கம்யூனிஸ்டுகளை எதிர்த்து தீவிரமாக சங்கப் பணியாற்றிய அய்யப்பன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சங்கப் பணியும் செய்து, சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, அய்யப்பன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

கேரளம் மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில், 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ல், வண்டன்மேடு அருகே உள்ள மாலி என்ற கிராமத்தில், சடையன் கங்காணி – முனியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், அய்யப்பன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி மற்றும் நான்கு தங்கைகள்.
தனது பள்ளிக் கல்வியை ராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் மெமோரியல் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் ஏலக்காய் தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவரது தந்தை ஏலக்காய் தோட்டத்தில் வேலைக்காக ஆட்களை ஏற்பாடு செய்யும் கங்காணியாக இருந்தார்.
அய்யப்பன் ஜி, ஏலக்காய் தோட்ட வேலையில் இருந்தபோது, கம்யூனிஸ்ட் அமைப்பான எஸ்.எப்.ஐ. (SFI)யில் தீவிரமாக இருந்தார். 1980 ஆம் ஆண்டில், தனது வாலிப வயதில் கராத்தே கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டு, ஷாகாவிற்கு வரத் தொடங்கினார். கராத்தே மேல் இருந்த ஆர்வத்தால், தொடர்ந்து ஷாகா வந்து கற்றுக் கொண்டார். அப்போதைய உத்தமபாளையம் தாலுகா கம்பத்தை சேர்ந்த ஜெயப்ரகாஷ் ஜியின் வழிகாட்டுதலில், கம்யூனிஸ்ட் அமைப்பில் இருந்து விலகி, தீவிர சங்கப் பணிகளை மேற்கொண்டார். ஏழு நாள் சங்கப் பயிற்சியான பிராத்தமிக் வர்கவை, தந்தையின் எதிர்ப்பை சமாளித்து, அவரிடம் போராடி அனுமதி பெற்று, பயிற்சியை முடித்தார்.
பயிற்சி முடித்த உடனே ஷாகா ஆரம்பித்தார். ஷாகா நடத்த மிக அதிகமான எதிர்ப்பு இருந்தது. தொடர்ந்து ஷாகாவிற்கு வருபவர்களை மிரட்டினர். அதனால் ஷாகாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. எனினும் கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பையும் மீறி, தொடர்ந்து ஷாகா நடத்தி வந்தார். அப்போது சங்க அதிகாரிகளின் வழிகாட்டுதலில், தோட்ட வேலை செய்பவர்களுக்காக தொழிலாளர்களுக்கான பி.எம்.எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது.
தோட்டத்தின் முதலாளிகள் பெரும்பாலும் தமிழர்கள். அவர்களை அணுகி, கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பையும் மீறி ஷாகா நடத்தினார். கோயில் திருவிழாவிற்கு டெண்டர் எடுப்பது, மிகவும் சவாலாக இருக்கும். மற்றவர்கள் அதிகளவிற்கு எடுத்து, அதில் நிறைய லாபம் பார்ப்பார்கள். ஷாகா மூலம் ஸ்வயம்சேவகர்களை தயார் செய்து, மிகக் குறைந்த விலையில் டெண்டர் எடுத்து, கிணற்றை சுத்தம் செய்தல், பந்தல் அமைப்பது, சுண்ணாம்பு அடித்தல் போன்ற உழவாரப் பணியை மேற்கொள்வார்கள். இதனால் கவரப்பட்ட மாலி கிராம மக்கள், அதிக அளவில் ஷாகா வந்து சங்கத்திற்கு அறிமுகமாகினர். அதனால் அந்த கிராமமே சங்கமயமானது.
அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கரசேவைக்காக செங்கல் சிறப்பு பூஜை, நாடு நெடுகிலும் நடத்தப்பட்டது. அதனுடைய ஓர் அங்கமாக, அய்யப்பன் ஜி வாழ்ந்த மாலி கிராமத்தில், நடத்தப்பட்ட சிறப்பு பூஜைக்கு கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்துக்கள் கோயிலில் செங்கலை வைத்து பூஜை செய்தால், கம்யூனிஸ்டுகள் அதற்கு போட்டியாக லெனின் படத்தை வைத்து பூஜை செய்து, பஜனைப் பாடல்கள் பாடுவார்கள். கம்யூனிஸ்டுகள் இவ்வாறு செய்தது, பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியதால், நாளடைவில் அவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டனர்.
கிராமத்தில் ஏதேனும் வீட்டில் துக்க நிகழ்வுகள் நடந்தால், ஆரம்பம் முதல் இறுதி வரை கூட இருந்து, ஸ்வயம்சேவகர்கள் அனைத்து விதமான பணிகளையும் மேற்கொள்வார்கள். அதே போல் கிராமத்தில் ஏதேனும் வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள். இதனால் மாலி கிராமத்தில் இருந்த 200 குடும்பங்களும், சங்கத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டு வாழ்ந்தனர்.
கோயில் திருவிழாவுக்கு, போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ஊர் மக்களே மறுத்து விடுவார்கள். எந்தவித பாதுகாப்புமின்றி, கட்டுக்கோப்பாக நல்லபடியாக திருவிழா நடந்து முடியும்.
இரண்டு சமுதாயங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டபோது, இரு சமுதாயங்களைச் சேர்ந்த தலைவர்களிடமும் பேசி, பிரச்சினைக்கான தீர்வைக் கண்டனர். ஒரு ஊரில் நல்லபடியாக ஷாகா நந்தால், என்ன நடக்கும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே உதாரணம்.
குடும்பச்சூழல் காரணமாக தமிழகத்திற்கு தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வடுகசாத்து கிராமத்திற்கு மாறுதலாகி வந்தார், அய்யப்பன் ஜி. அங்கு தோட்டம் வேலை செய்து பிழைப்பு நடத்தியவர், தமிழகம் வந்தபிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்தார்.
வந்தவாசி ஜில்லா கார்யவாஹ், வேலூர் ஜில்லா கார்யவாஹ், வேலூர் கோட்டம் கார்யவாஹ் என பல பொறுப்புகள் வகித்த பின்னர், தற்போது வடதமிழக சமுதாய நல்லிணக்க மாநில இணை பொறுப்பாளராக சங்கப் பணியை செய்து வருகிறார்.
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை கேரளாவிலும், மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை 2015ல் நாக்பூரிலும் முடித்துள்ளார்.
அய்யப்பன் ஜியின் மனைவி புவனேஸ்வரி அம்மாள். அவர்களுக்கு விஷ்ணு பாரத், ஞான பிரகாஷ் என்ற இரண்டு மகன்களும், சஹனா தேவி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
தனது மனைவியை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் இருந்த போதிலும், அனைத்து சங்க நிகழ்ச்சிகளுக்கும், சங்கப் பயிற்சி முகாம்களிலும் தவறாது கலந்து கொள்வார். புவனேஸ்வரி அம்மாளும், அய்யப்பன் ஜியின் சங்கப் பணிக்கு, எப்போதும் உறுதுணையாகவே இருப்பார். கேரளாவில் இருந்து மருத்துவ உதவிக்காக யாரேனும் தமிழகம் வந்தால், அவர்களை கவனித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அய்யப்பன் ஜி மேற்கொண்டு வருகிறார்
தனது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, சமுதாயப் பணிகளையும் செய்து வரும் அய்யப்பன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

 

அ. ஓம்பிரகாஷ்