பாரத நாகரிகத்தின் விழுமியங்கள்

இன்றைய கல்வி முறைக்கும், கடந்த கால கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசம், நாம் நமது அசல் சிந்தனையிலிருந்து விலகி விட்டோம். இன்றும் நாம் காணும் அற்புதமான அரண்மனைகள், கோயில்கள் மற்றும் கோட்டைகளை நம் முன்னோர்கள் கட்டினார்கள். கண்ணியம், வீரம், சுயமரியாதை, ஞானம் ஆகியவற்றின் மூலம் அவற்றை எப்படி கட்டமைத்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
கல்வி கற்பித்தல் முறை எப்படி இருக்க வேண்டும், கடந்த காலத்தில் கல்வி எப்படி இருந்தது, அதன் பலன்கள் என்ன, வாழ்க்கையை முழுமையாக வாழ்வது எப்படி என்று சிந்தித்ததில், எல்லாவற்றிற்கும் மேலாக மொழி முதன்மையானது. நமது தாய் மொழியில் பேச முடியாமல், நாட்டின் பாரம்பரிய மொழியான சமஸ்கிருத மொழியை வளர்க்க முடியாமல், குர்தா, வேஷ்டி போன்ற பாரம்பரிய உடைகளை கைவிட்டு, அதை அணிய நாம் வெட்கப்படுவதால், நமது கலாச்சாரத்தை நாம் இழக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும்.
இன்று, மேற்கத்திய நாடுகளில் பல பெரிய ஆசிரமங்கள் நிறுவப்பட்டுள்ளன. அங்கே, பல குழந்தைகள் சேர்ந்து சமஸ்கிருதம் கற்கிறார்கள், அவர்களுக்கு ஸ்லோகங்கள் தெரியும், அவர்களுக்கு தினசரி நடைமுறைகள் தெரியும். மேலும் ஆயுர்வேதத்தின் அனைத்து கொள்கைகளையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே இப்போது நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள உட்கார்ந்திருக்கிறோம். அப்படி நடக்கக்கூடாது. நம்முடைய சொந்த நாகரீகம், கலாச்சாரம், கலை, குணங்கள், நற்பண்புகள் மற்றும் எண்ணங்கள் – நமக்கு சொந்த விசயங்களாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு அடித்தளம் உள்ளது. அதற்காக நம் முன்னோர்கள் நிறைய ரத்தம் சிந்தினார்கள், நம் தாய்மார்களில் பலர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். அதை நாம் மதிக்க வேண்டும். எனவே, அதை மதிக்கும் அதேவேளையில், நமது நாடு மிகப்பெரியது என்பதையும், பாரதத்தைப் பற்றிய அறிவே சிறந்தது என்பதையும் நாம் உணர வேண்டும்.
சனாதன பாரம்பரியம், குரு – சிஷ்ய உறவின் அடிப்படையில் மட்டுமே தொடர்கிறது. இன்றைக்கு கல்வி நிறுவனங்களில், பெரும் கட்டணம் செலுத்தி, சவால்களை எதிர்கொள்ள நம் வாழ்வில் பயன்படாத, உண்மையான பலனை தராத பாடங்களைப் படிக்கிறோம். சிந்தனையோ, தியானமோ, மௌனமோ, மெய்யென்று சொல்லப்படும் வேதப் பயிற்சியோ இல்லை. எனவே, வேறொருவரின் மொழியையும், அவர்களின் சில திறன்களையும் படித்த பிறகு, ஒருவருடைய வாழ்நாளில் 20-25 வருடங்களை அர்ப்பணித்த பிறகு, குழந்தைக்கு தன்னம்பிக்கை இல்லை என்றும், பெற்றோர்கள் அவர்களுக்குள் ஆழ்ந்த பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள்.
நாம் வைத்திருப்பதை “வைரம்” என்று அறியாமல், “சாதாரண கல்” என்று நினைத்து பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் போல, சொந்த நாட்டிலேயே இவ்வளவு அறிவு இருந்தும், பட்டச் சான்றிதழ், திறமை பட்டியலை வைத்துக்கொண்டு வேலைக்காக வெளிநாடு செல்கிறோம். நமது நாட்டில் பல்வேறு துறைகள், கலாச்சாரங்கள், நாகரிகங்கள், வெவ்வேறு பிராந்தியங்களின் மொழிகள், பல நடன வடிவங்கள், பல இசை வடிவங்கள், பல வகையான ஆடைகள் மற்றும் பல உயர்வான விஷயங்கள் உள்ளன. நாம் நம் மண்ணோடு இணைவதைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு விவசாயியுடன் பணிவாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு மரம் வளர்ந்து கனி தர, பல ஆண்டுகள் ஆகும். ஆனால் இன்று, குழந்தைகள் எல்லாவற்றையும் உடனடியாக விரும்புகிறார்கள். சில ஆப்கள் (App) உடனடி தீர்வுகளை வழங்குகின்றன. இது நம் குழந்தைகளை அவர்களின் வேர்களிலிருந்து, வெகு தொலைவில் கொண்டு செல்கிறது. எந்த வகையான உணவு விளைகிறது, எந்த வகையான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது, எந்த வகையான உணவு நம்மை சென்றடைகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. உள்ளூர் மயமாக்கப்பட்டப் பொருளாதாரம், குயவர், கைத்தறி போன்ற பாரம்பரியத்தை நம் குழந்தைகளுடன் இணைக்க வேண்டும். எப்போதும் லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவியால் நாம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, இயற்கையோடு நாம் இணைந்திருக்க வேண்டும், அதுபோல சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் தணிக்க வேண்டும்.
நாம் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும். நாம் ஒரு சமூகமாக மாறுவது மிகவும் அவசியம். நம்மிடையே ஒற்றுமை இருக்க வேண்டும். உலகில் பல சக்திகள் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிக்கின்றன. கடந்த கால வரலாற்று அனுபவங்களிலிருந்து நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.
தற்போதைய பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு அல்லது கணினி மூலம் தீர்க்க முடியாது. தீர்வு நம் எண்ணங்களில் உள்ளது. நாம் தன்னம்பிக்கையுடன் நிற்க வேண்டும். மேலும் இந்த சக்தி நமக்குள் இருக்கிறது. நம்மை அறியும் இந்த அறிவு, நம்மைப் பற்றிய விழிப்புணர்வு, “அஹம் பிரம்மாஸ்மி”. இதுவே நமது சனாதன தர்மத்தின் நோக்கம். இது நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. நம் தன்னம்பிக்கை உயரும் போது, நாமும் இவ்வுலக வாழ்வில் உயர்வோம்.
நம் குழந்தைகளுக்கு என்ன நடக்கும் என்ற பயத்தை உங்கள் மனதில் இருந்து நீக்குங்கள்? சூரிய தேவன், குரு, முனிவர்கள், நமது முன்னோர்கள் மற்றும் தேவி அன்னை ஆகியோரின் ஆசியுடன், பாரத மாதாவின் மக்கள் – பெற்றோர்கள் – இன்றைய பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்து வைப்பது என்று சிந்திக்கத் தொடங்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சனாதன தர்மத்தின் தூண்களாக நம் குழந்தைகளை நாம் உருவாக்க வேண்டும்.

கட்டுரையாளர்: 1999ல் உலக அழகி பட்டம் பெற்றவர், சமூக சிந்தனையாளர்
தமிழில்: டாக்டர் எம்.விஜயா