எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது ஈரான் புதிய உறுப்பினராக இணைந்துள்ளது. இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 23வது கூட்டம், ‘ஆன்லைன்’ வாயிலாக நேற்று நடந்தது. இந்த ஆண்டுக்கான மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சர்வதேச மற்றும் பிராந்திய அமைதிக்கு பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தங்கள் கொள்கையாக கொண்டுள்ளன; பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருகின்றன. அது போன்ற நாடுகளை விமர்சிக்க, எஸ்.சி.ஓ., அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் தயங்கக் கூடாது. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கும் பிரச்னையை கையாள்வதில் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம். நம் நாடுகளின் இளைஞர்கள் இடையே பிரிவினைவாத எண்ணம் பரவுவதை தடுக்க, நாம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.