நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் எல்லைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சீமா ஜாக்ரண் மஞ்ச் பற்றி அறிவோம்…
“சீமா” என்றால் “எல்லை” , “ஜாக்ரண்” என்றால் “விழிப்புணர்வு” , “மஞ்ச்” என்றால் “அமைப்பு” என்று அர்த்தமாகும். சீமா ஜாக்ரண் மஞ்ச் (SJM) என்றால் “எல்லைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பு என்பது பொருள்.ஒரு நாட்டினுடைய எல்லைகள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அந்த நாடு பாதுகாப்பானதாகவும், வளரும் நாடாகவும் இருக்க முடியும். மேலும் ஒரு நாட்டின் எல்லை பாதுகாப்பில் அந்த நாட்டின் எல்லையோர கிராமங்களில் வாழும் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
நம் தேசத்தின் முதல் பாதுகாவலர்களான எல்லையோர கிராமங்களில் வாழும் மக்களிடையே, தேசபக்தி, ஒற்றுமை மற்றும் எல்லை பாதுகாப்பு விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்துவதே இவ்வமைப்பின் நோக்கம் ஆகும். இவ்வமைப்பானது 1985ம் ஆண்டு ஸ்ரீ ராமர் அவதரித்த ராம நவமி (மார்ச் 31) அன்று ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில், தேசிய அளவில் நிறுவப்பட்ட ஒரு சமூக – கலாச்சார மற்றும் தேசபக்தி அமைப்பாகும்.

நமது பாரத தேசத்தின் எல்லைகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது. சமுத்திரத்தை எல்லையாக கொண்ட பகுதிகள் “சாஹர சீமா” என்றும் நிலப் பகுதியை எல்லையாக கொண்ட பகுதிகள் “ஜமீன் சீமா” என்றும் பிரிக்கப்படுகிறது. கங்கா சாஹரம் என புராணங்களில் வர்ணிக்கப்பட்ட தற்போதைய அரபிக்கடல் பகுதியில் குஜராத் கடற்கரை 2340.62 கி.மீ, மஹாராஷ்ட்ரா 877.97 கி.மீ, கோவா 193.95 கி.மீ, கர்நாடகா 343.30 கி.மீ, கேரளா 600.15 கி.மீ எல்லைகளாக உள்ளன.
புராணங்களில் கங்கா சாஹர் என்று அழைக்கப்பட்ட தற்போதைய வங்காள விரிகுடா கடற்கரையில் தமிழ்நாடு 1068.69 கி.மீ, புதுச்சேரி யூனியன் பிரதேசம் 42.65 கி.மீ, ஆந்திரா 1053.07 கி.மீ, ஒடிஸா 574.71 கி.மீ, மேற்கு வங்கம் 727.02 கி.மீ, டையூ & டாமன் 54.80 கி.மீ நீளம் கொண்டதாகும். இவை தவிர பாரதத்திற்கு சொந்தமான தீவுகளான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 3083.50 கி.மீ மற்றும் லட்சத்தீவுகள் 144.80 கி.மீ ஆகிய 17,105.23 கி.மீ நீளம் கொண்ட கடற்கரையை எல்லைகளாக கொண்டது நமது பாரத தேசம்.
நிலப்பரப்பு எல்லையானது, மேற்கே குஜராத்தின் பாகிஸ்தான் எல்லை துவங்கி, கிழக்கே மேற்கு வங்கத்தின் பங்களாதேஷ் எல்லை வரை பரவியுள்ளது. குஜராத்தில் பாகிஸ்தான் எல்லை 508 கி.மீ, ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லை 533 கி.மீ, பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை 533 கி.மீ, ஜம்மு & காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை 1225 கி.மீ, லடாக்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீன எல்லை 1703 கி.மீ, இமாச்சல பிரதேசத்தில் சீன எல்லை 200 கி.மீ, உத்தரகாண்டில் நேபாளம் மற்றும் சீன எல்லை 608 கி.மீ, உத்தரப்பிரதேசத்தில் நேபாள எல்லை 560கி.மீ, பிகாரில் நேபாள எல்லை 729கி.மீ, மேற்கு வங்கத்தில் நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் எல்லை 2500 கி.மீ, சிக்கிம் மாநிலத்தில் நேபாளம் சீனா மற்றும் பூடான் எல்லை 351 கி.மீ, அசாம் மாநிலத்தில் பூடான் மற்றும் பங்களாதேஷ் எல்லை 530 கி.மீ, அருணாச்சல பிரதேசத்தில் சீனா பூடான் மற்றும் மியான்மர் எல்லை 1863 கி.மீ, நாகலாந்து மாநிலத்தில் மியான்மர் எல்லை 215 கி.மீ, மேகாலயா மாநிலத்தில் பங்களாதேஷ் எல்லை 443 கி.மீ, மிசோராம் மாநிலத்தில் பங்களாதேஷ் மற்றும் மியான்மர் எல்லை 828 கிமீ, மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் எல்லை 398 கி.மீ, திரிபுரா மாநிலத்தில் பங்களாதேஷ் எல்லை 856 கி.மீ ஆகிய 15,107 கி.மீ நீளம் கொண்டதாகும்.

எல்லைகளில் வாழும் மக்களுக்கு எல்லை பாதுகாப்பு விழிப்புணர்வையும், எல்லைகளில் தேசத்தை அரண் போல் காத்து நிற்கும் பாதுகாப்பு படை (BSF) போன்ற அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி இணைந்து செயல்பட்டு வருகிறது. சீமா ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் சேவையானது, ஏப்ரல் 22, 2025 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, மே 7, 2025 அன்று நம் பாரத பிரதமர் மற்றும் ராணுவ அமைசர் அவர்களின் வழிகாட்டுதலில், பாரத ஆயுதப்படைகள் (IAF/இராணுவம்/கடற்படை) நடத்திய ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் போது எல்லை புற மக்களுக்கும், பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ஒரு சிறு உதவியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
இத்தகைய சீமா ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் கிளை தமிழகத்தில் 2009ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தமிழக எல்லையானது; தமிழக – ஆந்திர எல்லையான தடாவிலிருந்து துவங்கி, தமிழக – கேரள எல்லையான நீரோடி வரை ஆகும். 15 கடற்கரை மாவட்டங்களில் அமைந்துள்ள 608 மீனவ கிராமங்களில், சீமா ஜாக்ரண் மஞ்ச் அமைப்பு இலக்கு நோக்கி பயணிக்கிறது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க அமைப்பின்படி வட தமிழகம், தென் தமிழகம் என பிரித்து, வட தமிழகத்தில் பாண்டிசேரி உட்பட 5 மாவட்டங்களிலும், தென் தமிழகத்தில் காரைக்கால் உட்பட 10 மாவட்டங்களில், “அகில பாரதிய மீனவர் பேரவை” என்கிற பெயரில், நமது பணி நடைபெறுகிறது. தென் தமிழகத்தில் மீனவ சமுதாயத்தில் நற்பண்புகளை ஏற்படுத்த சமுத்திர பூஜை, ஸ்ரீ வேத வியாஸர் ஜெயந்தி, ஆலயங்களில் நவராத்திரி கொலு வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், சிவலிங்க பூஜை போன்ற ஆன்மீக விழாக்களும் மற்றும் பாரதமாதா பூஜை, ரக்ஷா பந்தன் போன்ற தேசிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றது. சர்வதேச யோகா தின நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.

வட தமிழகத்தில் சமுத்திர பாரதி அமைப்பின் மூலம்
1. கிராம சமிதிகள், ஜில்லா மற்றும் மாநில குழுக்கள் அமைப்பது.
2. தேசிய வீரர்கள், தியாகிகள், மாவீரர்கள் தினம் கொண்டாடுவது.
3. மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் சமுத்திர பூஜை நடத்துவது.
4. பாரத மாதா பூஜை குறிப்பிட்ட தினத்தன்று நடத்துவது.
5. ரக்ஷா பந்தனை கிராமங்கள் முழுவதும் கொண்டாடுவது.
6. பெண்களைக் கொண்டு மாதாந்திர விளக்கு பூஜை நடத்துவது.
7. கோயில்கள் இல்லாத ஊரில் கோயில்கள் கட்டிக் கொடுப்பது, இதுவரை 29 கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
8. கடலோர காவல்படை, மத்திய மாநில மீனவளத் துறைகளோடு தொடர்பை ஏற்படுத்துவது.
9. கடல் சீற்றம் ஏற்படும் நாட்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிப்பது.
10. பொருளாதார முன்னேற்றத்திற்காக மீனவ பெண்கள் குழுக்களை அமைப்பது.
11. மத்திய அரசு நலத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் மீன் மதிப்பு கூட்டு பொருட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான (Value Added) பயிற்சிகளை ஏற்பாடு செய்வது.
12. மீனவர்கள் தவிர கடற்கரை கிராமத்தில் வாழும் பழங்குடி மற்றும் பட்டியலின மக்களிடையே சேவை புரிவது.
13. தந்தையை இழந்த குழந்தைகளுக்கு பள்ளி படிப்புக்கான ஊக்கத்தொகை அளித்து வாழ்வுரிமை காப்பது.
14. மருத்துவ முகாம்கள் நடத்துவது மற்றும் எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவுவது.
15. மிகவும் ஏழ்மையான குடும்பத்தினரின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் கொடுப்பது.
16. தீபாவளி மற்றும் பொங்கல் தினத்தன்று குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள், பட்டாசுகள் வழங்குவது.
17. கிராமங்களில் பண்பாட்டுக் கல்வி மையம் / மாலை படிப்பகம் நடத்துவது.
18. கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் தந்தை இழந்த குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு ஏற்பாடு செய்வது.
19. வருடந்தோறும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் தனித்தனியாக நடத்துவது.
20. கணினி மற்றும் தையல் பயிற்சி மையங்கள் அமைப்பது. ஏற்கனவே உள்ள 5 கணினி மற்றும் 1 தையல் மையத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
21. நூலகம் அமைப்பது, தற்போது 5 இடங்களில் உள்ளது.
என நம் சேவை தொடர்ந்து வரும் நிலையில், வேறு சில அறக்கட்டளைகளும் நம்முடன் சேர்ந்து சேவை புரிந்து வருகிறார்கள்.
கட்டுரையாளர்: க. வந்தியதேவன்
மாநில அமைப்பு செயலாளர்,
தென் தமிழகம்.