மராட்டிய சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பா.ஜனதா கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கட்சிக்காக பிரசாரம் செய்தார்.
பிரசார பொதுக்கூட்டத்தில், நான் பா.ஜனதா தொண்டர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை அகற்றியதுடன் நமது பணி முடிந்துவிடவில்லை. நமது பணி தற்போது தான் தொடங்குகிறது. தேசியவாதம் மற்றும் முன்னேற்றத்தின் அத்தியாயத்தில் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே நமது இலக்காகும்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 370 மற்றும் 35 (ஏ) பிரிவுகளை நீக்கிய விவாதத்துடன் மராட்டிய தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக காங்கிரஸ் பார்க்கிறது. ஆனால் நாங்கள் அதை அப்படி பார்க்கவில்லை.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு திடீரென பாகிஸ்தானுடன் தவறான நேரத்தில் போர் நிறுத்தம் அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது. இது நேரு செய்த மிகப்பெரிய தவறாகும். காஷ்மீர் பிரச்சினையை நேருவுக்கு பதிலாக சர்தார் வல்லபாய் பட்டேல் கையாண்டிருக்க வேண்டும்.
மேலும் இந்த பிரச்சினை ஐ.நா. வரை போக நேரு காரணமாக அமைந்துவிட்டார்.
1950-ல் சர்தார் வல்லபாய் பட்டேல் இறந்த பிறகு, ஷேக் அப்துல்லாவுடன் டெல்லி ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதுவே 370-வது பிரிவின் அடித்தளமாக அமைந்தது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த மன்மோகன் சிங் மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகிய இருவரும் பிரதமர் ஆனார்கள். எல்.கே.அத்வானி துணை பிரதமர் ஆனார். ஆனால் பிற மாநிலங்களில் இருந்து காஷ்மீர் சென்றவர்களுக்கு 370-வது பிரிவு நீக்கப்படும் வரை ஒருபோதும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. இன்று, இந்த மக்கள் வாக்களிக்க முடியும்.
370-வது பிரிவை ரத்து செய்வதை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வெட்கமின்றி எதிர்க்கின்றன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி துல்லிய தாக்குதல், புல்வாமா விமான தாக்குதல் உள்ளிட்டவற்றிற்கு ஆதாரம் கேட்கிறார். ராகுல் காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரசாரத்திற்கு வரும்போது, 370-வது பிரிவு ரத்தை ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என்று அவர்களிடம் கேளுங்கள்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் எல்லையில் ஒரு குண்டு சத்தம் கூட கேட்கவில்லை. வரும் நாட்களில் அங்கு அமைதியின்மை ஒருபோதும் ஏற்படாது. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.
370-வது பிரிவை ரத்து செய்ததற்கான பின்னணி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இந்த நாட்டின் கிரீடமான காஷ்மீரை விரைவில் பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிப்போம் என நாங்கள் அவர்களுக்கு உறுதி அளிக்கிறோம் என்றார்.