ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்கில் உள்ள மருத்துவ அறுவை சிகிச்சைக் கல்லூரியில், “அறுவை சிகிச்சைகளின் தந்தை” என்று அழைக்கப்படும் மகரிஷி சுஷ்ருதர் திருஉருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சுஷ்ருதரைப் போற்றும் விதமாக, இன்று உலகம் இந்த 90 கிலோ வெண்கலச் சிலையை நிறுவி கொண்டாடுகிறது. பாரத இளம் தலைமுறை பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வு இது.
சுதந்திரம் அடைந்த பொழுது, நம்மால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று ஏளனம் செய்தார்கள். ஆனால், பாரதம் இந்த உலகிற்கெல்லாம் முன்னோடி என்பதை நம் வரலாற்றுப் பக்கங்கள் அறுதியிட்டு கூறுகின்றன. அறிவியல், ஆன்மீகம், கலை, இலக்கியம், அரசியல் என அனைத்திலுமே பாரத தேசம் பல கண்டுபிடிப்புகளையும், உயரிய குணங்களையும் கொண்டிருந்தது என்பதை, உலகம் அறியாமல் இருந்தது. அரசியல் காரணங்களுக்காக, நமது உண்மையான வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்தன் விளைவு இது. காலம் உண்மையை உலகறியச் செய்கிறது.
கடந்த 20-−30 ஆண்டுகளாகவே, பாரத தேசத்தின் மகான்களை உலகம் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. மகரிஷி சுஷ்ருதர், பதஞ்சலி, சுவாமி விவேகானந்தர், ஆரியபட்டா, காளிதாசர், திருவள்ளுவர், பசவேஸ்வரா என இன்றைய தலைமுறைக்கே தெரியாத மகான்களின் திருஉருவச் சிலைகள் உலகெங்கும் திறக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அறிவியல், கலை, இலக்கியம், ஆன்மீகத்தில் பாரத தேசத்தின் பங்களிப்பை உலகம் கண்டு வியக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
ரஷ்யா
ரஷ்யாவின் மாஸ்கோவில் 1991 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை, அவரது இலக்கிய சாதனைகளையும், 1930 சோவியத் பயணத்தையும் நினைவுகூர்கிறது. இது பாரதம் – ரஷ்யா இடையேயான கலாச்சார நட்பின் சின்னமாக திகழ்கிறது. தாகூரின் உலகளாவிய தாக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய நினைவுச் சின்னம் இது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள Jardin Joan Miró-வில் தாகூரின் மற்றொரு சிலையும், அந்த தாக்கத்தை நினைவு கூர்கிறது.
இங்கிலாந்து
லண்டனில் உள்ள ஐயங்கார் யோகா மையத்தில், 1983 ஆம் ஆண்டு பதஞ்சலி முனிவர் சிலை நிறுவப்பட்டது. பெங்களூரில் உருவாக்கப்பட்ட இந்த கருங்கல் சிலையை, சிற்பி பத்மநாபச்சாரி வடிவமைத்தார். யோக சூத்திரங்களை உலகிற்கு வழங்கிய பதஞ்சலி “யோகத்தின் தந்தை” என போற்றப்படுகிறார். இந்தச் சிலை, பாரதத்தின் பழமையான ஆன்மிக மரபை உலகிற்கு எடுத்துச் செல்லும் சின்னமாக திகழ்கிறது.
சீனா
சீனாவின் ஷாங்காயில் 2010 ஏப்ரல் மாதத்தில், காளிதாசர் வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது. இது ஷாங்காய் தியேட்டர் அகாடமியில் அமைக்கப்பட்டுள்ள, உலக இலக்கிய நாயகர்களுக்கான தொடர் நினைவுச்சின்னங்களில் முதலாவதாகும், பாரதத்தின் சிறந்த இலக்கிய அறிஞராக கருதப்படும் காளிதாசருக்கு மரியாதை செலுத்தும் இந்தச் சிலை, பாரத – சீனா கலாச்சார உறவை வலுப்படுத்தும் சின்னமாக திகழ்கிறது.
பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டின் செர்ஜி (பாரிஸ் அருகில்) பகுதியில், 2024 நவம்பர் 3 அன்று, திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 2023 விஜயத்தின் போது, உறுதியளிக்கப்பட்ட படி இந்த சிலை திறக்கப்பட்டது. பிரான்ஸில் உள்ள தமிழ் கலாச்சார மையம், இந்த சிலையை வழங்கியது. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் போதனைகளை உலகிற்கு எடுத்துச் செல்கிற இந்தச் சிலை பாரத – பிரான்ஸ் கலாச்சார நட்பின் சின்னமாக திகழ்கிறது.
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில், 2024 ஏப்ரல் 13 அன்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இது பாரதம் – பிலிப்பைன்ஸ் இடையேயான 75வது தூதரக உறவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது. பாரத தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின் இந்த நிகழ்வை நடத்தினார். இந்த சிலை, திருவள்ளுவரின் இலக்கிய, தத்துவ பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் செல்கிறது. இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார, கல்வி உறவையும் வலுப்படுத்துகிறது.
மலேசியா
மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 2015 நவம்பர் 22 அன்று, ஸ்வாமி விவேகானந்தர் 12 அடி வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பாரதத்தின் ஆன்மிக, கலாச்சார அடையாளமாக போற்றப்படும் விவேகானந்தர் சேவை, உண்மை, ஒற்றுமை குறித்த போதனைகள் உலக சவால்களுக்கு முக்கியமானவை என வலியுறுத்தப்பட்டது.
இங்கிலாந்து
லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் 2015 நவம்பர் 14 அன்று, பசவேஸ்வரர் சிலை திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பசவேஸ்வரர் சமத்துவம், ஜனநாயகம், பெண்கள் முன்னேற்றம் போன்ற கருத்துகளை முன்னிறுத்தியவர். அவரது சமூக சீர்திருத்தப் பங்களிப்புகளுக்கான நிலையான நினைவுச் சின்னமாக இந்தச் சிலை திகழ்கிறது.
பிரான்ஸ்
பாரிஸ் யுனெஸ்கோ தலைமையகத்தில் 2016 ஏப்ரல் 5 அன்று, ஆர்யபட்டர் வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு “பூஜ்யம்” சர்வதேச மாநாட்டின் போது நடைபெற்றது. ஆர்யபட்டர் பாரதத்தின் முக்கிய கணித / வானியல் அறிஞர் என போற்றப்படுகிறார். இந்தச் சிலை, பாரதத்தின் அறிவியல் பாரம்பரியத்தை உலகம் போற்றுவதைக் குறிக்கிறது.
எடின்பர்க் நகரில் ஜூன் 19 அன்று திறந்த சிலை. “அறுவை சிகிச்சையின் தந்தை” என போற்றப்படும் சுஷ்ருதரின் பங்களிப்பை உலகம் வியந்து போற்றுவதைக் குறிக்கிறது. அவர் 300க்கும் மேற்பட்ட விதமான அறுவை சிகிச்சைகள், 124 கருவிகள் உருவாக்கம் போன்ற சாதனைகள் செய்தார். இந்த நிகழ்வு, பாரதத்தின் பழமையான மருத்துவ அறிவின் உலக மதிப்பை பறைசாற்றுகிறது.
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தின் CERN (European Organization for Nuclear Research) என்ற உலகப் புகழ்பெற்ற அணு ஆராய்ச்சி மையத்தில், நடராஜரின் (நடனமாடும் சிவன்) அழகிய வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு, பாரத அரசால் CERN மையத்திற்கு இந்த சிலை பரிசாக வழங்கப்பட்டது. நடராஜர் ஆனந்த தாண்டவ (cosmic dance) வடிவம் இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம், நிலைபேறு, அழிவு ஆகியவற்றை குறிக்கிறது. இது அண்டத்தில் நடைபெறும், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் சக்தி இயக்கத்தை அடையாளப்படுத்துகிறது.
நடராஜரின் நடனம், பிரபஞ்சத்தின் அடிப்படை துகள்களின் இயக்கம், மாற்றம் இவற்றுடன் ஒப்பிடப்படுகிறது. பாரதத்தின் ஆன்மிகமும், நவீன அறிவியலும் சங்கமிப்பதை இந்த சிலை பிரதிபலிக்கிறது.
சிலையின் அருகில், Fritjof Capra என்ற புகழ்பெற்ற இயற்பியலாளர் கருத்து இடம்பெற்றுள்ளது. அவர், நடராஜரின் நடனத்தை நவீன இயற்பியலின் துகள்களின் இயக்கத்துடன் ஒப்பிட்டுள்ளார். இதுபோல உலகமெங்கும் பாரதத்தின் தவப்புதல்வர்களின் அடையாளங்களை மேற்கத்திய நாடுகள் சிரமேற்கொள்ளத் தொடங்கி விட்டன. பாரதத்தின் தொன்மையான வரலாறுகளை தேடித் படிக்கின்றனர்.
அதேசமயம் பாரதத்தில் இத்தகைய பெருமைகளை அறிந்தவர்கள் மிகக்குறைவே. எடின்பர்கில் “அறுவை சிகிச்சைகளின் தந்தை” என்றழைக்கப்படும் மகரிஷி சுஷ்ருதர் அவர்களின் சிலை திறக்கப்பட்டது என்று சமூக வலைத்தளத்தில் பதிந்தால்கூட, இது “வாட்சப் யூனிவெர்சிட்டி வதந்தி” என்று புறந்தள்ளும் அளவுக்கு, இன்றைக்கு அறியாமை பரவிக்கிடக்கிறது. பாரதத்தின் கடந்த காலப் பெருமைகளை பேசுவதையே பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கை என்று ஒதுக்கும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நமது பாரதத்தின் உண்மையான வரலாறுகளை அறிவியல், ஆன்மிகம், கலை, இலக்கியத்தில் நமது பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு ஆதாரத்துடன் கொண்டு சேர்க்க நாம் முயற்சி செய்ய வேண்டும். வெகுஜன ஊடகங்களை, சமூக ஊடகங்களை இதற்கான தளமாக பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் மேல் பற்றுக் கொண்ட பலரும் முயற்சித்து வந்தாலும், பெரும்பான்மை சமூகத்திடம் அவை சென்று சேர்வதில்லை. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிப்போம்.
கட்டுரையாளர்: ச.மகாதேவன்