியை முறியடித்து, வனவாசி மக்களை எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்வதே தனது நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.


தமிழகத்தில் எப்போது துவங்கப்பட்டது?
தமிழகத்தில் துவங்குவதற்கு பல மலைப்பகுதிகள் ஆலோசிக்கப்பட்டு, இறுதியாக சேலம் ஜில்லா ஆத்தூர் தாலுகா கல்வராயன்மலை கருமந்துறையில் துவங்க முடிவு செய்யப்பட்டது. அப்போதைய பிராந்த பிரச்சாரக் சூர்யநாராயண ராவ் ஜி அறிவுரைப்படி, 1980ல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சம்பு சங்கர் அவர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட பணிக்கப்பட்டார். அதன்பின் 1980 ஜூன் 2-ம் தேதி, ஏழு மாணவர்களைக் கொண்ட “ஸ்ரீராம் மாணவர் விடுதி” சிறிய விடுதியாக ‘வனவாசி சேவா கேந்திரம் தமிழ்நாடு’ என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டது. சேலத்தில் பிரபல டாக்டர் ஆர்.கிருஷ்ணன் செட்டி அவர்களைத் தலைவராகக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் ஜில்லா சங்கசாலக் சி.ரங்கநாதன், ஜவஹர்லால் மற்றும் டி.எஸ்.வரதராஜன் ஆகியோரைக் கொண்ட டிரஸ்ட் அமைக்கப்பட்டது.

முதலாம் ஆண்டில் ஏழு மாணவர்களுடன் தொடங்கப்பட்ட விடுதியில், அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல மாணவர்கள், விடுதியில் சேரத் தொடங்கினர். இந்த மாணவர்கள் அரசுப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றனர்; சிலர் பள்ளியில் முதலிடங்களையும் பெற்றனர்.

பள்ளியில் படிப்பதோடு, அவர்கள் தினமும் மாலை நேரங்களில் வனவாசி சேவா கேந்திரம் நடத்திய “ஷாகா”வில் பங்கேற்றனர். நாட்டுப்பற்று, ஆன்மீகம், பண்பாடு, ஒழுக்கம் மற்றும் கல்வி முதலிய பல தளங்களில் மாணவர்களின் அறிவுத்திறன் இங்கே வளர்க்கப்பட்டன. இதன் விளைவாக வனவாசி சேவா கேந்திர அமைப்பு குறித்த விழிப்புணர்வு மலைப்பகுதி முழுவதும் பரவியது. ஷாகா பற்றிய தகவல் பரவியதன் மூலம், பல மாணவர்களும், கிராமவாசிகளும் இதில் பங்குகொண்டனர்.

நிர்வாகிகளின் பெரு முயற்சியால் கருமந்துறையில் மேம்படுத்தப்பட்டக் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனால் மேலும் பல மாணவர்கள் விடுதியில் சேர்ந்தனர். வனவாசி சேவா கேந்திரம் மூலம் பல்வேறு கலைகளை மாணவர்கள் கற்றனர். இங்கே தோட்டக்கலையும் கற்பிக்கப்பட்டதால், மாணவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறி, பழங்களைத் தாங்களே வளர்த்துக் கொண்டு பயனடைந்தனர்.


1991 ஆம் ஆண்டு மாணவிகளுக்காக ஒரு தனியார் பள்ளியும் தொடங்கப்பட்டது. பெண்கள் பிரிவான ‘சமிதி’, சுலோச்சனா தலைமையில், கிராமத்துக்கு கிராமம் பயணித்து, பெண்களுடன் நல்லுறவை வளர்த்தது. “பால சன்ஸ்கார் கேந்திரம்” மற்றும் “இரவுப் பள்ளி” இதே சமயத்தில் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் பிரதிநிதிகளைக் கொண்ட மருத்துவ முதலுதவிக் குழுக்களும் அமைக்கப்பட்டன. அவர்கள் அடிப்படை மருத்துவப் பயிற்சியைப் பெற்று, கிராம மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.

அருகிலுள்ள பல கிராமங்களிலிருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஆகியோர் பௌர்ணமி நாட்களில் நிகழ்த்தப்பட்ட சிறப்பு விளக்கு பூஜைகளிலும், கிருஷ்ண ஜெயந்தி, ரக்ஷா பந்தன், ராம நவமி போன்ற பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் பங்கேற்றனர்.

பொங்கல் பண்டிகையானது, வனவாசி சேவா கேந்திரத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது; இதில் மாணவர்களுடன் பல கிராமவாசிகளும் உற்சாகமாக பங்கேற்கிறார்கள்.
ஐயப்பன் தரிசனத்திற்காக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், மகர சங்கராந்தி காலத்தில் பள்ளி வளாகத்தில் பஜனை மற்றும் பூஜைகளை நடத்துவர். இதிலும் பல கிராமவாசிகள் பங்கேற்பர்.
`வனவாசி சேவா கேந்திரம்’ ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளையும், ரங்கோலி போன்ற பிற போட்டிகளையும் நடத்துகிறது.

மக்களுக்கு உதவ மருத்துவ முகாம்கள் தவறாமல் நடைபெற்று வருகின்றன. 1997 ஆம் ஆண்டு, “தையல் பயிற்சி பள்ளி” மற்றும் கைத்தொழில் பயிற்சிகள் (பை தயாரித்தல், மாலை தயாரித்தல் போன்றவை) தொடங்கப்பட்டன. இதன் மூலம் பல கிராமப் பெண்கள் பயனடைந்தனர்.
1994 ஆம் ஆண்டு, “இளைய இராமர் பாலர் பள்ளி” என்ற பெயரில் ஒரு பால்வாடி தொடங்கப்பட்டது. பின்னர் அது “சரஸ்வதி வித்யா மந்திர்” என்ற பெயரில், தொடக்கப் பள்ளியாக மாற்றப்பட்டது.

பச்ச பலாத்தி வலவு (கருமந்துறையிலிருந்து சுமார் 8 கி.மீ.) என்ற இடத்தில் இருந்து வந்த மாணவர்கள், தினமும் பள்ளிக்கு வருவதில் சிரமம் அனுபவித்தனர். எனவே, “ஓராசிரியர் பள்ளி” ஒன்று தொடங்கப்பட்டது. நன்கொடையாளர்களின் உதவியுடன் நவம்பட்டு பகுதியில் நிலம் வாங்கப்பட்டு, ஒரு சிறிய பள்ளி கட்டப்பட்டது. 2004 ஆம் ஆண்டு, வெள்ளிமலை (கருமந்துறையிலிருந்து சுமார் 10 கி.மீ.) பகுதியில் மற்றொரு பள்ளியும் தொடங்கப்பட்டது.
கருமந்துறை விடுதியில் படித்த விமல்ராஜ் என்ற மாணவர், தற்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார். அகில பாரத அளவில் நடக்கும் வனவாசி மக்களுக்கான கபடி, நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் “கிராம கல்வி மையம்” என்ற பெயரில் மாலை நேர வகுப்புகள், நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

விடுதியில் படித்த மாணவர் சதீஷ் தற்போது சங்க பிரச்சாரக்காக இருக்கிறார். இந்த ஆண்டு `சரஸ்வதி வித்யா மந்திர்’ பள்ளியில் பயின்ற ராஜேஸ்வரி என்ற மாணவி, ஜே.ஈ.ஈ தேர்வில் வெற்றி பெற்று, தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் பயின்று வருகிறார்.

வனவாசி சேவா கேந்திரம், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டதன் வெள்ளி விழா, 2005 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்றது. இதில் வனவாசி மக்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மலைப் பகுதிகளைச் சேர்ந்த 3,000 மக்கள் உட்பட 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

-− கா.சுதர்சன்,

முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர்,

வனவாசி சேவா கேந்திரம்