பாரதத்தில் தபால் சேவை தொடங்கப்பட்டு, 170 ஆண்டுகள் ஆகி விட்டன. மிகவும் பழமையான பொதுத்துறை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். மக்களோடு நேரடித் தொடர்பில் இருந்து வந்த, இருந்து வரும் துறை இதுதான் என்றால், அது மிகையன்று.
மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசாணி 2026ம் நிதியாண்டில் `இந்தியா போஸ்ட்’ ரூ.15,373 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைக் காட்டிலும், கூடுதலாக ரூ.2,100 கோடி ஈட்டப்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஆண்டுதோறும் வளர்ச்சி ரூ.200 கோடி முதல், ரூ.300 கோடி வரை மட்டுமே இருந்தது. இப்போது பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.
2016ம் ஆண்டில், ஆண்டு வருவாய் ரூ.11,500 கோடி என்ற அளவிலேயே இருந்தது. எண்ம ரீதியான நவீன மயமாக்கல், லாஜிஸ்ட்டிக் விரிவாக்கம் உள்ளிட்டவை காரணமாக வருவாய் அதிகரித்துள்ளது என்பதை குறிப்பிட்டுள்ள சந்திரசேகர் பெம்மசாணி, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் அரும்பணியைப் பாராட்டினார். குறுகிய காலத்தில் அதிக அளவில் வளர்ச்சி பெற்றுள்ளதற்கு பார்சல், லாஜிஸ்ட்டிக் வர்த்தகமே காரணம். இது 2026ம் நிதியாண்டில், ஏறத்தாழ 70 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இ−காமர்ஸ் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதும் வருவாயை கணிசமாக உயர்த்தியுள்ளது. முன்பெல்லாம் பார்சல் மூலமாக, ஆண்டுக்கு ரூ.600 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. இப்போது இது ஏறத்தாழ ரூ.10,000 கோடியை எட்டி விட்டது.
ஓ.டி.பி. அடிப்படையிலான டெலிவரிகள், யு.பி.ஐ. அடிப்படையிலான பரிவர்த்தனை போன்றவையும் வருவாய் அதிகரிப்புக்கு வழிவகை செய்துள்ளன. தனியார் கூரியர் நிறுவனங்கள்தான், துரிதமாக தபாலை பட்டுவாடா செய்ய முடியும் என்ற மாயையை தகர்த்தெறியும் வகையில் இந்தியா போஸ்ட் சார்பில் `ஸ்பீடு போஸ்ட்’ டெலிவரி அறிமுகப்படுத்துப்பட்டுள்ளது. பாரதத்தில் உள்ள 6 முக்கிய மெட்ரோ நகரங்களில் முதற்கட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இரண்டு வகைப்பாடுகளைக் கொண்டது. முதல் வகைப்பாட்டின் படி, 24 மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும். இரண்டாவது வகைப்பாட்டின் படி 48 மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும்.
ஐ.டி 2.0 என்ற நவீன திட்டத்தை அமல்படுத்த முற்பட்டுள்ளதால், துரித சேவை உறுதிப்படுத்தப்படும். இதற்காக ரூ.5,800 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இன்சூரன்ஸ் பத்திரங்களை வாங்குவது, பணத்தை எடுப்பது உள்ளிட்டவை எளிமையாக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள், கணக்கு முதிர்ச்சி அடைந்து விட்டால் அஞ்சலகத்துக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் வாயிலாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
கிராமங்களில் அஞ்சல் சேவையை விரிவுபடுத்துவது இப்போதைய சூழ்நிலையில் எளிதல்ல. எனவே, இதர சேவைகளை வழங்க முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போஸ்டல் சேவிங்க் அக்கெளண்ட்சுக்கு சுமார் 4 சதவீதம் மட்டுமே வட்டி அளிக்கப்படுகிறது. இதை சற்று உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாக நேரடியாக பயன்பெறுவோருக்கு ஆண்டு தோறும் ரூ.45,000 கோடி தபால் துறை ரீதியான பட்டுவாடா மேற்கொள்ளப்படுகிறது. பெண்களின் நலனுக்காக சுகன்யா சம்ரிதி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 3.8 கோடி பெண்கள் சேர்ந்துள்ளார்கள். மேலும் சுய உதவிக்குழுக்களுக்கு, அஞ்சலக ரீதியாக தேவையான ஊக்குவிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
எந்த நிறுவனமும் தொடர்ந்து லாபகரமாக இயங்க வேண்டுமானால், வாடிக்கையாளர்களின் திருப்திதான் அடிப்படையாக இருக்க முடியும். இதை கருத்தில் கொண்டு நிதி சேவையில் மனித நேயம் சார்ந்த பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகரங்களில் உள்ள அஞ்சலகங்களை மேம்படுத்த சுமார் ரூ.60 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. இங்கு அதிநவீன வசதிகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் திருப்தி அடைகின்றனர்.
170 ஆண்டு கால வரலாற்றில் சூழ்நிலைக்கேற்ப தன்னை அஞ்சல் துறை தகவமைத்துக் கொண்டுள்ளது. மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதே விவேகமான நடவடிக்கையாக இருக்க முடியும். இதில் அஞ்சல் துறை முன்னணியில் உள்ளது. தபால்களுக்கு வேலையில்லாமல் போய் விட்டது. இதனால்தான் பார்சல், லாஜிஸ்ட்டிக்ஸ் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுகிறது.
அஞ்சல் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது அஞ்சல் துறைக்கு மட்டுமே உரியது என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இதை பார்க்கக்கூடாது. எங்கெல்லாம் புதிய வாயில்கள் திறக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அஞ்சல் துறையின் முன்னுதாரணமான செயல்பாடுகள், மற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விழி திறப்பானாக அமையும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
கட்டுரையாளர் : செய்தியாளர் – ஷஷாங்க் குமார் துவிவேதி
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி