எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்திற்குள் பிணக்கு என மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட, இல்லை அவை ஆலோசனைகள் மட்டுமே, முடிவுகள் ஒருமித்து எடுக்கப்பட்டு, அனைவர் கையெழுத்துடனும் தான் வெளியிடப்பட்டது எனத் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
ஆனாலும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. காங்கிரஸோ அதன் கூட்டணி கட்சிகளோ காங்கிரஸ் காலத்தில் தேர்தல் ஆணையம் எப்படி இருந்தது என்பதை வசதியாக மறந்து விட்டு கூப்பாடு போடுவது வேடிக்கை. டி.என். சேஷன் தனது அதிகாரத்தை காட்டிய போது, ஒற்றை உறுப்பினர் தேர்தல் ஆணையத்தை மூவர் உறுப்பினர் ஆணையமாக மாற்றியது, என். கோபால்சாமியின் எதிர்ப்பை மீறி நவீன் சாவ்லாவை ஆணையராக தொடர அனுமதித்தது, பின்னர் அவரையே தலைமை தேர்தல் ஆணையராக நியமித்தது என்று பல சம்பவங்களை சொல்லலாம். தேர்தல் ஆணையர்கள் 7 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கியது, அவர்களில் மூவரை மாநில ஆளுநர்களாக நியமித்தது, ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது, முக்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக ஒருவரை போட்டியிட வைத்தது என்று காங்கிரஸ் கட்சியின் அதிகார துஷ்பிரயோகப் பட்டியல் மிகப்பெரியது.
இது எதிர்க்கட்சிகளின் டூல் கிட். இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்புச் செய்தி கூட, தேர்தல் ஆணையம் பற்றிய வழக்கு விசாரிக்கப்படும் நாளில் திட்டமிட்டு வெளியிடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது, எதிர்க்கட்சிகளின் நோக்கம் ஒன்றுதான். தேர்தலில் போட்டியிட்டு மோடி தலைமையிலான இந்த ஆட்சியை தோற்கடிக்க முடியாது. எனவே, சட்டரீதியாக உச்சபட்ச பாதுகாப்பு உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டி விட்டு, கலவரம் உருவாக்கி, அதன் மூலம் ஏதாவது மனித உயிருக்கு சேதம் ஏற்பட்டால், அதைக் கொண்டு உலக நாடுகளில் இந்த அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவது தான், நாட்டில் அமைதியின்மையையும் கொந்தளிப்பையும் உருவாக்கி, சட்டரீதியாக வெல்ல முடியாத ஆட்சியை கவிழ்த்தாவது கைப்பற்றுவதுதான். இது அப்பட்டமான நக்சல் சிந்தனை.
நல்ல வேளை, மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களின் ஒவ்வொரு ஜனநாயக விரோதப் போராட்டங்களும் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதுவே, நமக்கு ஆறுதல் ஆகி விட முடியாது. தேசவிரோத சக்திகளின் இந்தப் போராட்ட முன்னெடுப்பை முறியடிக்க, விழிப்புடன் இருந்து செயலாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்!