பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்., குறித்த கருத்து ‘ஸ்டிக்கர்’ ஒட்ட அறிவுறுத்தல்

வினியோகிக்கப்பட்ட பாடப் புத்தகங்களில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பற்றிய கருத்தை, ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு அறிவுறுத்தி இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு பாடப்புத்தக கழகம் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், மாநில செயலர், பி.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு:சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பாடுபடுகிறது. 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான, சமூக அறிவியல் பாடத்தில், ‘சுதந்திர போராட்டத்தின் போது, ஹிந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம், முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை எடுத்தன’ என, கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து பொய்யானது.எனவே, சமூக அறிவியல் பாடத்தில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., குறித்த, இந்தப் பகுதியை நீக்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆதிகேசவலு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:பாடப்புத்தகங்களில் உள்ள இந்த வார்த்தையை மறைக்கும் வகையில், அதன் மேல், ஸ்டிக்கர் ஒட்டும்படி, பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.முதன்மைக் கல்வி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இந்த தகவலை தெரிவிக்கும்படியும், அறிவுறுத்தப் பட்டுள்ளது. இனிமேல் அச்சிடப்படும் புத்தகங்களில், இந்த வார்த்தை இடம் பெறாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.