சத்தீஸ்கரைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகியோர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை தலைமையிடமாக வைத்து, மஹாதேவ் என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர்.
இந்த செயலி வாயிலாக பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டிய அவர்கள், அந்த பணத்தை சத்தீஸ்கரில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பரில் சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோர் துபாயில் கைது செய்யப்பட்டனர்.
காங்., மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேலுக்கு, 500 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. சத்தீஸ்கரில், கடந்த சட்டசபை தேர்தலில் புயலை கிளப்பிய இந்த விவகாரம் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்ட விரோதப் பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக, ஒன்பது பேரை அவர்கள் கைது செய்துஉள்ளனர்.
மஹாதேவ் சூதாட்ட செயலி தொடர்பான புகார்களை விசாரிக்க, மும்பை சைபர் கிரைம் போலீசார் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், பாலிவுட் நடிகர் சாஹில் கானிடம் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, இந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில், நடிகர் சாஹில் கானை, சத்தீஸ்கரின் ஜக்தல்பூர் என்ற இடத்தில், மும்பை சைபர் கிரைம் சிறப்பு விசாரணை குழுவினர் நேற்று கைது செய்தனர். அவரை மும்பைக்கு அழைத்து வந்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படுவர் என கூறப்படுகிறது.