ஆலயங்கள் நீதிமன்றங்களாகவும், ஆண்டவன் நீதிபதியாகவும் கருதப்பட்ட காலகட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயமூர்த்தி ஆலயத்தில் குற்றவாளிகளைச் சோதித்தறியும் நிகழ்ச்சி நடந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திருவிதாங்கூர் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதியில் வாழ்ந்த நம்பூதிரி சமூகத்தின் குற்றவாளிகளை இங்கு சோதித்திருக்கிறார்கள். சோதனையின் பெயர் ‘கைமுக்கு’ என்பதாகும். 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தச் சோதனைமுறை நடைமுறைக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நம்பூதிரி சமூகத்தில் ஆண் குற்றவாளிகளே, இக்கோயிலில் சோதிக்கப்பட்டனர். பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட, குற்றவாளி என்று கருதப்படுபவரை விசாரணைக்காக ‘சுசீந்திரம் கொண்டு போகலாம்’ என்று அரசர் தகவல் அனுப்புவார். தகவலைப் பெற்ற ஊர்ப்பிரமுகர்கள், இதுகுறித்து கோயில் ஸ்ரீகாரியத்துடன் விவாதிப்பர். இவர்களின் விவாதம் சுசீந்திரம் இளையநயினார் மண்டபத்தில் நடைபெறும். குற்றவாளி, யோகக்காரர்கள் எனப்படும் ஊர்ப்பிரமுகர்கள் முன்னே கொண்டு வரப்படுவார். அவர் அவர்களிடம் வெற்றிலை – பாக்கை அபராதமாக அளிப்பார். விசாரணை முடிந்ததும், அவனை சோதனை செய்வார்கள். இதற்காக சுசீந்திரம் கோயில் வட்டப்பள்ளி ஸ்தானிகர், தங்கத்தால் ஆன சிறிய ரிஷப விக்கிரகத்தை அலங்கரித்து எடுத்துக்கொண்டு கோயில் பிராகரத்தை சுற்றி வருவார் அவரின் பின்னே பணியாள் ஒருவர் சங்கு ஊதியபடி வருவார். இந்த ஊர்வலம் செண்பகராமன் மண்டபத்தில் வந்து சேரும்.
இந்த நேரத்தில் செண்பகராமன் மண்டபத்தில் அடுப்பு மூட்டி வெண்கலப்பானையை வைத்திருப்பர். அதில் மூன்று ஆழாக்கு நெய்யும், மூன்று ஆழாக்கு நல்லெண்ணையும் விடப்பட்டிருக்கும். மகிஷ இலையை நெய்யில் போட்டு, நெய்யும் எண்ணெயும் கொதிக்கிறதா என்று சோதிப்பார்கள். மகிஷ இலை கருகுமானால், நெய் கொதித்துவிட்டதாக முடிவு செய்யப்படும். பின், அந்த விக்கிரகத்தைப் பானையில் போடுவர்.
சோதனை நாளில் குற்றவாளி என்று கருதப்பட்டவர் முழுப் பட்டினியாக இருப்பார். அவர் வலது கை சுத்தமான வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டிருக்கும். யோகக்காரர்களை வணங்கியபின், கையை நெய்ப்பானையில் முக்கி, ரிஷப விக்கிரகத்தை எடுப்பார். அதன்பின், மூத்த நம்பூதிரி ஒருவர் அவர் கையை மீண்டும் வெள்ளைத்துணியால் கட்டுவார். அதன்பின் அவர் கோயிலிலிருந்து அழைத்துச் செல்லப்படுவார்.
இந்த நிகழ்ச்சி நடந்த மூன்று நாள் கழித்து, அந்த ஆசாமி கோயிலுக்கு அழைத்து வரப்படுவார். அவருடைய கைக்கட்டு அவிழ்க்கப்படும். கையில் நெருப்புக் காயம் இல்லையென்றால், அவர் நிரபராதி. பின்னர், அவர், கருவறைத் தெய்வத்தை வணங்கிவிட்டுக் குளத்தில் சென்று குளிப்பார். அவருக்கு உணவளிப்பார்கள். ஆசாமியின் கையில் நெருப்புப் புண் இருந்தால், அவரைக் குற்றவாளி என்று முடிவு செய்து, கீழத்தெருவுக்குக் கொண்டுச் சென்று அங்கே விடப்படுவார். அவருக்கு அதன்பிறகு இழிநிலை வாழ்க்கைதான். குற்றவாளி ஒருவர் இந்த சோதனைக்கு அஞ்சி, கோபுரத்தின் மேலே ஏறிக் கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் குளத்தில் விழுந்து இறந்து போனார். ஆகவே, இந்த வழக்கம் 1834-ல் சட்டரீதியாக நிறுத்தப்பட்டது.