மகரிஷி மகேஷ் யோகி

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் அருகேயுள்ள சிச்லி என்ற கிராமத்தில் பிறந்தார். மகேஷ் பிரசாத் வர்மா என்பது இவரது இயற்பெயர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலை இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மனம் ஆன்மிகத்திலேயே மூழ்கியிருந்தது. இதனால், 1939ல் பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடரானார். 12 ஆண்டுகள் அவரிடம் பயின்றார். 1953ல் இமயமலைச் சாரலில் ஆசிரமம் அமைத்து, ஆழ்நிலைத் தியானத்தை போதித்து வந்தார். 1957ல் சென்னையில் தியான மையம் தொடங்கினார்.

மன வலிமையாலும் பிரார்த்தனையாலும் எத்தகைய அற்புதங்களையும் சாதிக்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். ரிஷிகேஷில் சர்வதேச ஆசிரியர் பயிற்சிப் பாடத் திட்டத்துக்கான அமைப்பைத் தொடங்கினார். 1958ல் அமெரிக்கா சென்றார். சாமானியர்கள் முதல் பிரபலமானவர்கள் வரை பலரும் இவரது சீடர்களானார்கள். உலகம் முழுவதும் இவர் புகழ் பரவியது. அகில உலக தியான ஸ்தாபனத்தைத் தொடங்கினார். ஐரோப்பா முழுவதும் இதைப் பரவச் செய்வதற்காக அங்கு சென்றார். 1959ல் லண்டனில் தியான மையத்தைத் தொடங்கினார்.

பாரதத்திலும் பல மையங்களைத் தொடங்கி, ஆழ்நிலை தியான உத்திகளைக் கற்றுத் தந்தார். 1998ம் ஆண்டுக்குள் 1,000 தியானப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது, கனடா, டென்மார்க், ஜெர்மனி, பிரிட்டன், மலேயா, நார்வே, ஆஸ்திரேலியா, கிரேக்கம், இத்தாலி, கிழக்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இவரது தியான மையங்கள் இயங்கி வருகின்றன. 1971ல் அமெரிக்காவில் அயோவா மாகாணத்தில் ‘மகரிஷி யுனிவர்சிட்டி ஆஃப் மேனேஜ்மென்ட்’ என்ற உயர் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.

உலகம் முழுவதும் சுமார் 70 வகையான தியான நிலைகளைப் போதித்தார். இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. சயின்ஸ் ஆஃப் பீயிங் அன்ட் தி ஆர்ட் ஆஃப் லிவிங்: டிரான்சென்டென்டல் மெடிடேஷன்’, ‘மெடிடேஷன்ஸ் ஆஃப் மகரிஷி மகேஷ் யோகி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். நவீன அறிவியலுடன் வேத அறிவியலை இணைப்பதற்கான பல கல்வி நிறுவனங்களைப் பல்வேறு நாடுகளில் தொடங்கினார். அன்றாட வாழ்வில் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கை முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மகரிஷி மகேஷ் யோகி 2008 பிப்ரவரி 5ம் தேதி தனது 91வது வயதில் மறைந்தார்.