அரசியலும் இலட்சியமும்

பி. எம். எஸ் ஸ்தாபகர் திரு.  தெங்கடி ஜி அரசியலில் இலட்சியவாதத்தின் இடம் என்ன என்ற தலைப்பில் உரையாற்றி உள்ளார். 1997 ல் புதுதில்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா ஆய்வு நிலையத்தில் நிகழ்த்திய உரையில் , அரசியலில் கொள்கையை முன்னிருத்தி செயல்படுவதற்கான நிபந்தனைகள், வரம்புகள்,  தன்மைகள் பற்றி விரிவாக விவாதித்தார். அதன் சாரம் :-

நான்கு வகையான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவகையினர் மட்டுமே இலட்சியவாதிகள். முதல் வகையினர், வெறும் அரசியல்வாதிகள். இவர்கள் கொள்கை, கோட்பாடு, இலட்சியம் என்று எதையும் சுமப்பது இல்லை.

இரண்டாம் வகையினர், இலட்சியத்தில்,கொள்கையி்ல் உறுதியாக இருப்பவர்கள். இவர்கள் வெற்றி, தோல்வி பற்றியெல்லாம் கவலைப் படமாட்டார்கள். தோல்வியோ வெற்றியோ கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். இலட்சியப் பாதையிலிருந்து விலகக் கூடாது. இதில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் எளிய, தூய இலட்சியவாதிகள்.

முன்றாவது வகையினர், உள்ளத்தில் உள்ளார்ந்த சாரத்தில் அரசியல்வாதிகள் , வார்த்தைகளில் லட்சியவாதிகள். இந்த வகையினர்தான் எண்ணிக்கை யில் மிக அதிகம்.  இவர்கள் லட்சியவாதிகள் என்ற முகமுடியை போட்டுக் கொண்டு வெகுஜனங்களை ஏமாற்றுபவர்கள். அரசியல் ரீதியாக லாபம் கிடைக்கும் என்றால் அந்த கணமே கொள்கைகள் காற்றில் பறந்துவிடும். பணம்,பதவி கொடுப்பவர்களுடன் சேர்ந்துக் கொள்வார்கள். இவர்களுடைய சிறிய சபலமே இவர்கள் பேசிய பெரிய கொள்கைகளை, லட்சியங்களை கைவிடச் செய்யும்.

நான்காவது வகையினர், ஒரு அரிய வகையைச் சேர்ந்தவர்கள். உள்ளார்ந்த சாரத்தில், உள்ளத்தில் லட்சியவாதிகள். தற்செயலாக அரசியல் களத்தில் இருப்பவர்கள். இவர்கள் அரசியலில் இருப்பது அதன் பகட்டுக்காகவோ அல்லது பதவி வெறியினாலோ அல்ல. சமுதாயத்தை மாற்றுவது, அதன் அமைப்புகளை முறைமைகளை மாற்றி அமைப்பது இவர்களின் நோக்கம். இவர்கள் காத்திருப்பார்கள் ஆனால் கடமையைத் துறக்க மாட்டார்கள்.

தெங்கடி ஜி யின் கருத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, வாஜ்பாஜ் தொடங்கி மோடி வரை, பாஜக தலைவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பது தெரிகிறது. அவர்கள் அனைவரும் அரசியலில் இருப்பது அரசியலுக்காக அல்ல, லட்சியத்திற்காக.

அரசியல் அவர்களுக்கு முழுமையானதும் முடிவானதும் அல்ல. இது போன்ற அரசியல்வாதிகள்  தேர்தல் வெற்றி, தோல்விகளால் அலைகழிக்கப்படுவதில்லை. 1984 ல் பாஜக வினர் வெறும் இரண்டு நாடாளுமன்ற இடங்களை மட்டுமே பெற்றனர். ஆனால் இன்று நாடாளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மையுடன் தேசத்தை ஆள்வதுடன் கணிசமான மாநிலங்களிலும் ஆட்சி செய்கின்றனர். தமிழக மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

—— திருநின்றவூர் இரவிக்குமார் ——

One thought on “அரசியலும் இலட்சியமும்

  1. நல்ல செறிவான கட்டுரை. பாராட்டுக்கள்.

Comments are closed.