தேசத்தை முன்னிறுத்தி கல்வி சேவை செய்யும் தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர்கள் சங்கம்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது.
சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும்
வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை தேசத்தை முன்னிறுத்தி கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர்கள்
சங்கம் (THETA) பற்றி அறிவோம்…

 

உயர்கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலன்களைப் பேணவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் என்ற உயரிய நோக்கத்துடன், “THETA“ என்று அழைக்கப்படுகிற, “தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர்கள் சங்கம்”, 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. “தேசத்தை முன்னிறுத்திய கல்வி சேவை” என்ற அடிப்படைக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு, தன் பயணத்தை தொடங்கியது.
இந்த சிந்தனை வெறும் முழக்கமல்ல, ஒவ்வொரு செயலிலும், முடிவிலும் பிரதிபலிக்கிறது. ஒரு சிறிய தொடக்கத்திலிருந்து இன்று தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு வலிமையான ஆசிரியர் இயக்கமாக THETA வளர்ந்துள்ளது. மாநில பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் என பல்வேறு நிறுவனங்களிலிருந்து உறுப்பினர்களை ஈர்த்துள்ளது. வெறும் நிர்வாக அமைப்பைக் கடந்து, ஆழமான பாரதிய கல்வியியல் தத்துவத்தில் வேரூன்றியுள்ளன. ஒரு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டுமோ, அதேபோல் THETA தமிழ்நாட்டு உயர்கல்வி சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது.
சங்கத்தின் தத்துவம் மற்றும் அடிப்படைக் கொள்கைகள்
அனைத்து நடவடிக்கைகளிலும் தேசிய நலனே மேலோங்கி நிற்கும்.
கல்வி நிலையங்களில் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவது.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.
ஆசிரியர்களின் பொருளாதார, சமூக மற்றும் தொழில் சார்ந்த நலன்களை பாதுகாத்தல்.
நேர்மையான மற்றும் வெளிப்படையான சங்க நிர்வாகம்.
முதன்மை நோக்கங்கள்
THETA-வின் அடிப்படை இயங்கு சக்தி என்பது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சார் அமைப்புகள் தொடர்புடைய அனைவரின் நலன்களைப் பேணுவதே. இந்த நோக்கம் மூன்று முக்கிய தூண்களில் நிறுவப்பட்டுள்ளது:
ஆசிரியர் நலன்: தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். சம்பள பிரச்சினைகள், பணி நிலைத்தன்மை இன்மை, தொழில் முன்னேற்ற வாய்ப்புகள் குறைவு என்பன அவற்றில் சில. இந்த பிரச்சினைகளை அக்கறையுடன் எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண்கிறது.
மாணவர் நலன்: ஆசிரியர்களின் நலன் மேம்படும்போது, மாணவர்களும் பயனடைகிறார்கள். மாணவர்களுக்கான தரமான கல்வி சூழல், உரிய வசதிகள், ஆரோக்கியமான கல்விக் கலாச்சாரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது.
சமுதாய நலன்: வெறும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நில்லாமல், உயர்கல்வியின் அனைத்து பங்குதாரர்களையும் — பெற்றோர், சமூகம், தொழிற்துறை என அனைவரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
உறுப்பினர்கள்
மாநில அரசு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பரந்த உறுப்பினர் தளம் உயர்கல்வியின் சகல தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கமாக மாற்றுகிறது.
ABRSM — அகில பாரதிய ராஷ்ட்ரிய சைக்ஷிக் மகாசங் என்னும் தேசிய அமைப்புடன் THETA இணைந்துள்ளது. தேசிய அளவிலான பிரச்சினைகளை எழுப்ப, ABRSM பள்ளி மற்றும் உயர்கல்வி என இரண்டு தளங்களிலும் ஆசிரியர்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கிறது. கல்வியில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர, கொள்கை வகுப்பாளர்களோடு தொடர்ந்து உரையாடி வருகிறது.
THETA, ABRSM-ன் தமிழ்நாடு அலகாக செயல்பட்டு, மற்ற மாநில அலகுகளோடு ஒருங்கிணைந்து கல்விச் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைக்கிறது.
முக்கிய செயல்பாடுகள்
உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், முதலாவது ஆண்டு கருத்தரங்கை கோவையில் கடந்த 2024 ஆம் ஆண்டு எற்பாடு செய்தது. மாண்புமிகு தமிழக ஆளுநர் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கு கொண்டு, அகில பாரத அளவில் கல்வி துறையில் முன்னோடி வல்லுனர்களுடன் கலந்துரையாடினர். சங்கத்தின் இரண்டாவது ஆண்டு கருத்தரங்கம் சென்னை வி.ஐ.டி பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இது தவிர “சென்னை கல்வியாளர்களின் குரல்”, “கோவை கல்வியாளர்களின் குரல்” என்ற மாநில அளவிலான நிகழ்வுகளும் உறுப்பினர்களின் பெரும் ஆதரவோடு ஒருங்கிணைக்கப்பட்டன. உறுப்பினர்களின் கொள்கை தெளிவை உறுதியாக்கவும், திறமை மேம்பாடு மற்றும் ஆளுமை வளர்ச்சிக்காகவும் இரண்டு பயிற்சி முகாம்கள் முறையே கோவை மற்றும் சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டன.
பிரச்சினை தீர்க்கும் பயணம்
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளை சங்கம் முன்னிறுத்தியுள்ளது. பணி நிரந்தரமாக்குதல், ஊதிய சீரமைப்பு, பணி சூழல் மேம்பாடு, தொழில் முன்னேற்ற வழிகள் ஆகிய துறைகளில் சங்கமானது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை சாதித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசு பழைய ஒய்வூதிய திட்டம் குறித்த ஆலோசனைகூட்டதுக்கு அழைத்த போது, பழைய ஒய்வூதிய திட்டம் வேண்டும் என சங்கம் வாதிட்டது.
ஆரோக்கியமான சூழல்
சங்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் — கல்வி சமூகத்திற்கும், கல்விக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்துவது. பொதுவாக, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு இடையே மோதல் சூழல் காணப்படும். ஆனால் சங்கமானது, தேசத்தின் வலுவான ஜனநாயக கட்டமைப்பிலும் , நிலைபெற்ற பாரதிய விழுமியங்களிலும் கொண்ட நம்பிக்கையால் முற்றிலும் மாறுபட்ட கலந்துரையாடல் முறையை தேர்ந்தெடுத்துள்ளது.
ஆரோக்கியமான ஜனநாயக கலாச்சாரத்தை உருவாக்குவதே, சங்கத்தின் இலக்கு. ஆசிரியர் சமூகமும், கொள்கை வகுப்பாளர்களும் ஒன்றிணைந்து, கல்வியின் பொதுவான பிரச்சனைகளை விவாதிக்கும் திறந்த முறையை, சங்கமானது உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட ஒத்துழைப்பு மனப்பான்மை கல்விக்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்கும் நன்மை பயக்கும்.
சங்கத்தின் தலைமை பொறுப்பை முனைவர் பாஸ்கர், செயலாளர் பொறுப்பை முனைவர் மணிகண்டன், பொருளாளர் பொறுப்பை முனைவர் கருப்பையா ஏற்று வழி நடத்தி வருகின்றனர். மாநில குழுவில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். சங்கத்தின் மூத்த பிரச்சாரகர் ம.கொ.சி. ராஜேந்திரன் அமைப்புச் செயலாளராக இருந்து வழி காட்டி வருகிறார்.
கல்வித்துறையில் ஜனநாயக மதிப்புகளை நிலைநிறுத்துவது THETA-வின் அடிப்படை நோக்கமாகும். ஒவ்வொரு ஆசிரியருக்கும், தன் குரலை எழுப்பும் உரிமை உண்டு; ஒவ்வொரு கருத்தும் மதிக்கப்பட வேண்டும்; முடிவுகள் ஜனநாயக வழியில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இவையே சங்கத்தின் அடிப்படை நம்பிக்கைகள்.
இந்த ஜனநாயக மரபு THETA-வின் உள்அமைப்பிலும் பிரதிபலிக்கிறது. நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மாநிலக்குழு மற்றும் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த முறையில் எடுக்கப்படுகின்றன, நிதி வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளை முன்னிறுத்துவதில், THETA முன்னணியில் நிற்கிறது. இந்த பிரச்சினைகள் வெறும் ஒரு கல்லூரிக்கோ, ஒருமாவட்டத்திற்கோ மட்டுமானவை அல்ல — அவை மாநில அளவிலான, சில நேரங்களில் தேசிய அளவிலான பிரச்சினைகளாக இருக்கின்றன.
உயர்கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவது, மாணவர் உதவித்தொகை மற்றும் கல்வி வசதிகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாடு, கல்வி கொள்கைகளில் புதிய யோசனைகளை உள்வாங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன.
எதிர்கால திட்டங்களும் தொலைநோக்கும்
தமிழ்நாட்டின் உயர்கல்விக் கூடாரத்தை விரிவுபடுத்தவும், அதிகமான நிறுவனங்களில் இருந்து உறுப்பினர்களை சேர்க்கவும், பிரச்சினைகளில் தீர்வு காணவும் THETA உறுதியுடன் உள்ளது.
ABRSM-ன் தேசிய கட்டமைப்பில் மற்ற மாநில அலகுகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், THETA தமிழ்நாட்டு உயர்கல்வியை தேசிய அளவில் முன்வைக்கும் ஒரு தளமாக வளர்ந்து வருகிறது. கல்வி என்பது எல்லைகளற்றது, அது மாநில எல்லைகளையும் கடந்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் கருவியாக உள்ளது. ஒரு ஆசிரியர் தன் தொழிலை மகிழ்ச்சியுடன் செய்யும்போது, ஒரு மாணவர் தன் கனவை நோக்கி முன்னேறும்போது, தமிழ்நாட்டு உயர்கல்வி நாட்டின் பெருமைக்கு வழிவகுக்கும், அதுவே THETA-வின் உண்மையான வெற்றியாக கருதப்படும்.
கலாச்சார விழுமியங்களை மையப்படுத்தி, மனிதனை செம்மையாக்கும், சமூகத்தை செழுமைபடுத்தும், தேசத்தை வலுப்படுத்தும் கல்வி முறைக்காகஅர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர் சமூகத்தை கட்டமைப்பதுடன், அவர்கள் உரிமைகளை காக்க சங்கம் உறுதியுடன் பணியாற்றி வருகிறது.
கட்டுரையாளர்: மாநிலத் தலைவர், தமிழ்நாடு உயர்கல்வி ஆசிரியர்கள் சங்கம்