வதந்தி

அந்த முதியவர் பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர், மற்றவர்களை குறைகூறுபவர். அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான். அவனுக்கு ‘ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது காரை ஓட்ட அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான்.

இவருக்கு அவன் மேல் சந்தேகம். திடீரென்று நள்ளிரவில் போகிறான், காலையில் திரும்புகிறான். மாலையில் போகிறான், இரவில் திரும்புகிறான். ஒருவேளை திருடனாக இருப்பானோ? என நினைத்தார். அக்கம்பக்கத்தாரிடம், காய்கறி விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார். ‘அவன் திருடன்’ என்கிற வதந்தி பரவியது. ஒருகட்டத்தில், போலீஸாரே சந்தேகப்பட்டு அவனை கைதுசெய்தனர். ஆனால், அவன் அப்பாவி என்று தெரிந்ததும் விட்டுவிட்டார்கள்.

அந்த டிரைவருக்கோ மன உளைச்சல். இதற்கெல்லாம் பெரியவர்தானே காரணம் என கோபம் எழுந்தது. பெரியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் முதியவர், “நான் யாரையும் காயப்படுத்தவில்லை. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன், அவ்வளவுதான்” என்றார். டிரைவரோ, தன் நிலையை விளக்கினான். நீதிபதிக்கு பெரியவரின் வீம்பு புரிந்தது. பெரியவரை அழைத்து, “உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்னதை எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து வழியில் போட்டுக்கொண்டேச் செல்லுங்கள். நாளை காலையில் வாருங்கள்” என்றார்.

அடுத்த நாள் அந்த இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி, முதியவரை அழைத்து “நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகளை சேகரித்துக் கொண்டு வாருங்கள். அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன்” என்றார். “அது எப்படி ஐயா முடியும், அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து போயிருக்கும். அதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்றார் பெரியவர்.

“முடியாதல்லவா? அப்படித் தான்… நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை. வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை. நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் வார்த்தைகளுக்கு அடிமைகளாகாமல் இருப்போம். வதந்தி ஒரு திருடனை விட மோசமானது” என அறிவுரை சொன்னார்.

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும். நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை, இன்றைய சூழலில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம்.