நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்காக பாடுபடும் தேசிய அளவிலான அமைப்பான லகு உத்யோக் பாரதி பற்றி அறிவோம்…
லகு உத்யோக் பாரதி (LUB) நிறுவனம் 1994 ஏப்ரல் 26 அன்று, ஷ்யாம் பிஹாரி மிஷ்ரா அவர்களால் தொடங்கப்பட்டது. பாரதத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) வளர்ச்சிக்காக செயல்படும், தேசிய அளவிலான அமைப்பு இது. இந்த அமைப்பு தொழில் முனைவோர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது.
உறுப்பினர் விவரம்
இந்த அமைப்பில் நாடு முழுவதும் சுமார் 64,000 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 5,435 பெண் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இந்த அமைப்பு பாரதம் முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும், பெண்களுக்காக தனிப்பட்ட முறையில், 48 மகளிர் பிரிவுகள் (Exclusive Women Units), 12 மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்களில் 4 ஆயிரம் உறுப்பினர்களுடன் செயல்படுகின்றன. சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அரசு அங்கீகாரம் & பிரதிநிதித்துவம்
லகு உத்யோக் பாரதி அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து, மத்திய அரசு பல முக்கிய துறைகளில் நமது அமைப்பிற்கு பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளது. அவற்றில் சில முக்கிய துறைகள் – குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, ரயில்வே, ஜி.எஸ்.டி, இ.எஸ்.ஐ, மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள். இந்த துறைகளில் லகு உத்யோக் பாரதி அமைப்பின் உறுப்பினர்கள் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மோகன சுந்தரம் அவர்கள், பல முக்கிய துறைகளில் வாரிய உறுப்பினராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருவது நமக்கு பெருமைக்குரிய விஷயமாகும். அனைத்து வகையான தொழில் துறைகளையும் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
மாநில அளவிலான கூட்டங்கள் மூலம் பரஸ்பரம் சந்தித்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. மேலும், தேசிய அளவில் உறுப்பினர்களை ஒருங்கிணைக்க “LEAP” என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசின் “GEM Portal” மற்றும் “ONDC” போன்ற தளங்கள் மூலம் வணிகம், போக்குவரத்து மற்றும் விற்பனை நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
முக்கிய நோக்கங்கள்
சிறு மற்றும் குறு தொழில்களை ஒருங்கிணைத்தல், தொழில் முனைவோர் களை உருவாக்குதல், சுயசார்பு பாரதம் (Atmanirbhar Bharat) நோக்கத்தை முன்னேற்றுதல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் சிக்கல்களுக்கு தீர்வு காணுதல்.
முக்கிய இலக்குகள்
சிறு தொழில்களை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், அரசாங்க கொள்கைகளில் தொழில் துறையின் குரலை முன்வைத்தல், சுதேசி தயாரிப்புகளை மேம்படுத்துதல்.
முக்கிய செயல்பாடுகள்
தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் வணிக இணைப்பு, பெண்கள் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவு, ஏற்றுமதியாளர்களுக்கு (COO − Certificate of Origin) வழங்குதல்.
லகு உத்யோக் பாரதி (LUB) மிகச் சிறப்பாகவும், திட்டமிட்ட முறையிலும் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், தொழில்முனைவோரின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக செயல்படுகிறது. குழு செயல்பாட்டின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு மாதமும் செயற்குழு உறுப்பினர் கூட்டம் தவறாமல் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில், அந்த மாதத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும், எதிர்கால திட்டங்களும் விரிவாகப் பேசப்பட்டு, செயல்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதனால் செயல்பாடுகள் தெளிவாகவும், பயனுள்ளதாகவும் முன்னேறுகின்றன. பல சமூக மற்றும் தொழில் சார்ந்த செயல்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
மருத்துவ முகாம்கள் –
தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச சுகாதார பரிசோதனை, கண் பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சேவைகள்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் –
ஏழை மற்றும் தொழிலாளர் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு கார்டு வழங்குதல்.
விழிப்புணர்வு
தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ மற்றும் பி.எப் பயன்கள் குறித்த விழிப்புணர்வு, தொழில் உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வ வழிகாட்டுதல்.
திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து தொழில் துறைக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. உற்பத்தி திறன் உயர்த்துதல், தரநிலைகள், செலவு மேலாண்மை மற்றும் வணிக வளர்ச்சி ஆகிய துறைகளில் தொழில்முனைவோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
தொழில் மற்றும் வணிக வளர்ச்சி
தொழில்முனைவோர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளவும், புதிய வணிக வாய்ப்புகளை கண்டறியவும், கூட்டங்கள் மற்றும் வாங்குபவர் – விற்பவர் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறது. இது புதிய சந்தைகள் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்க உதவுகிறது.
ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றிய வழிகாட்டுதல்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும், அதற்கான வாய்ப்புகள் குறித்தும் வழிகாட்டுகிறது.
வங்கி கடன் பெறும் முறைகள் பற்றிய வழிகாட்டுதல் –
லகு உத்யோக் பாரதி, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு (SIDBI- Small Industries Development Bank of India) வங்கியுடன் இணைந்து சிறு மற்றும் குறு தொழில்களுக்கு நிதி உதவி பெற உதவுகிறது. மாதந்தோறும் வங்கி மேலாளர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்து, புதிய தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
தர உயர்வுக்கான முன்னேற்றம் –
அமைப்பின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக ZED (Zero Effect Zero Defect Certification) திட்டம் குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக, 150 நிறுவனங்களுக்கு இலவசமாக வெண்கல சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாம் கட்டமான வெள்ளி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சான்றிதழ் மூலம் தயாரிப்புகளின் தரம் உயர்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் போட்டித்திறன் அதிகரிப்புக்கு ஏற்ப திருப்பூர் தொழில்கள் உலக தரத்துக்கு முன்னேறுகின்றன.
சிறு மற்றும் குறு தொழில்கள் பாரத பொருளாதாரத்தின் முதுகெலும்பு, வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கியத் துறை. லகு உத்யோக் பாரதி என்பது, ஒரு அமைப்பு மட்டுமல்ல, சிறு தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கான இயக்கமாகும். சமூக சேவைகள், திறன் மேம்பாடு மற்றும் நிதி உதவி நடவடிக்கைகள் மூலம் தொழில் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது.
சமூக சேவை, தொழில் வளர்ச்சி மற்றும் தர உயர்வு ஆகிய மூன்று துறைகளிலும் சமநிலையுடன் செயல்பட்டு வரும் லகு உத்யோக் பாரதி, திட்டமிட்ட நிர்வாகம், தொடர் கூட்டங்கள் மற்றும் பயனுள்ள செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம், ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.
கட்டுரையாளர்: திருப்பூர் மாவட்டம் தலைவர், லகு உத்யோக் பாரதி