நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து
வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில், மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு
பணி செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்த வாரம் மதமாற்றச் செயல்களிலிருந்து ஹிந்து தர்மத்தை பாதுகாக்கும் தர்ம ரக்ஷண ஸமிதி
பற்றி அறிவோம்…
பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் அருளால், பத்மவிபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமண்யம், நிறுவன ஆலோசகர் எஸ்.குருமூர்த்தி மற்றும் சென்னை நகரின் முக்கிய நபர்களின் முன்னிலையில், தர்ம ரக்ஷண ஸமிதி தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், மதமாற்றச் செயல்களிலிருந்து ஹிந்து தர்மத்தை பாதுகாப்பது.
1999 டிசம்பரில், போப் நமது நாட்டிற்கு வந்தபோது, “மூன்றாவது மில்லேனியத்தில் ஆசியாவில் சிலுவையை நிலைநிறுத்த வேண்டும்” என்றார். இது பாரதத்தை நோக்கிய கருத்தாகக் கருதப்பட்டது. சிலுவையை நிலைநிறுத்துவது என்பது, அவர்களது பார்வையில், நாடுகளை ஆன்மிக ரீதியாக வெல்வதை குறிக்கும். இதற்காக கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டனர்.
மதமாற்றம் – ஒரு வன்முறை
ஒருவர் மதம் மாறும்போது, பாரம்பரிய பழக்கவழக்கங்களிலிருந்து அவர் விலகுகிறார். இது குடும்பத்தினருக்கும், சமூகத்தினருக்கும் மனவேதனையை உண்டாக்குகிறது. இவ்வாறு புண்படுத்துவது ஹிம்சையாகும். இது ஒரு வன்முறை. ஒருவரின் பழைய மதத்தை இழிவுபடுத்தாமல், மதமாற்றம் நடைபெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஹிந்துக்களிடையே, தமது மதத்தை பாதுகாக்க முடியுமா? என்ற அச்சம் உருவாகிறது. இதுவும் ஒருவிதமான தீவிரவாதம் தான்.
எல்லா மதங்களும் ஒன்றல்ல
“அனைத்து மதங்களும் ஒரே இலக்கை அடைகின்றன” என்ற கருத்து பொதுவாக பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. ஹிந்துக்கள் வேத பார்வையின் அடிப்படையில் அனைத்து வழிபாடுகளையும் ஏற்றுக் கொண்டாலும், அனைத்து மதங்களும் ஒரே கருத்தை கூறுகின்றன என்று பொருளல்ல. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் வேத பார்வைக்கு வெளியானவை.
ஈஸ்வரத் தத்துவம்
ஈஸ்வரன் என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு பகவான் என்று பொருள். வேதம் “ஈசவாஸ்யம் இதம் சர்வம்” என்று கூறுகிறது – உலகிலுள்ள அனைத்தும் இறைவனின் வெளிப்பாடு. கடவுள் படைப்பவர் மட்டுமல்ல, அவரே படைப்பாகவும் உள்ளார். இதுவே பாரதத்தின் ஆன்மிக மற்றும் தர்ம கலாச்சாரத்தின் அடித்தளமாகும். இது உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதையையும், அன்னை இயற்கைக்கு வணக்கத்தையும் ஊக்குவிக்கிறது. கிறிஸ்தவமும், இஸ்லாமும் “இங்குள்ள அனைத்தும் ஈஸ்வரனே” என்கின்ற வேத பார்வையின் உலகளாவிய உண்மைக்கு எதிரானவை.
பாரதத்தின் மகிமை
பாரதம் ஒரு உயிரோடு வாழும் ஜீவனாகும். நமது வேதங்கள், நமது பகவத்கீதை, நமது இலக்கியம், கலை, இசை, வாழ்க்கை முறை ஆகிய அனைத்தும் புனிதமானவை. இத்தகைய கலாச்சாரத்தை பாதுகாப்பது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையாகும்.
தேசம் – தெய்வம் – தர்மம்
ஹிந்து தேசம், ஹிந்து கடவுள்கள், ஹிந்து தர்மம் – இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. சனாதன தர்மத்தின் ஒருங்கிணைந்த அம்சங்களாக இவை உள்ளன. ஒன்றை இழந்தால் மற்றவை பாதிக்கப்படும். எனவே தெய்வபக்தியை, தேசபக்தியாக மாற்றும் உணர்வு வளர்க்கப்பட வேண்டும்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவத்தை அனுஷ்டித்தாரா?
2013ஆம் ஆண்டு அர்ஷ வித்யா குருகுலம் ஆணைகட்டியில் அறிவாளிகளின் கூட்டத்தில் பூஜ்ய ஸ்வாமிஜி ஸ்ரீ ராமகிருஷ்ணர் குறித்து விளக்கம் அளித்தார், “ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிரம்மத்தை உணர்ந்தவர். எந்த உருவத்திலும் அவர் பிரம்மனை மட்டுமே கண்டார். ஆகையால் அவர் இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ வழிபாட்டை முறையாக அனுஷ்டித்தார் என்று கூறுவது தவறான புரிதல்”.
கோயில், தேவாலயம், மசூதி
கோயில் என்பது சர்ச் அல்லது மசூதியில் இருந்து வேறுபட்டது என்பதை ஹிந்துக்களுக்கு நாம் சொல்ல வேண்டும். கோயில் என்பது இறை சன்னிதி; அது கூட்டம் கூடும் இடமல்ல. கிறிஸ்துவ வழிபாட்டுத் தலம் (சர்ச்) மற்றும் மசூதி பிரார்த்தனைக்கான இடங்கள். இவற்றின் அடிப்படை நோக்கங்கள் வேறுபட்டவை.
உருவ வழிபாட்டின் முக்கியத்துவம்
இந்த படைப்பு பகவானின் வெளிப்பாடாக இருப்பதால், அனைத்து உருவங்களும் அவருடைய உருவங்கள்தான். ஆகையால் ஏதாவது ஒரு உருவத்தில், பகவானை ஆவாஹனம் செய்து பூஜித்து அருள் பெறலாம். ஒருவர் சுயமுயற்சியால் பகவானை வழிபாடு செய்து, அவர் அருளைப் பெறலாம். சில உருவங்களை, நமது பாரம்பரியமே கொடுத்து இருக்கிறது. அந்த உருவங்களை நாம் பகவானாக பார்க்கிறோம். நாம் விநாயகரை காணும்பொழுது, அந்த உருவத்தை பகவானாக ஏற்றுக்கொள்கிறோமே தவிர, அது ஏதோ வித்தியாசமான தலை, வயிறு உடைய உருவமாக பார்ப்பதில்லை.
உங்கள் முன்னோர்கள் போட்டோவில் என்ன இருக்கிறது? அது கருப்பு – வெள்ளை நிறமாக இருக்கிற ஒரு போட்டோ. ஆனால் நீ ஒரு புஷ்பத்தை வைக்கிறாய், ஏன்? உங்களுடைய முன்னோர்கள் மேல் இருக்கிற மரியாதையை காட்டுவதற்குத்தான், அந்த காகிதத்திற்கு அல்ல. அதுபோல மரியாதையும், அன்பும் இல்லையேல் வாழ்வில் ஏதும் இருக்காது.
நமது உருவ வழிபாட்டில் உள்ள உருவத்தை ஸம்ஸ்க்ருதத்தில் “லிங்கா” என்று கூறுகிறோம். “லிங்கம்” என்ற சொல், உயர்ந்த உண்மையை சுட்டிக்காட்டும் சின்னமாகும்.
நமது சாஸ்திரத்தில் கோயில் கட்டுவதற்கும், அதில் பகவானை பிரதிஷ்டை செய்வதற்கும், வழிபாடு செய்வதற்கும், மிக விரிவாக விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளது. கோயிலில் இருக்கும் பகவானுடைய உருவம் “விக்கிரகம்” அல்லது “மூர்த்தி” என்று சொல்லப்படுகிறது. அது வெறும் உருவமல்ல, இறைவனே. இதனை ஹிந்து தர்மத்திற்கு அப்பாற்பட்டவர் அறிந்துகொள்ள முடியாது.
இஸ்ரேல் அரசு ஆதரவுடன், 2008 பிப்ரவரியில், ஜெருசலேம் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில், யூத ரப்பினேட் மற்றும் அறிஞர்கள், “ஹிந்து தர்ம ஆச்சார்யா சபா” உறுப்பினர்களைக் கொண்ட ஹிந்து பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, மதங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை தீர்க்க நேர்மையான உரையாடலின் அவசியத்தை வலியுறுத்தினர்.
ஹிந்துமதம் சிலை வழிபாடு மற்றும் பல தெய்வங்களைப் போற்றுகிறது என்ற நீண்டகால தவறான புரிதலை இந்த வரலாற்றுச் சந்திப்பு தெளிவுபடுத்தியது. அறிவிப்பில், ஹிந்துக்கள் உருவமற்ற பரம்பொருளைத்தான் பல ரூபங்களில் வழிபடுகிறார்கள். அவர்கள் எந்த உருவத்தை நோக்கி வழிபாடு செய்தாலும், அது அந்த பரம்பொருளுக்கே. இதில் இருந்து ஹிந்துக்கள் பல தெய்வங்களையோ, சிலைகளையோ வழிபடுகிறார்கள் என்ற கருத்து தவறானது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டது.
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்பது உலகளாவிய தர்மம். புத்தம், ஜைனம், சீக்கியம் போன்ற மதங்களும் இதன் அடிப்படையில் உருவானவை. இதனை பாதுகாப்பது ஹிந்துக்களின் பொறுப்பு.
தர்மிகள் காப்பாற்றப்பட வேண்டும்
பாரதத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய மக்கள் நம்மில் ஒருபகுதி. அவர்களை மதித்து பாதுகாக்க வேண்டும். அவர்களின் வழிபாட்டு முறையும், நமது வழிபாட்டு முறை போலத்தான். இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த புரிதல் இருந்தால், எந்த வடிவத்திலும் இறைவனை நாம் வழிபட முடியும். அதற்காக திருவிளக்கு பூஜை, மாணவர்களுக்கு சமய வகுப்புகள், நடத்திக் கொண்டு வரும் தர்ம ரக்ஷண ஸமிதி, மத மாற்றத்தை தடுத்து மக்களை நல்வழிப்படுத்துகிறது.
கட்டுரையாளர்: அறங்காவலர்,
தர்ம ரக்ஷண ஸமிதி