திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தரும் சிறந்த பக்தி சொற்பொழிவாளரும் ஆவார். தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
வாரியார் சுவாமிகள், தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக அவதரித்தவர். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியைத் தனது 19வது வயதில் மணம்புரிந்தார். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்.
தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15ம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19ம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார்.
அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்ததால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். சுவாமிகள் 1936ம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக்கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.
அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது. அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குழந்தைகளுக்கு, “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.
1993 அக்டோபர் 19 அன்று வாரியார் இலண்டன் பயணமானார். 1993 நவம்பர் 7ல் பாரதம் திரும்பி வரும்போது விமானப் பயணத்திலேயே காலமானார். அவரின் பிறந்த ஊரில் கிருபானந்த வாரியாரைச் சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.