ஹிந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் ராமகோபாலன் அவர்கள் நிகழ்த்திய உணர்ச்சிமிக்க சொற்பொழிவில் நமது சகோதரர்கள் வஞ்சிக்கப்பட்டு மதமாற்றப்படுகின்ற வேளையில் நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது என்றும் இந்த சூழ்நிலை என்னுடைய உள்ளத்தை பிழிந்து என்னை ரத்த கண்ணீர் வடிக்க செய்யும் பொழுது என்னை யாராகிலும் வகுப்புவாதி என்று கூறினாலும் கூட அதை நான் பாராட்டாக எடுத்துக் கொள்வேன் என்றும் கூறினார்.
என்னுடைய வீடு பாதுகாக்கப்படாமல் இருந்தது என்ற காரணத்திற்காக திருடன் வந்து திருடி செல்வது எப்படி நியாயமாகும் என்றார் அவர். ஹரிஜனங்கள் சமமாக நடத்தப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் இன்று வளர்ந்து வருகின்ற தலைமுறையினர் இந்த ஜாதி பிரிவினைகள் மற்றும் தீண்டாமை கொடுமைகளை உடைத்தெறிந்து கொண்டு தான் வருகின்றனர். இந்த நிலையில் ஹரிஜனங்கள் பிற்போக்காளர்களாகிய சில முதியோர்களை பொருட்படுத்தாமல் பொறுமையோடு இருக்க வேண்டும். படித்த ஹரிஜனங்களில் சிலர் இந்த நிலைமையை நன்குணர்ந்தும் தங்களுடைய சுயநலன்களுக்காக முஸ்லிம்களுடைய ஏஜென்ட்களாக செயல்படுவது தேசத்துரோகமாகும் என்றார் அவர்.
பண பலத்தால் இன்று இஸ்லாமியர்கள் பெற்றுள்ள பலன்கள் நிலைத்து நிற்க போவதில்லை என்றும் அவர்கள் இந்த லாபத்துடன் தப்பித்து செல்ல முடியாது என்றும் ராமகோபாலன் எச்சரித்தார்.
காங்கிரஸ் (இ) கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் இளையபெருமாள் பேசுகையில் ஹிந்து சமுதாயத்தில் ஒருமைப்பாடு ஏற்படுத்தி அதை பாதுகாக்க வேண்டும் என்றார். ஹிந்து சமயத்தில் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர் இடையே தான் இன்று மனக் கசப்பும் மோதல்களும் ஏற்படுகின்றன என்றும் இதை நீக்க அனைத்து ஹிந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி அடிகளார் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஹிந்து ஒருமைப்பாடு உறுதிமொழி எடுக்க செய்தார்.
‘வேதத்தின் குரல் ‘பேதத்தின் குரலாக மாறக்கூடாது என்றார் அவர். பிறருடைய உரிமைகளை ஒப்புக் கொள்கின்றவர்கள் தான் மனிதர்களாக இருக்க முடியும் என்றும் அவர் கூறினார். இராமநாதபுரம் கலவரத்தின் போது தங்களுடைய தந்தையர்களை இழந்த சிறுவன் மற்றும் ஒரு சிறுமியை தமது மடம் தத்து எடுத்துக் கொள்கிறது என்று அறிவித்த அடிகளார் அடுத்த தலைமுறையிலாவது இதுபோன்றது துரதிஷ்டகரமான கலவரங்கள் நிகழாது இருக்கட்டும் என்று வேண்டிக் கொண்டார்.
போரூர் ஸ்ரீ இராமசுவாமி அடிகளார் பேசுகையில் இந்த ஜாதி பிரிவினைகளை போக்க மாபெரும் ஆச்சாரியார்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும் அனைத்து ஹிந்துக்களும் பொதுவான ஒரு அமைப்பு ஏற்படுத்தி செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
திருப்பனந்தாள் ஆதீன சுவாமிகள் பேசுகையில் ஹிந்து சமயம் ஒரு பெரும் கடல் போன்றது என்றும் அதில் வந்து கலக்கின்ற அனைத்து நதிகளையும் அது ஏற்றுக்கொள்ளும் என்றும் ஆனால் அந்த கடலே பொங்கி எழுந்தால் யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். பாரத தேசத்தில் கட்டாய மதமாற்றம் என்றுமே நிலைத்திருந்தது இல்லை என்றும் தமிழகத்தில் ஏழாவது நூற்றாண்டில் மன்னர்களின் உதவியுடன் சமயத்தை பரப்பிய சமணர்கள் பிறகு இடந்தெரியாமல் போய்விட்டனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். ஹிந்துக்கள் எழுந்தால் அவர்களை எந்த சக்தியும் தடுக்க முடியாது என்றார்.
கோவை கெளமார மடத்தைச் சார்ந்த ஸ்ரீ சுந்தர சுவாமிகள் பேசுகையில் ஹரிஜனங்களுக்கு ஆலய பிரவேச உரிமை வழங்கிய பின்னும் பலர் பழங்கால முறையை பின்பற்றி கோவில்களுக்கு வராமல் இருக்கின்றனர். ஆகையினால், ஹரிஜனங்கள் அல்லாத ஹிந்துக்கள் ஹரிஜனங்களுடைய விழாக்களில் கலந்து கொண்டு அவர்களுடைய கோயில்களுக்கு சென்று அவர்களையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ஸ்ரீ தருமபுர ஆதீனம் நிகழ்த்திய தலைமை உரையில் இன்று நடைபெற்றுள்ள மதமாற்றங்கள் லண்டன் மற்றும் ஜெனிவாவை மையமாகக் கொண்ட இஸ்லாமிய ஸ்தாபனம் ஒன்றின் சதித் திட்டத்தின் விளைவுத்தான் என்று கூறினார். மீனாட்சிபுரம் போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஹிந்து- − முஸ்லிம் ஒற்றுமையை குலைத்து விடும் என்றார் அவர். சமய சார்பற்ற தன்மையின் பேரில் மத்திய அரசு இந்த பிரச்சினையை பொருட்படுத்தாமல் விட்டு விடக்கூடாது என்றார் அவர். சுவாமிகளுடைய முடிவுரையில் மகாத்மா காந்தி எந்த நோக்கத்துடன் ஹரிஜன் என்கிற பெயரை வழங்கினாரோ அந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்களுடைய மறு பெயராக ஹரிஜன் எனும் சொல் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஏழை மற்றும் பின் தங்கியவர்கள் ஹரிஜனங்களில் மட்டும் இல்லை என்றும் எல்லா வகுப்பினரிடையும் அவர்கள் காணப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகளை மதமாற்ற வேண்டும் என்று ஹிந்துக்கள் கருதவில்லை என்று முஸ்லிம்களுக்கு அவர் நினைவுறுத்தினார். பாகிஸ்தானத்திலும், பங்களாதேஷிலும் கூட்டுக் கொலை மற்றும் சமயக் கொடுமைகள் நடக்கின்ற பொழுது இஸ்லாமியர்கள்
சமத்துவம் கூறிக்கொண்டு ஹிந்து சமுதாயத்திலே குழப்பம் விளைவிப்பது அறிவீனம் என்றார்
அவர்.
ஹிந்து சமுதாயத்தில் ஒரு பெரும் விழிப்பும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்த இம்மகாநாடு வழி வகுத்துள்ளது, சுவாமி விவேகானந்தர் அன்று முழங்கிய ‘’எழு மின்; விழுமின்’’ எனும் அறைக்கூவல் இன்று ராமநாதபுரத்தில் மீண்டும் எதிரொளித்துள்ளது.
− ஆகஸ்டு 7, 1981
விஜயபாரதம் வார இதழிலிருந்து