ஸ்ரீராம ஜென்ம பூமி வழக்கு தொடுத்தவர்களில் முக்கிய நபரான இக்பால் அன்ஸாரி, “ஸ்ரீராமர் கோயிலுக்கு நன் கொடை வழங்குவதை நான் ஆதரிக்கிறேன், நானும் நன்கொடை அளிப்பேன். மற்றவர்களும் தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப நன்கொடை வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். தஹிரா அறக்கட்டளையின் அமைப்பாளரான ஜஹாரா பேகம், அயோத்தியில் அமையவுள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கு நிதியளிக்க தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் வலியுறுத்தி வருகிறார். “ராமர் பிறந்த ஒரு தேசத்தில் வாழும் நாம் பாக்கியவான்கள். நம் காலத்தில் கோயில் கட்டப்படப்போகிறது என்பது நமக்கெல்லாம் சந்தோஷம். பகவான் ராமர் தர்மத்தை வாழ்க்கை முறையாகக் கற்பித்ததோடு அதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்து உலகிற்கு வழிகாட்டியிருக்கிறார். நாம் ஒன்றிணைந்து இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்போம். திறந்த மனத்துடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உதவுவோம்” என ஜஹாரா பேகம் கூறியுள்ளார்.
இதைத்தவிர அயோத்தியில் வாழும் முஸ்லிம்கள் பலரும் நிதியளித்துள்ளனர். டெல்லியில் உள்ள ஹரியானா பவனில் ஸ்ரீ ராமர் கோயிலுக்காக முஸ்லிம்களின் நிதி திரட்டும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலும் முஸ்லிம் சமூகத்தினர் ராமர் கோயிலுக்கு நிதி திரட்டி வழங்க முனைந்துள்ளனர். புனே, ஸ்ரீராம்பூர் தாலுகாவில் உள்ள பெலாப்பூரைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்திற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா, கோவிந்த் தேவ்கிரிஜி மகாராஜிடம் ரூ. 44,111 நிதியை வழங்கினர். அப்போது பேசிய ஹாஜி இஸ்மாயில், “நாங்கள் ஒரு அணில் போல பங்களிக்க முயற்சித்தோம், பெலாப்பூரைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் ராமர் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட வேண்டும். ஒரு நல்ல மத நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். கிராமத்தின் சார்பாக இன்னும் பலர் உதவிகள் செய்ய நாங்கள் முயற்சிப்போம்.” என கூறினார்.