பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் அண்மையில் மாரடைப்பால் காலமானார். இச்சம்பவம் நாடு முழுவதும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்ற ஆண்டு மற்றொரு கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவும் உயிரிழந்ததை நாம் யாரும் மறந்திருக்க முடியாது.
நடுத்தர வயதான இவர்கள் இருவருக்குமே உடற்பயிற்சி செய்யும்போது தான் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடற்பயிற்சி செய்யும் மக்களும் இதய பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கின்றனர். இது சராசரி புறநோயாளிகள் எண்ணிக்கையைவிட 25 சதவீதம் அதிகம்.
இதயமானது, ரத்தத்தை சுத்திகரித்து உடல் பாகங்களுக்கு ரத்தக் குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கின்றது. பிற உறுப்புகளை போலவே இதயம் செயல்படவும் ரத்தம் தேவை. சுத்திகரிப்பு பாதைக்கான இரத்தக் குழாய்கள் வேறு, இதயம் செயல்படும் பாதைக்கான ரத்தக்குழாய்கள் வேறு. இதயத்திற்குச் செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பினால் ஏற்படும் சிக்கலைத்தான் மாரடைப்பு என்கிறோம்.
உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், புகை, மது பழக்கங்கள், மன அழுத்தம், உடல் பருமன், தூக்கமின்மை, துரித உணவுகள் போன்றவை மாரடைப்பு ஏற்பட சில முக்கிய காரணிகள். இதனால் பாதிக்கப்பட்டிருந்தால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஈ.சி.ஜி, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
செரிமான கோளாறால் வயிற்றில் எரிச்சலும் நெஞ்சுவலியும் வரக்கூடும். நெஞ்சு வலியுடன் மூச்சுத் திணறல் இருப்பின் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. இரு நடிகர்களுமே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். பெரிய மருத்துவமனையை நாடி வெகுதூரம் பயணிப்பதுதான் பலரும் செய்யும் பிழை. அவசர காலத்தில் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் உயர் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு செல்லலாம்.
அதிக நேரம் செய்யக்கூடிய உடற்பயிற்சியும் ஆபத்துதான். தினசரி 30 முதல் 60 நிமிடங்கள் செய்யும் சீரான உடற்பயிற்சி போதுமானது. இதய நோய்க்கான காரணி உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்து
களை உட்கொண்டு சரியான வாழ்வியல் மாற்றங்களை மேற்கொண்டால் போதுமானது.
எப்பணி செய்யினும் பணிச்சுமை உண்டு. அவ்வப்போது சிறிது ஓய்வெடுத்துக் கொள்வதில் தவறில்லை. வாரம் ஒரு முறையேனும் குடும்பத்தினருடன் செல
விடுங்கள். ஒன்றாக அமர்ந்து வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். மனம் கழுதை அல்ல, தேவையற்ற சுமைகளை அதில் சுமத்தாதீர்கள். பிறருடன் உங்களை ஒப்பிட வேண்டாம். முடிந்த வரை அனைவரையும் மன்னியுங்கள். நவீன உலகில் நோய்களுக்கு பஞ்சமில்லை. அதைக் கண்டு அச்சப்படவும் வேண்டாம் அலட்சியம் காட்டவும் வேண்டாம். விழிப்புடன் இருந்தாலே போதும்.
டாக்டர். பு.பிரவின் ராஜ்குமார்