தேசமெங்கும் தமிழை பரப்பும் தமிழ் பிரச்சார சபா

தென் பாரதத்தில் ஹிந்தி மொழியை பரப்புவதற்காக, தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபை மகாத்மா காந்தியால் சென்னை, தி. நகரில் 1918ம் ஆண்டு நிறுவப்பட்டது. அன்னி பெசன்ட் அம்மையார் இதனை துவக்கிவைத்தார். இதன் கிளைகள் தமிழகத்தின் திருச்சி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை சுமார் 6,000 ஆகும். மத்திய அரசின் நிதியுதவியுடன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிலையமாக இது செயல்படுகிறது. இங்கு ஹிந்திமொழிக் கல்வி, பல்வேறு நிலைகளில் நேரிலும், தபாலிலும் கற்பிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோல, தமிழ்மொழியை நாடு முழுவதும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்க பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ் பிரச்சார சபாவின் கிளைகள் வட மாநிலங்கள் அனைத்திலும் அமைக்கப்பட்டு அவற்றில், சான்றிதழ் முதல் பட்டயப்படிப்பு வரை பல்வேறு நிலைகளில் தமிழ்க் கல்வி போதிக்கப்பட உள்ளது. தமிழ் பிரச்சார சபாவுக்கும் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பிரச்சார சபா என்பது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையால் உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழ் மொழி மீதுள்ள ஈடுபாட்டினால் தானிந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிந்தி பிரச்சார சபா போன்றே இதற்கும் மத்திய அரசு நிதியுதவியை செய்யும், தன்னாட்சி அதிகாரத்துடன் தமிழ் அறிஞர்கள் குழுவால் நிர்வகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பாடத்திட்டங்கள் தற்போது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதி (தேசிய மொழிகளுக்கான அமைப்பு) நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி, கடந்த 2014ல் பிரதமராக பதவியேற்றது முதல், தமிழின் பெருமைகளை மாணவர்கள் முதல் ஐ.நா சபை வரை உலகெங்கும் பேசி வருகிறார். கடந்த வருடம் டிசம்பரில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்கும் இம்மாதம் நடைபெறவுள்ள ‘சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி போன்றவைகளை நடத்தவும் உத்வேகமளித்தார். ‘தமிழ் உலகின் பழமையான மொழி’ என்று பெருமிதம் பொங்க கூறி வருகிறார். தற்போது தேசமெங்கும் தமிழை பரப்பும் வகையில் தமிழ் பிரச்சார சபா அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது உண்மையிலேயே தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை.