பழசே போ, புதுசே வா!

நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு, நீட் மறு தேர்வு, இது சம்பந்தமான வாத விவாதங்கள் என்று சில வாரங்களாக தேசமே அதிர்ந்து போனதாக பேசிக் கொண்டார்கள். மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை, அதற்கான தகுதித் தேர்வு… அவ்வளவுதான் விஷயம். 20 லட்சத்துக்கு மேல் மாணவ மாணவிகள் எழுதிய நீட் ஒரு வருடாந்தர நிகழ்வு, அவ்வளவுதான் சங்கதி.
எந்த விதத்திலும் முறைகேட்டுக்கே இடம் இல்லாமல் தேர்வு நடத்த வேறு வழி இல்லையா என்று யோசிப்பவர்கள் ஒரு சிலர் சலாகா பரீட்சை / கடிகா பரீட்சை என்ற தொன்மையான பாரத தேர்வு முறையை அடையாளம் காட்டுகிறார்கள். என்ன அது? தெரிந்தாவது வைத்துக் கொள்வோமே?
‘சலாகை’ என்பது தட்டையான குச்சி. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்வு வைக்க வேண்டும் என்றால், அந்தப் பாடநூலில் ஏதோ ஒரு இடத்தில் சலாகையை நுழைப்பார்கள். தேர்வு எழுதுபவர், தேர்வு நடத்துபவர் அனைவர் முன்னிலையிலும் இது நடக்கும். நூலைத் திறந்ததும் தென்படும் பக்கத்தில் உள்ள பாடம் பற்றி கேள்வி கேட்கப்படும். மாணவர் பதிலளிப்பார். தேர்ச்சி கணிக்கப்படும். ‘கடிகா’ பரீட்சை என்பது தொன்மையான குடவோலை முறையேதான். எல்லா கேள்விகளையும் சீட்டுகளில் எழுதி குடத்துக்குள் போடுவார்கள். குழந்தையை அழைத்து ஒரு சீட்டு எடுக்கச் செய்வார்கள். அந்த சீட்டில் உள்ள கேள்வி கேட்கப்படும். மாணவர் பதில் அளிப்பார். தேர்ச்சி கணிக்கப்படும்.
தேர்வுக்கோ, தகுதித் தேர்வுக்கோ மட்டுமல்ல, மருத்துவத்துக்கே கூட ஆரோக்கியமான மாற்றாக பாரதத்தின் சித்தாவும், ஆயுர்வேதாவும் நம்பிக்கையூட்டத் தொடங்கியுள்ளன. வேத நெறிப்படி ஆரோக்கியம் (Vedic Wellneess) என்ற சமீபத்தைய சொல்லாடல், நம் குடும்பங்களில் ஆகிவந்த (time tested) தொன்மையான மரபுகள் சார்ந்த நம்பிக்கைகளின் தொகுப்பு. அவற்றை மூடநம்பிக்கை என்று முத்திரை குத்திக் கொண்டிருந்தவர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதாவது, மருத்துவக் கல்வி, ‘மருத்துவம்’ என்பதற்கு நம் நாட்டில் அனைவருக்கும் மன நிறைவு தரும் விளக்கம் உலா வரத் தொடங்கியுள்ளது. அது போலவே கோடி கோடியாய் கொட்டி, கட்டிடம் கட்டி அங்கே தரப்படுவது தான் கல்வி என்ற மன நிலையிலிருந்தும் மக்கள் விலகி வருகிறார்கள். பாருங்களேன், இன்று எத்தனையோ நாடுகள் நமது மூதாதையரின் மேதைமையை சிலையெடுத்துப் போற்றுவதை இந்த வார அட்டைப்படக் கட்டுரை நயமாக சுட்டிக்காட்டுகிறது. அவ்வளவு மேம்பட்ட அறிவாற்றலை அன்று நமக்குத் தந்த கல்வி முறை எது என்று அறிவுலகத்தார் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். குருகுலக் கல்வி என்று விடை கிடைத்தால் யாரும் அதிர்ந்து போவதாயில்லை!