இந்தியாவில் கடந்த 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில், பின்னர் 1992-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று அந்த தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து இருந்தது.
முந்தைய மோடி அரசில் ஸ்மிரிதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்த போது, புதிய தேசிய கல்வி கொள்கையை வகுப்பதற்கான முயற்சிகளை பாரதீய ஜனதா அரசு தொடங்கியது.
பின்னர் இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை தயாரித்து, கடந்த ஆண்டு மே 31-ந் தேதி மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்கிரியாலிடம் வழங்கியது.
பின்னர் அந்த அறிக்கை, பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக வெளியிடப்பட்டது. அதன்படி, அந்த அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வந்தன.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் மனித மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தை ‘கல்வி அமைச்சகம்‘ என பெயர் மாற்றவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
பன்மொழி கல்வியை ஊக்குவித்தல், உலகில் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப டிஜிட்டல் கல்வி முறை, கற்பித்தலில் புதிய முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்று உள்ளன.
இந்த தகவலை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும்.
* பள்ளிக்கல்வியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு இருக்கிறது. 12 ஆண்டுகள் கொண்ட பள்ளிக்கல்வி 5 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 4 ஆண்டுகள் என வகைப்படுத்தப்பட்டு பாட திட்டம் வகுக்கப்படும். இதுதவிர 3 ஆண்டுகள் மழலையர் பள்ளி வகுப்பும் உண்டு.
* 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது.
* 12-ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படும். 6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.
* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.
* புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலமும் பாடம் கற்பிக்கப்படும்.
* மாணவர்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது. பள்ளி மற்றும் உயர் கல்வியில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் நிலையில், சமஸ்கிருத பாடமும் இருக்கும். விருப்பப்பட்ட மாணவர்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
* உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது. பாட திட்டம் மற்றும் படிக்கும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும்.
* உயர் கல்வி நிறுவனங்களில் 2035-ம் ஆண்டுக்குள் மாணவர்கள் சேர்க்கையை 50 சதவீதம் அதிகரிக்கவும், புதிதாக 3½ கோடி இடங்களை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
* சட்ட மற்றும் மருத்துவ கல்லூரிகள் தவிர பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
* பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் மீண்டும் அந்த வகுப்பில் சேர்ந்து படிக்க புதிய கல்வி கொள்கை அனுமதி வழங்குகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
* மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்கல்வியையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்.
* பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு 15 ஆண்டுகளுக்குள் படிப்படியாக தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக விளக்கம் அளித்து உயர்கல்வித் துறை செயலாளர் அமித் கரே, கடந்த 34 ஆண்டுகளாக கல்வி கொள்கையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. புதிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில அரசுகளிடமும், கல்வியாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. பன்மொழி கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்திலும் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய கல்வி கொள்கையின்படி, இளநிலை பட்டப்படிப்பு 3 அல்லது 4 ஆண்டுகள் வரை இருக்கும். முதுநிலை பட்டப்படிப்பு 1 அல்லது 2 ஆண்டுகள் வரை இருக்கும். ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு 5 ஆண்டுகள் இருக்கும். இனி எம்.பில். படிப்பு நிறுத்தப்படும்.
மாநில மொழிகளில் இணையவழி பாடங்கள் வெளியிடப்படும்.
தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு (என்.இ.டி.எப்.) உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.