ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, இளங்குமார்
சம்பத் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் கிராமத்தில், 1961 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 16ல், அருணாச்சலம் நாடார் – வேலம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் இளங்குமார் சம்பத் ஜி. பள்ளிக் கல்வியை விளாத்திக்குளம் அரசு பள்ளிக்கூடத்தில் படித்த பிறகு, கல்லூரிப் படிப்பை தூத்துக்குடியில் உள்ள காமராஜ் கல்லூரியில் படித்தார். சட்டபடிப்பை பெங்களூரில் உள்ள பாலாஜி கல்லூரியில் படித்துத் தேர்ச்சிப் பெற்றார். கல்லூரிப் பருவத்தில் தேசிய மாணவர் படையில் (என்.சி.சி) ஈடுபாடு கொண்டு, அதில் “சி” சான்றிதழையும், “சிறந்த கேடட்” என்ற விருதையும் பெற்றார்.
1979ல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது, பிரச்சாரக் சுடலையாண்டி ஜி மற்றும் தூத்துக்குடி சிவாஜி ஷாகா முக்கிய சிக்ஷக் நாராயணன் ஜி, கல்லூரி நண்பர் சண்முகசுந்தரம் ஜி ஆகியோரின் முயற்சியால் ஷாகா வந்தார். அப்போது தூத்துக்குடி ஜில்லா பிரச்சாரக்காக இருந்த பாஸ்கர்ராவ்ஜி, தூத்துக்குடி ஜில்லா கார்யவாஹ் ஸ்பிக் ராஜேந்திரன்ஜி வழிகாட்டுதலில் சங்க வேலை செய்தார்.
1990ல், ஸ்ரீ ராமர் ரதயாத்திரைக்கு தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதனைத் தொடர்ந்து நடந்த கரசேவையின் போது கைது செய்யப்பட்டு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் சிறையில், 15 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1991ல், சர்சங்கசாலக்காக இருந்த பாளாசாஹேப் தேவரஸ் ஜியின் அழைப்பினை ஏற்று, சங்க பிரச்சாரக்காக வந்தார். 1990ல் மண்டல் காரியவாஹ்காக இருந்த போது, பாஸ்கர்ராவ் ஜி கன்னியாகுமரி கோட்ட பிரச்சாரக்காக இருந்தார். அப்போது ஜில்லா அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. அதில் 200 பேருக்கு உணவு ஏற்பாட்டை செய்யும் பொறுப்பு இளங்குமார்ஜிக்கு வந்தது. அனைத்து சேவா பஸ்திகளையும் தொடர்பு கொண்டு, அவர்களிடம் இருந்து உணவை வாங்கி விநியோகம் செய்தது பலரின் பாராட்டையும் பெற்றது.
டாக்டர் ஜி நூற்றாண்டு விழாவின் போது, தாலுகா கார்யவாஹ்காக இருந்த சீனு திருப்பதிஜியுடன் சேர்ந்து, விளாத்திகுளத்தில் உள்ள எல்லா மண்டல்களையும் தொடர்பு செய்தார். 1991 நவம்பரில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உடனடி உதவிகள் செய்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற வகையில் பொருளாதார உதவிகளை சங்க ஏற்பாட்டில் செய்தனர். அதனை நேரில் கண்டு பாராட்டி வாழ்த்தியவர் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு அவர்கள்.
1991ல், பாரதிய ஜனதா கட்சியில் வேலை செய்ய சங்கம் அனுப்பி வைத்தது. டாக்டர் முரளி மனோகர் ஜோஷியின் தலைமையில், பாரத நாடு முழுவதும் “தேசிய ஒற்றுமை யாத்திரை” (ஏக்தா யாத்ரா) நடைபெற்றது. அதனை தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி, எட்டையபுரம், கயத்தாறில் நடத்தும் பொறுப்பை ஏற்று திறம்படச் செய்தார். 1992 ஜனவரி 26ம் நாள் குடியரசு தினத்தன்று, காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்ற 60 பேர் கொண்ட பாஜக தொண்டர்களை ஒருசேர அழைத்து சென்று வெற்றி கண்டார். அதன் பிறகு, பாஜகவில் தமிழக இளைஞர் அணியின் செயலாளராக இருந்தார்.
1995ல், புதுச்சேரி பாஜக ஒருங்கிணைப்பாளராக திறம்பட பணியாற்றினார். 1998ல், திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ரங்கராஜன் குமாரமங்கலத்திற்கு தனி உதவியாளராகவும், உதவி தனி செயலாளராகவும் இருந்தார். புதுச்சேரி பாஜக மாநில அமைப்பாளராகவும் இருந்தார். கட்சியில் இருந்தபோது பல போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் தலைமை ஏற்று, முன்னிலை வகித்து திறம்பட நடத்தினார்.
2004ல், சுனாமி பாதிப்பின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பூம்புகார் மக்களுக்கும் மருத்துவ உதவிகளுடன் பொருளாதார உதவிகளையும், உயிர் நீத்தவர்களுக்கு தர்ப்பணம் என சங்க ஏற்பாட்டில் செய்தனர்.
2011 ஆம் ஆண்டு முதல் 2018 வரை சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் (ஜாக்ரன் மன்ச்) தமிழக ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அப்போது மாநிலம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களுக்கு சுதேசி பயன்பாட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினார்.
சங்கப் பணிக்கு மீண்டும் திரும்பிய இளங்குமார் சம்பத் ஜி, திருச்சி கோட்ட சஹ பௌத்திக் பிரமுக்காக இருந்தார். தற்போது சேவா பாரதியில் தென் தமிழகத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். பாஜகவில் இருந்த போது மூத்த தலைவர்களான அத்வானி ஜி, வெங்கையா நாயுடு ஜி, நிதின் கட்கரி ஜி, பங்காரு லஷ்மண் ஜி, பால் ஆப்தே ஜி, ராம் மாதவ் ஜி போன்றோரின் மேடைப் பேச்சுக்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
1987ல், சங்கத்தின் ஏழு நாள் பயிற்சி முகாமை முடித்த பிறகு, 1992ல் திருப்புண்ணவாசலில் உள்ள ராமகிருஷ்ண விவேகானந்தா பள்ளியில் முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமையும், 1997ல் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமையும், 2002ல் மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமையும் முடித்தார். தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேலாக வர்கவில் சிக்ஷக், முக்கிய சிக்ஷக், பௌத்திக் பிரமுக் என பல பொறுப்பில் இருந்துள்ளார்.
வழக்கறிஞரான இளங்குமார் சம்பத் ஜி, 1994 நவம்பர் 9 அன்று கீதப்ரியா அம்மாளை திருமணம் செய்தார். சங்கத்தின் பெண்கள் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதியில் தென் தமிழகத்தின் சேவா ப்ரமுக்காக கீதப்ரியா அம்மாள் உள்ளார். அவர்களுக்கு அகிலா ஷிவானி என்ற மகளும், விஷ்ணு ரங்கராஜன் என்ற மகனும் உள்ளனர். மகள் மருத்துவம் முடித்துள்ளார், மகன் எம்.பி.ஏ படிக்கின்றார். மகள் சமிதி முகாமும், மகன் பிராத்தமிக் வர்கவும் முடித்துள்ளார்.
சங்கம் மற்றும் சமிதியின் மூத்த பிரச்சாரக்குகள், அகில பாரத அதிகாரிகள், ஷேத்திரம் மற்றும் பிராந்த அதிகாரிகள் என பலரும் இளங்குமார் சம்பத் ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். சங்கப் பணியுடன், கட்சிப் பணியும் செய்த இளங்குமார் சம்பத் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.