பரிதாபாத் அல்பலா பல்கலைக்கழகம் பயங்கரவாத கேந்திரமே

அல்பலா அறக்கட்டளை சார்பில் பரிதாபாத்தில் உள்ள தவுஜ் என்ற இடத்தில், அல்பலா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 2014ல் நிறுவப்பட்ட இதற்கு, 2015ம் ஆண்டு யு.ஜி.சி அங்கீகாரம் அளித்தது. இந்தப் பல்கலைக்கழக வளாகம் 70 ஏக்கர் பரப்பில் விரிந்து பரந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், மேலாண்மை உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.

இந்தப் பல்கலைக்கழகம் 650 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையையும் நடத்தி வருகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் விடுதிகள் உள்ளன. உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இங்கு படிக்கின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக அறக்கட்டளையின் நிறுவனர் ஜாவத் அகமது சித்திக் உள்ளார். துணை வேந்தராக பேராசிரியர் புபிந்தர் கெளர் ஆனந்த் உள்ளார். பதிவாளராக டாக்டர் முகமது பர்வேஷ் உள்ளார். நவம்பர் 10ம் தேதி, 2900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து டாக்டர் முசாமில் ஷகில், அடில் அகமது ராதர், பெண் மருத்துவர் ஸாகின் சாகித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜெய்ஸ் – இ – முகம்மதுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது என்பது புலனாய்வு மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல்கலைக் கழகத்தில் உள்ள பரிசோதனைக் கூடங்களில் பயன்படுத்தப் படும் ரசாயனங்களை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தி உள்ளனர். பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான கேள்வி எழுந்துள்ளது. பரிதாபாத் போலீஸ் கமிஷனர் சதேந்திர குமார் குப்தா இவ்விவகாரம் குறித்து துருவித் துருவி விசாரித்து வருகிறோம். விரைவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறித்தோ, தங்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 3 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தோ, அபலா பல்கலைக்கழகம் என்ன சொல்கிறது? பல்வேறு அம்சங்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, பரிதாபாத் அல்பலா பல்கலைக் கழகம் பயங்கரவாத கேந்திரமாக இயங்கி வந்துள்ளது உறுதியாகிறது.

அறக்கட்டளை வாயிலாக நடத்தப்படும் அல்பலா பல்கலைகழகத்தின் மீது தீராப் பழி சுமத்தப்பட்டுள்ளது. ஒரு பல்கலைக்கழகம் பயங்கரவாத கேந்திரமாக செயல்பட்டு வந்ததை, சாதாரண விஷயமாக கடந்து சென்று விட முடியாது.

இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வளைகுடா நாடுகளிலிருந்தும் கணிசமான அளவுக்கு பணம் வந்துள்ளது என்பதும் புலனாய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் அல்பலா பல்கலைக்கழகம் சர்வதேச தொடர்புகளுடன் பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக செயல்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. வரும் வாரங்களில் இதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து

தமிழில் : நிகரியவாதி