ராணி துர்காவதி
புகழ் பெற்ற சண்டெல் மகாராஜா கீரட்ராயின் மகளாக ராணி துர்காவதி 1524 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் காலங்சார் கோட்டையில் பிறந்தார். சண்டெல் வம்சம், இந்தியாவின் புகழ்ப்பெற்ற வம்சமாக இருந்திருக்கிறது, இவர்கள் சிற்பங்கள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர்கள், சிற்பம் வடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்களது காலத்தில் தான், கஜுராஹோ சிற்பக்கூடம் மற்றும் கலிஞ்சர் கோட்டை ஆகியவை கட்டப்பட்டன.
1542 ஆம் ஆண்டு, ராணி துர்காவதி கொந்த் அரச வம்சத்தை சேர்ந்த மன்னர் சங்கர்மஸ்ஹாவின் மூத்த மகன் டல்பாட்ஸாவை மணந்தார். இவர்களுக்கு 1545 ஆம் ஆண்டு, வீர் நாராயண் என்ற இளவரசர் பிறந்தார். இளவரசர் பிறந்த ஐந்தே ஆண்டுகளில் ராஜா டல்பாட்ஸா காலமானார். எனவே இளவரசருக்கு பதிலாக “கோண்ட்வானா”வின் அரசியாக ராணி துர்காவதி பதவியேற்றார்.
ராணி துர்காவதி எதிரி நாட்டினர் எளிதாக உள்ளே நுழைய முடியாத வண்ணம், மிகப்பெரிய கோட்டையை கட்ட வேண்டும், இந்தக் கோட்டை பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும் என்பதற்காக தலைநகரை சிங்கெளர்கரில் இருந்து சாவுரஹாவிற்கு மாற்றினார்.
கோண்ட்வானாவின் பக்கத்து மால்வா பகுதியை சுஜத் கான் கைப்பற்றினார். சுஜத் கானைத் தொடர்ந்து, அவரது மகன் பஜ்பாஹாதூர் 1556 ஆம் ஆண்டு மால்வாவின் ஆட்சியாளரானார். அவர் துர்காவதியை போரிட்டு வெல்ல முயன்று கோண்ட்வானா மீது படையெடுத்தார். ஆனால் மகாராணி சாதுர்யமாக போர் வியூகங்களை வகுத்து, பஜ்பாஹாதூரின் வீரர்களை திணறடித்தார். இதனால் பஜ்பாஹாதூர் படைக்கு பயங்கர இழப்பு ஏற்பட்டது. இந்த வெற்றிக்கு பிறகு, ராணி துர்காவதியின் பெயரும், புகழும் மிக வேகமாக நாடு முழுவதும் பரவியது.
1562 ஆம் ஆண்டு, அக்பர் மால்வா அரசரான பஜ்பாஹாதூரை வென்று, முகலாய பேரரசின் கீழ் மால்வாவை கொண்டு வந்தார். அதன் எல்லையில் இருந்த ராஜ்ஜியம் ராணி துர்காவதியினுடையது. முகலாயப் பேரரசின் அனுமதி பெற்று, ரேவா அரசரான அப்துல் மஜித்கான் ராணி துர்காவதி மீது படையெடுத்தபோது, அப்துல் மஜித்தின் படையை தோற்கடித்தாலும், மீண்டும் பெரும் படையுடன் அக்பர் வரலாம் அவரை எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று யோசித்தார் ராணி துர்காவதி.
தோற்றாலும், இறந்தாலும் போரில் வீர மரணம் அடைவது தான் பெருமை என்று நினைத்தார் ராணி துர்காவதி. தனது சில வீரர்களுடன் நராய் என்ற மலை பிரதேசத்திற்கு சென்றார். இம்முறை படையை தானே வழி நடத்தி முன்னேறினார். இரண்டு பக்கமும் பயங்கரமான இழப்பு, எதிரிகளிடம் சரணடைவதைவிட வீர மரணம் சிறந்தது என போரிட்ட ராணி துர்காவதி 1564 ஜூன் 24 அன்று, போர்களத்தில் வீரமரணம் அடைந்தார்.