‘லோக்சபா தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்’

கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில் தனலட்சுமி ஆறுசாமி பெயரில் பல்நோக்கு அரங்கு கட்டப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்து, தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:

நமது நாடு தலைசிறந்த பிரதமரான நரேந்திர மோடியை தலைமையாகக் கொண்டு செயல்படுகிறது. மிகப்பெரிய நோக்கத்தை செயல்படுத்த எண்ண வேண்டும். அந்த நோக்கம் நிறைவேற கடினமாக பாடுபட வேண்டும். இன்று இந்தியா குறித்த உலக மக்களின் பார்வை மாறிவிட்டது. இந்தியா இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.

உலக பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாம் நிலையில் உள்ள இந்தியா, விரைவில் மூன்றாம் நிலைக்கு முன்னேறும். இன்றைய டிஜிட்டல் இந்தியா வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சார்யமாக பார்க்கின்றன. எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்தியர் என்றால், நம்மை பெருமையுடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற உடன், பெண்களின் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து வருகிறது. பிரதம மந்திரி நரேந்திர மோடியால் துவக்கப்பட்ட முத்ரா லோன் கடன் உதவி திட்டத்தில், 40 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். இதில், 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் ஒரு லட்சத்து, 20 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 80 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அறிவியல் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மகத்தானதாக உயர்ந்துள்ளது.

வரும் லோக்சபா தேர்தலில் இளைஞர்கள் உள்ளிட்ட ஓட்டளிக்கும் தகுதி உடைய அனைவரும் தவறாமல் ஓட்டளித்து, 100 சதவீதம் ஓட்டுக்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, தமிழக கவர்னர் ரவி பேசினார். நிகழ்ச்சியில், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி செயலர் வாசுகி, கல்லூரி மேலாண்மை குழு தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் டாக்டர் பரமசிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.