சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரி முதல்வர், ஆன்மிக ஞானி எனப் பன்முகத் தன்மைகளுடன் பரிணமித்தவர் மகான் ஸ்ரீ அரவிந்தர். சுதந்திரப் போராட்ட வீரராகப் பல்வேறு வீர தீரச் செயல்களுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் மக்களிடையே ஆன்மிக எழுச்சியை உருவாக்கிய மாபெரும் ஞானி.
கொல்கத்தா நகரில் 1872, ஆகஸ்ட் மாதம் 15ல் கிருஷ்ண தனகோஷ் – ஸ்வர்ணலதா தேவி தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் அரவிந்த் அக்ராய்ட் கோஷ்.
1905ல் வைசிராய் கர்சன் பிரபு வங்கப் பிரிவினையை ஏற்படுத்தினார். பிரிவினைக்கு எதிராக 1906ல் மிகப்பெரிய அளவுக்குக் கலவரங்கள் வெடித்தன. கொல்கத்தாவில் உள்ள வங்காள தேசியக் கல்லுரியில் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த அரவிந்தரை, விடுதலைப் போராட்டத்துக்கு இழுத்துச் சென்றது இந்தப் பிரிவினைக் கொள்கைதான்.
`வந்தே மாதரம்’ இதழில் ஆங்கிலேய அரசு, வங்கப் பிரிவினைக்கு எதிராக விடுதலையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார். போராட்டங்கள் நடத்தினார். 1907, 1908ம் ஆண்டுகளில் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார் அரவிந்தர். குற்றம் நிரூபிக்கப்படாததால், 1909ல் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர், அரசியலிலிருந்து விலகி, ஆன்மிக யோக நெறிகளில் கவனத்தைச் செலுத்தலானார். சிறையில் இருந்த காலத்தில் அவர் படித்த நூல்கள், உபதேசங்கள், கீதை ஆகியவை அவரை ஆன்மிகத்தை நோக்கி இழுத்தன. பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நிறுத்த ஆன்மிக விடுதலை ஒன்றே தீர்வு என்று கண்டுகொண்டார்.
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு வந்தார் அரவிந்தர். 1926ல் ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். ஆன்மிகத்தை பரப்பினார். பாரதியுடன் நட்பு கொண்டது, ஸ்ரீ அன்னை, அரவிந்தரைச் சந்தித்தும் இக்காலகட்டத்தில்தான். அரவிந்தர் தனது ஒப்பற்ற காவியமான `சாவித்ரி’யைப் படைத்தார்.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்நாளில் மகா யோகியாகவும், ஞானியாகவும், மகானாகவும் வாழ்ந்தவர் ஸ்ரீ அரவிந்தர். அவரது அவதார நாள்தான் பாரதத்தின் சுதந்திர தினமும்.