தெய்வீகத்தின் மூலம் தேசியத்தை வளர்க்க விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய கந்த சஷ்டி வேல் பூஜை

கந்த சஷ்டி காலத்தில் விசுவ ஹிந்து பரிஷத் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் வேல் பூஜை நிகழ்ச்சிகளை நடத்தியது. கந்த சஷ்டியின் இறுதி மூன்று நாட்களான சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய தினங்களில் (அக்டோபர் 25, 26,27) நடத்தப்பட்டது.

அக்டோபர் 6ல், அறுபடை முருகன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். பழமுதிர்ச்சோலையில் ஆர்.எஸ்.எஸ் தென்பாரத செயற்குழு உறுப்பினர் ஆனந்த், திருப்பரங்குன்றம், திருச்செந்தூரில் நடிகர் ரஞ்சித், பழனியில் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சுவாமிமலையில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, திருத்தணியில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முதல் நாள் அக்டோபர் 25 சனிக்கிழமை அன்று, வேல் பிரதிஷ்டை செய்து வேலுக்கு அபிஷேகம் நடந்தது. வேல் பூஜைக்கு வந்திருந்த அனைவரும், அவரவர் வீட்டிலிருந்து எடுத்து வந்த அபிஷேகப் பொருட்களை குடும்ப நலப் பிரார்த்தனையாக வைத்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான குடும்பமாக வாழ வேண்டும் என எண்ணி, குடும்பத்துடன் அவரவர் திருக்கரங்களாலே அபிஷேகம் செய்தனர்.

நிகழ்ச்சியின் இரண்டாம் நாள், இயற்கையைப் பேணும் விதமாக பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய “காமதேனு எனப்படும் கோமாதா” வழிபாடு நடந்தது. மண், நீர், காற்று, விலங்குகள், பறவைகள், மரங்கள் என “இயற்கையைப் பாதுகாப்பது என் பொறுப்பு” என்ற உறுதியை ஏற்கும் விதமாக, கோமாதா பூஜை நடந்தது.

பூஜையின் மூன்றாம் நாள், கந்தனின் கோவில்கள் அனைத்திலும் நடக்கும் சூரசம்ஹார நிகழ்விற்குப் பிறகு படிக்கப்படும் கந்த சஷ்டி கவசத்தை, வேலுக்கு முன்பு அமர்ந்து, மக்கள் கந்த சஷ்டி கவசம் படித்தனர்.

சமுதாய வேறுபாடு இன்றி, அனைத்து மக்களும் தங்கள் கரங்களால் வேல் பூஜை, கோமாதா பூஜை செய்தது சமுதாய நல்லிணக்கத்திற்கு ஒரு துவக்கமாக அமைந்தது. விழாவில் குடும்ப நலன், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம், நமது தர்மத்தைப் பாதுகாப்பது போன்ற சிந்தனைகளை மக்களின் முன்னிறுத்தி சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் பணி இந்த மூன்று நாட்களுடன் நிற்காமல், மாதா மாதம் வரக்கூடிய வளர்பிறை, தேய்பிறை சஷ்டியின் போது, வேல் பூஜை நடந்த எல்லா இடங்களிலும், புதிய இடங்களிலும் அந்தந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து, கந்த சஷ்டி கவசம் பாடி, ஊர் மக்கள் அனைவரின் நலனுக்காக பிரார்த்தனை செய்வது என்ற திட்டத்துடன், விழா இனிதே நிறைவு பெற்றது.
விசுவ ஹிந்து பரிஷத் ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியை கந்த சஷ்டி நேரத்தில் நடத்தி ஹிந்து சமுதாயத்தின் ஒற்றுமைக்காகவும், ஹிந்து தர்மத்தின் மேன்மைக்காகவும் பாடுபட திட்டமிட்டுள்ளது.