பரதன் பதில்கள்

கொடி மரத்தை சேவிக்காமல் கோயிலுக்குள் செல்லலாமா? –எம்.ராம்குமார், தேனி.

பெருமாள் கோயில்களில் கொடி மரத்தை சேவித்து விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். சிவன் கோயில்களில் வெளியே வரும் போதுதான் கொடிமரத்தை சேவிக்க வேண்டும்.

 

மகாபாரதத்தில் ராமாயணம் சொல்லப்பட்டிருக்கிறதா? –ஆர்.விஜய், மேட்டூர்.

ஆம், சொல்லப்பட்டிருக்கிறது. ஜெயத்ரதன் திரௌபதியை தூக்கிக் கொண்டு சென்று விடுகிறான். துக்கத்தில் யுதிஷ்டிரன், மார்க்கண்டேய மகரிஷியிடம், இப்படி ஒரு இழிநிலை வேறு ஏதாவது ராஜவம்சத்தில் ஏற்பட்டிருக்கிறதா? என்று கேட்க, அப்போது அவருக்கு ராமாயணத்தின் கதையைச் சொல்கிறார் மார்க்கண்டேய மகரிஷி. இது வியாச பாரதம் வனப் பர்வதத்தில் ராமோபாக்கியானம் என்று வருகிறது.

 

பிரிக்ஸ் மாநாட்டின் போது, வெளிநாட்டு தலைவர்களுக்கு சைவ உணவு பரிமாறியதை எதிர்த்து, 80 சதவீதம் இந்தியர்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என ராகுல் பதிவிட்டு இருக்கிறாரே? –எ.திலீப், நாமக்கல்.

சந்தர்ப்பவாத அரசியல். பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்லும் ராகுல் என்றாவது ஒரு நாள் பெரும்பான்மையான ஹிந்துக்களுக்காக பேசி இருக்கிறாரா?

 

எண்ணற்ற ஹிந்துக்கள் இருக்கும் காங்கிரஸ் எப்படி ஹிந்து விரோத கட்சியாக இருக்க முடியும்? –எஸ். குமாரி, ஈரோடு.

அப்பட்டமான ஹிந்து விரோத கட்சி காங்கிரஸ். ராகுல், சோனியா, பிரியங்கா இவர்களில் ஒருவர் கூட, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு விநாயகர் பந்தலுக்கு கூட செல்லவில்லை, மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பந்தலுக்கு செல்லவில்லை. மனுவாதம் என்று குற்றம் சாட்டுவதும், சைவ உணவை கேலி செய்வதும் ஹிந்துக்கள் மீதான வெறுப்பில் தான்.

சமூகநீதி என்றால் என்ன? – –கே. பிரியா, பழனி.

ஆன்மீகத்தை எதிர்க்க வேண்டும், சைவ உணவை எதிர்க்க வேண்டும், பிராமணர்களை எதிர்க்க வேண்டும், தேச ஒருமைப்பாட்டை எதிர்க்க வேண்டும், அந்நிய உதவி பெறும் சிறுபான்மை மதங்களை ஏற்றிப் பிடிக்க வேண்டும். இவ்வளவுதான் சமூக நீதி!

 

திமுக ஆட்சியின் போது நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி கெடுபிடி சம்பந்தமாக ‘ஊடகவியலாளர்‘ முக்தார், சேகர்பாபுவை பேட்டி காணும் காணொலி வைரலாகியதை பார்த்தீர்களா? –ஓ.சுந்தரி, வேலூர்.

முக்தார் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதையும், சேகர்பாபு தரிசனத்துக்கு செல்லும் கோயில்களில் அவமரியாதை செய்யப்படுவதையும் இப்போது நீங்கள் பார்க்கிறீர்களா ?

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க,
அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா? –எல்.தேவி, ஓசூர்.

இரண்டு கட்சிகளுமே தோல்விக்கான வித்தியாசத்தை குறைப்பதற்கு தான் வேலை பார்த்து வருகிறது. வெற்றியை நோக்கி பயணிக்கவே இல்லை!