மக்களுக்கு சேவை செய்து வரும் பாரத் விகாஸ் பரிஷத்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை சமூகத்தின் அறிவார்ந்த, வளமான மற்றும் செல்வாக்குமிக்க நபர்களை ஒருங்கிணைக்கும் அரசியல் சார்பற்ற, சமூக, கலாச்சார மற்றும் தேசிய சேவை அமைப்பான “பாரத் விகாஸ் பரிஷத்” பற்றி அறிவோம்…

 

சீனாவுடனான போருக்குப் பிறகு, 1962ல் ராணுவத்தின் மனஉறுதியை உயர்த்த, டெல்லியில் “சிட்டிசன்ஸ் கவுன்சில்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர், நாட்டின் தேவைகளை கருத்தில் கொண்டு, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அன்றைய அகிலபாரத தலைவர் குருஜியின் ஊக்கத்தால், சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, 1963 ஜனவரி 12ஆம் தேதி, “பாரத் விகாஸ் பரிஷத்” என்ற பெயர் சூட்டப்பட்டது.
புகழ்பெற்ற சிந்தனையாளர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.பி.சின்ஹா முதல் பாதுகாவலராகவும், டெல்லியின் முன்னாள் மேயர் லாலா ஹன்ஸ்ராஜ் குப்தா முதல் தலைவராகவும், டாக்டர் சூரஜ் பிரகாஷ் முதல் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
1988ல், தமிழ்நாட்டில் பேராசியர் கே. எம். ராவ், பேராசிரியர் கோபாலகிருஷ்ணா, ஹரிஹரன் மற்றும் பகவதி சுப்ரமணியன் போன்ற பெரியோர்களால், சென்னை மயிலாப்பூரில் முதல் கிளை துவக்கப்பட்டது. தற்போது சென்னை, நாகர்கோவில் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் உட்பட ஏழு கிளைகளுடன் 300க்கும் மேற்பட்ட சந்தா செலுத்தும் உறுப்பினர்களுடன், தமிழகத்தில் சேவை பணியாற்றி வருகிறது. தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேலான அனுதாபிகள், பயனாளிகள் உள்ளனர்.
கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் தேசபக்திப் பாடல்கள், பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டிகள், பாரதத்தை அறிவோம் வினாடி-−வினா நிகழ்ச்சிகள், ஆசிரியர்களை மதித்தல், போற்றுதல் போன்ற பண்புப்பதிவு நிகழ்ச்சிகளை தமிழகத்தில் நடத்துகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-−மாணவிகள் இந்நிகழ்ச்சிகளில் ஆண்டுதோறும் பங்கேற்கிறார்கள். மருத்துவ முகாம்கள், ஏழை, எளிய மாணவ-−மாணவிகளுக்கான கல்வி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், செயற்கை கை, கால்கள் வழங்குதல் போன்ற மகத்தான சேவைப் பணிகளை பரிஷத் ஆற்றி வருகிறது.
பாரதமாதாவை தெய்வமாகவும், சுவாமி விவேகானந்தரை வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டது. தேசிய ஒற்றுமை, உலக சகோதரத்துவம், அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை, உயர்ந்த மனிதநேயம் ஆகியவை இதன் ஊக்க சக்திகளாகும்.
தேசப்பற்று மற்றும் ஆன்மிக விழிப்புணர்வு இவ்வமைப்பின் நிலையான அடையாளங்களாகும். குடும்ப உணர்வு, கருத்துச் சுதந்திரம், ஒருமித்த முடிவு, ஒற்றுமை, சமத்துவம், சத்தியம், தியாகம், சேவை, நல்லொழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு போன்ற மதிப்புகளின் மீது ஆழ்ந்த மரியாதையும், அவற்றை நடைமுறையில் பின்பற்றுதலும் அமைப்பின் வழிகாட்டும் நெறிகளாகும்.
இந்த மதிப்புகளை வளர்ப்பதற்காக தொடர்பு, ஒத்துழைப்பு, நற்பண்புகள், சேவை, அர்ப்பணிப்பு ஆகிய ஐந்து லட்சியங்களை பரிஷத்தின் செயல் பாதையாக நிர்ணயித்துள்ளது. ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற வளர்ச்சிப் பயணத்தில், இன்று நாடு முழுவதும் 10 மண்டலங்கள், 80 மாநிலப் பிராந்தியங்கள், 1,600-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 83,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய தேசிய அமைப்பாக வளர்ந்துள்ளது.
மத்திய, மண்டல, மாநில மற்றும் கிளை நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக கட்டமைப்பின் மூலம் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் வழியாக நாடு முழுவதும் நற்பண்பு வளர்ப்பு மற்றும் சேவைப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
பரிஷத்தின் நிறுவன தினமான ஜூலை 10, ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் பங்கேற்கும் மிகப்பெரிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட்–செப்டம்பர் மாதங்களில் “கலாச்சார வாரம்”, குரு தேக்பகதூர் தியாகதினம் மற்றும் பல்வேறு சிந்தனைக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் சமூகத்தின் செல்வாக்குமிக்க நபர்களை பாரத் விகாஸ் பரிஷத்தின் நோக்கங்களுடனும், சேவைப் பணிகளுடனும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வருங்கால தலைமுறையை நல்ல பண்புகளுடன் உருவாக்கும் நோக்கில், 1967 முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசிய குழுப்பாடல் போட்டி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். ஐந்து தசாப்தங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த முக்கிய முயற்சியில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
2001–2002ல், பாரத் விகாஸ் பரிஷத்தின் மிகவும் பிரபலமான “பாரத் கோ ஜானோ” (பாரதத்தை அறிந்துகொள்) போட்டி மற்றும் “குரு வந்தன் – சாத்திர அபிநந்தன்” (ஆசிரியர் வணக்கம் – மாணவர் பாராட்டு) ஆகியவை தேசியத் திட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
இவற்றின் கீழ் நடைபெறும் பொது அறிவுப் போட்டிகளில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும், 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். சமீப ஆண்டுகளில், இந்தப் போட்டிகள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலும், இணையவழி முறையிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட மூன்று முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அப்பால், குழந்தைகள் நற்பண்பு முகாம், இளைஞர் நற்பண்பு முகாம் மற்றும் குடும்ப விழிப்புணர்வு முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும், குடும்ப விழிப்புணர்வு மற்றும் சமூக மதிப்புகளை வளர்க்கும் பணிகளை பாரத் விகாஸ் பரிஷத் காலங்காலமாக முன்னெடுத்து வருகிறது.
பாரத் விகாஸ் பரிஷத்தில் “சேவை” என்ற சொல் நாட்டு சேவை, சமூக சேவை என்பதைக் கடந்து மனிதகுலத்திற்கும், அனைத்து உயிரினங்களுக்கும் செய்யப்படும் தன்னலமற்ற சேவையை குறிக்கிறது. தன்னலமற்ற சேவையால் நல்ல பண்புகளும் உயர்ந்த ஒழுக்கநெறிகளும் உருவாகின்றன என்பது பரிஷத்தின் நம்பிக்கை. எனவே தனிப்பட்ட முக்தியை நாடுவதற்குப் பதிலாக, சேவை மற்றும் பரோபகாரத்துடன் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என பாரத் விகாஸ் பரிஷத் கருதுகிறது.
பாரத் விகாஸ் பரிஷத்தின் அடிப்படை இயல்பே ஒரு சேவை அமைப்பு என்பதாகும். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் தன்னிறைவு ஆகிய துறைகளில் 4,300-க்கும் மேற்பட்ட சேவைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் 13 மாற்றுத்திறனாளிகள் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் இதுவரை சுமார் 3,00,000 மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகைகளில் பயனடைந்துள்ளனர்.

பாரத் விகாஸ் பரிஷத் நடத்தும் முக்கிய நிறுவனங்கள்:

பாரத் விகாஸ் பரிஷத் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் – கோட்டா

பாரத் விகாஸ் பரிஷத் மருத்துவ மையம் – சண்டிகர்

பாரத் விகாஸ் பரிஷத் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் மற்றும் சஞ்சய் ஆனந்த் மாற்றுத்திறனாளர் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் – பாட்னா

மாற்றுத்திறனாளிகள் உதவி மையம் – டெல்லி

விவேகானந்த ஆரோக்கிய மையம் – குருகிராம்

டாக்டர் சூரஜ் பிரகாஷ் ஆரோக்கிய மையம் – பரிதாபாத்

லக்னோவில் உள்ள ஸ்ரீ சுமதிநாத் சேவா சதன் – நோயியல் ஆய்வகம், நியூரோ தெரபி மையம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ மையம்

பாரத் விகாஸ் பரிஷத் அறக்கட்டளை பிசியோதெரபி மையம் – ஜெய்ப்பூர்

இதனுடன், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி, வனவாசி உதவி, எளிய குழுத்திருமணங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி உதவி, ரத்தசோகை இல்லா பாரதம், ஆத்மநிர்பர் பாரத் (தன்னிறைவு இந்தியா) போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பாக நாடு முழுவதும் 1,680 நிரந்தர சேவைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாரத் விகாஸ் பரிஷத் தனது சேவைப் பணிகளையும், பண்பாட்டு (சன்ஸ்கார்) நோக்கத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல 1988 முதல் வெளியிடும் “நீதி” மாத இதழ், பரிஷத்தின் 65,000 உறுப்பினர் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக டிஜிட்டல் வடிவில் அனுப்பப்படுகிறது. “ஞான பிரபா” என்ற காலாண்டு சிந்தனை இதழ் சமூக விழிப்புணர்வை உருவாக்கும் முக்கிய வெளியீடாக உள்ளது. அதேபோல் “பாரத் கோ ஜானோ”, “சேதனா கே ஸ்வர்” உள்ளிட்ட பல்வேறு வெளியீடுகளும் தேவைக்கேற்ப வெளியிடப்படுகின்றன.
இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப சமூக ஊடகங்கள் மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பாரத் விகாஸ் பரிஷத் திறம்பட பயன்படுத்தி தனது கருத்துகளையும், சேவைச் செயல்பாடுகளையும் பொதுமக்களிடம் கொண்டு செல்கிறது. 2026 ஜூலை
10 அன்று, பாரத் விகாஸ் பரிஷத் தனது ஆறு தசாப்த சேவைப் பயணத்தை நிறைவு செய்து ஏழாவது தசாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறது.

கட்டுரையாளர்: ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்திஷ்கர் மாநில அமைப்புச் செயலாளர்
தமிழில்: ரகுநாதன், வடதமிழக தலைவர்