இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இந்த மூன்று பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
70 ஆண்டுகளுக்கு இந்த இடஒதுக்கீடு தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன் இந்த இடஒதுக்கீடு முடிவடைகிறது. இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது, அதன்படி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கான இடஒதுக்கீடு நீடிக்கப்படவில்லை.
இந்த இடஒதுக்கீட்டு மசோதாவில் ஆங்கிலோ இந்தியன் பிரிவை மட்டும் தவிர்த்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது இதுகுறித்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 296 ஆங்கிலோ இந்தியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 84 பட்டியல் இன உறுப்பினர்களும், 47 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். மாநில சட்டசபைகளில் 614 பட்டியல் இன உறுப்பினர்களும், 554 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில், மேற்கண்ட இரண்டு இனத்தினரும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் என்ன காரணத்துக்காக, இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதோ, அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்கு இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிவரை இடஒதுக்கீடு நீடிக்கும்” என தெரிவித்தார். பின்னர் நடந்த இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 352 பேரும் வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதனையடுத்து மசோதா நிறைவேறியது.