தொழில் முதலீட்டு ஆலோசகர் ஷியாம் சேகருடன் எம் ஆர் ஜம்புநாதன் நடத்திய நேர்காணலின் பகுதி இரண்டாவது (நிறைவுப்) பகுதி.
கொரானாவிற்குப் பிறகு என்ன விதமான மாற்றங்கள் இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?
கொரோனா பல தொழில்களை நிரந்தரமாக மாற்றி விடும். ஆன்லைன் தொழில்கள் மேலும் வளரும். டிஜிட்டல் மயமான சேவைகள் மேலும் பெருகும். நிறுவன இயக்கம் மேலும் வீட்டில் இருந்தும், கணினி மூலமும் மாறலாம். சுற்றுலா, விமான போக்குவரத்து போன்ற தொழில்கள் பெரும் பாதிப்பை சந்திக்கக்கூடும். அதே சமயம், புதிய சேவை தொழில்கள் வளரும். உதாரணத்திற்கு, வீட்டிற்குப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் சேவைகள், இணைய வழி கல்வி, டிஜிட்டல் செய்தி வினியோகம், டிஜிட்டல் அட்வெர்டைஸிங் ஆகிய தொழில்களைச் சொல்லலாம். சீனாவில் இருந்து உற்பத்தி வாய்ப்புகள் இந்தியாவின் பக்கம் திரும்புவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே துவங்கி விட்டனவே!
அரசுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?
அரசு ஏற்கனவே நிறுவிய HLAG என்ற அலோசனைக் குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமல் படுத்த வேண்டும். அடுத்த கட்ட பொருளாதார சீர்திருத்தங்களை உடனடியாக அமல் படுத்தி வளர்ச்சி திரும்ப வழி வகுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் விரைவாக முதலீடுகள் செய்து அவற்றின் மூலம் சேவை துறையை வளரச் செய்ய வேண்டும். இவற்றின் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் (GDP) பெருக்க வேண்டும்.
வசதி வாய்ப்புள்ள தனிநபர் / நிறுவனங்கள் / தொண்டு ஸ்தாபனங்கள் செய்ய வேண்டியவை யாவை?
தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைப் பெருகச் செய்து உற்பத்தி திறன் மேம்பாட்டில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். Make in India என்ற நெடுங்கால குறிக்கோள் Make for India என்று நிகழ்கால (விரைவாய்) சாதனையாக்கி இறக்குமதிகளை உள்நாட்டு உற்பத்தியாக மாற்ற வேண்டும். தொண்டு நிறுவனங்கள் இந்த கடினமான காலகட்டத்தில் அரசின் வளர்ச்சி மற்றும் நலப்பணிகளுக்கு இயன்ற வழிகளிலெல்லாம் முழு ஆதரவும், ஒத்துழைப்பும், உதவிகளும் தந்து மக்களின் நம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(நிறைவு)
எம்ஆர். ஜம்புநாதன்