விஸ்வநாததாஸ் சுப்ரமணியம் ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக சிவகாசியில் பிறந்தார். நல்ல குரல் வளத்துடன் கலை ஆர்வமும் கொண்டிருந்தார். மேடை நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை பாடி வந்தார். காந்தியை சந்தித்த பின்னர் தேச விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தி பாடல்களையும் பாடினார். புராண நாடகங்களில் தேசவிடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம். இவரின் நாடகங்களுக்கு ஆங்கிலேய அரசு விதித்த தடையை மீறியதால் சிறை தண்டனைப் பெற்றார். தனது 54வது வயதில், முருகன் வேடத்தில் மயிலின் மீது அமர்ந்து நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார்.