பலர் அறியாத பக்கம் ஹிந்துத்துவ தாகூர்

பாரதத்தின் தேசிய கீதமான ஜனகணமன என்ற பாடலை இயற்றியவர், நோபல் பரிசு வென்றவர். இது தான் ரவீந்திரநாத் தாகூர் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது.   ஆனால்  அவர் உள்ளூர ஹிந்துத்துவ சிந்தனயாளர் என்பது பலர் கவனத்திற்கும் வரவில்லை.

“ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுக்குள் சண்டையிட்டு ஒருவரையொருவர் முடித்துக் கொள்ள மாட்டார்கள், மாறாக ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்றும், அந்தப் பாதை ஹிந்து ராஷ்ட்ரம்” என்றும் தாகூர் குறிப்பிட்டிருப்பதை ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத், தாகூரின் ‘சுதேசி சமாஜ்’ நூலை மேற்கோள் காட்டி பேசுகையில் தெரிவிக்கிறார்,

ரவீந்திரநாத் தாகூர் தனது கட்டுரை ஒன்றில், தேசியம் என்பதை ‘ஹிந்து’, ‘ஹிந்து நாகரிகம்’ என்று மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்துகிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்எஸ்எஸ்) நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார், இரண்டாவது சர்சங்கசலக் ஸ்ரீ குருஜி உள்ளிட்ட பெரியவர்களின் எண்ணங்களுக்கு மிக அருகில் அவரது ராஷ்ட்ரீயக் கருத்து வந்தமைகிறது

‘பாரத வர்ஷீய சமாஜ்’ என்ற தனது கட்டுரையில் ரவீந்திரநாத் தாகூர், “மொழிகள், சாதிகள், மதங்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஹிந்து நாகரிகம் விதவிதமான ஏராளமான மக்களுக்கு தங்குமிடம் வழங்குவதன் மூலம் பல வழிகளில் தன்னைத்தானே இழந்து விட்டது; ஆனால் இன்னும் யாரையும் கைவிடவில்லை…” என்று நம்பிக்கை தருகிறார்.

அதே கட்டுரையில், மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல், நமது ராஷ்ட்ரக் கருத்தில் சமுதாயமே பிரதானம் என்கிறார்.   மற்ற நாடுகளில் தேசம் (அரசியல் ரீதியாக) பல்வேறு புரட்சிகள் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் வெற்றி பெற்றுள்ளது. – நம் நாட்டில் சமுதாயமே நீண்ட காலமாக அனைத்து வகையான நெருக்கடிகளிலும் தன் சொந்த வழிமுறைகளால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டுள்ளது.”

அவர் “ப்ராச்ய ஓ பாஸ்சாத்ய” (கிழக்கும் மேற்கும்) என்ற கட்டுரையில்,  “இங்கே சமுதாயம் ஹிந்து நாகரிகத்தில் வேர் கொண்டுள்ளது, ஐரோப்பிய நாகரிகத்திற்கோ அரசுதான் ஆதாரம்” எனக் குறிப்பிட்டார்.   “ஹிந்து நாகரிகம் அரசால் திணிக்கப்பட்ட ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. நாம் சுதந்திரமாக இருந்தாலும் சரி, அடிமைப்படுத்தப்பட்டாலும் சரி, நமது சமுதாயத்திற்குள் இருந்து ஹிந்து நாகரிகத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையை நாம் கைவிட முடியாது.”    பாரதிய அல்ல, ஹிந்து என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார். ‘ஆத்ம பரிச்சய்’ (சுய அறிமுகம்) என்ற கட்டுரையில், “முஸ்லீம் என்பது ஒரு குறிப்பிட்ட மதம்; ஹிந்து என்பது ஒரு குறிப்பிட்ட மதம் அல்ல. அது பாரதத்தின் தேசியத்தின் சிகரம்” என்று வலியுறுத்துகிறார்.

கவிஞரின் இந்த பதிவுகள் பாரதத்தின் ராஷ்ட்ரிய (தேசிய) அமைப்பை அவர் ஹிந்துவாகக் கண்டார் என்பதை தெளிவாக்குகின்றன. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் பாரதத்தின் ராஷ்ட்ரீய சமுதாயம் (தேசத்தின் அனைத்து பண்புகளையும் உள்ளடக்கிய சமுதாயம்) ஹிந்து என்று கூறுகிறது; அதாவது பாரதம் ஒரு இந்து ராஷ்ட்ரம் என்கிறது பிறகு அது எப்படி ஒரு மத  அரசு அல்லது போப் / கலீபா என்ற அமைப்பு போன்றது என்று கூறி சங்கத்தின் கருத்தை எதிர்ப்பது கவிஞரையே எதிர்ப்பதாகும். சங்கத்தின் இந்த நேர்மறையான முன்மொழிவும் முயற்சியும் கவிஞரின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் பிரதிபலிப்பாகவே காணப்படுகிறது.

ஒரு முறை ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளில், ஆர்.எஸ்.எஸ் சஹசர்கார்யவாஹ் டாக்டர் மன்மோகன் வைத்ய எழுதிய ‘த எடர்னல் ஹிந்து ராஷ்ட்ரா’ என்ற கட்டுரை கவனம் கவர்கிறது. நமது உலகக் கண்ணோட்டம் ‘ஹிந்து’ என்று அறியப்படுகிறது. அதுதான் நமது தேசிய அடையாளம். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நமது உலகக் கண்ணோட்டம் பற்றிய தன் புத்தகத்திற்கு ‘வாழ்க்கை குறித்த ஹிந்துப் பார்வை’ என்று பெயரிட்டார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ‘சுதேசி சமாஜ்’ என்ற நூலில் ‘பாரதத்தின் அடிப்படை தர்மம் வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமையை நிலைநாட்டுவது. பாரதம் வேற்றுமையை விரோதமாக கருதி மற்றவர்களை எதிரியாகப் பார்ப்பதில்லை. பாரதத்தின் இந்த அரிய பண்பு காரணமாக, ஒவ்வொரு புதிய மோதலும் நம்மை விரிவுபடுத்த உதவும்’ என்று பதிவிட்டிருப்பதை வைத்ய சுட்டிக்காட்டுகிறார்.

ரவீந்திரநாத் தாகூர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், வீர் சாவர்க்கர் அன்னி பெசன்ட் போன்ற தலைவர்கள் 1921 ஆம் ஆண்டு மலபாரில் ஹிந்துக்களின் படுகொலையில் முடிந்த மாப்ளா கலவரத்தின் பின்னணியில் உள்ள உண்மையான வகுப்புவாத நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தாலும், மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலால் உந்தப்பட்டு, உண்மைகளைத் தலைகீழாக மாற்றி, ஆங்கிலேயர்களுக்கும் அவர்களின் நிலப்பிரபுத்துவ ஆதரவாளர்களுக்கும் எதிரான சுதந்திரத்திற்கான ஒரு வழக்கமான போராட்டமாக திரித்தார்கள். மாப்ளா கலவரக்காரர்களின் நிஜ நோக்கம் குறித்து ‘சமஸ்யா’ என்ற கட்டுரையில் ஆணித்தரமாக தன் கருத்தை தாகூர்  வெளியிட்டுள்ளார்.

ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லாதது குறித்து தாகூர் கவலைப்பட்டார், செமிட்டிக் மதங்களின் அழிவுகரமான அலைகளுக்கு எதிராக ஹிந்து ஒற்றுமையே அரண் என்பது அவர் கருத்து.

ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தேதி: மே 7