மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண, பல்வேறு தீர்ப்பாயங் கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, காவிரி, மகதாயி, கிருஷ்ணா உள்ளிட்ட நதி நீர்பிரச்னைகளுக்காக, ஒன்பது தீர்ப்பாயங்கள் செயல்படுகின்றன. இவை, குறிப்பிட்ட காலத்துக்குள், பிரச்னைக்கு தீர்வு காண்பதில்லை. சில தீர்ப்பாயங்கள், 10 முதல், 28 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகின்றன.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இந்த புதிய சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நதிநீர் பிரச்னை தொடர்பான அனைத்து வழக்குகளையும், இனி, ஒரே தீர்ப்பாயம் தான், விசாரிக்கும். அதேநேரத்தில், இது, பல அமர்வுகள் உடையதாக இருக்கும்.உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி, இந்த தீர்ப்பாயத் தின் தலைவராக இருப்பார். இந்த தீர்ப்பாயம், குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கை விசாரித்து, தீர்வை அறிவிக்கும் வகையில், கால வரையறை நிர்ணயிக்கப்படும்.இந்த தீர்ப்பாயம், இறுதி உத்தரவை இரண்டு ஆண்டு களுக்குள் பிறப்பிக்கும். இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், அது, தானாகவே, அதிகாரப்பூர்வமாக அரசாணையாகி விடும் என்று மத்திய, ஜல சக்தி துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, கஜேந்திர சிங் ஷெகாவாத் பேசினார்.