பொது நலம்

அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் சென்றுக் கொண்டிருந்தபோது, ஒரு முதியவர் தர்மம் யாசித்தார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி. ”இது குடும்பத்திற்கு பல ஆண்டுகளுக்கு போதுமே!” என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் ஒரு திருடன், பொற்காசுகளை அவரிடம் இருந்து பறித்துச் சென்றான். அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொன்னார். நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்ல கூறினான் அர்ஜுனன்.

முதியவரும் வீட்டுக்குக் கொண்டு சென்று, வீட்டில் யாரிடமும் சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்தார். இதை அறியாத அவரது மனைவி அந்த பானையை ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க கொண்டுச் சென்றாள். பானையை கழுவும்போது கல் ஆற்றில் விழுந்தது. வயோதிகர் இதனை அறிந்து வருத்தப்பட்டார். ஆற்றிற்கு சென்று தேடியும் கல் கிடைக்கவில்லை. மீண்டும் கண்ணனையும் அர்ஜுனனையும் பார்த்து நடந்ததை கூற, அர்ஜுனன் கண்ணனிடம், ”இவர் அதிர்ஷ்டக்கட்டை,” என்றான். ”இந்த முறை இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு” என்றார் கண்ணன்.

அதைக் கொடுத்த அர்ஜுனன், கண்ணனிடம், ”இரண்டு காசுகளால் அவருக்கு என்ன கிடைக்கும்?” எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை, என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,” என அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார். செல்லும் வழியில் மீனவன் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக்கொள்ள முதியவரை கேட்டான். இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு போதாது, அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார் முதியவர். வாங்கிய ஒரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்து அதன் வாயைத் திறந்து பார்த்தார்.

அது அவர் மனைவி ஆற்றில் தவறவிட்ட விலையுயர்ந்த கல். சந்தோஷத்தில் ‘சிக்கியாச்சு’ என்று கூச்சலிட்டார். அவ்வழியே வந்த, இவரிடம் கொள்ளையடித்த திருடன், தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடினான். கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து, அவனது திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்து முதியவருக்கு கொடுத்தனர்.