திசைகாட்டுது திருவள்ளூர்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாடு நெடுக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்) அன்பர்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதை குடும்ப அளவில் செய்து காட்டி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ முயன்று வருகிறார்கள். விவசாயக் குடும்பம் என்று வரும்போது பாசனத் தண்ணீருக்கான சிக்கன உத்திகளை நாட வேண்டியுள்ளது. பெரும் எடுப்பில் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி சாதிக்கக் கூடிய பல உத்திகள் உண்டு. அந்த வகையில் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ள ஒரு சாதனை பற்றிய விவரம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட மொத்தம் 1,200 ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டு, அவற்றை மழை நீர் சேகரிப்பு மையங்களாக மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பிரதாப் முருகன். சமீபத்தில் பெய்த ஒரே மழையில் இந்த மையங்களின் புண்ணியத்தில் ஐந்து முதல் 10 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் அந்தப் பகுதிகளில் உயர்ந்திருக்கிறது என்று நல்ல செய்திகளையே மக்கள் மத்தியில் பரப்பிவரும் ‘த பெட்டர் இந்தியா டாட் காம்’ இணையதளம் தெரிவிக்கிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு விவசாயி முருகனின் புதல்வரான பிரதாப், இவ்வாறு ஓரளவு விவசாயிகளின் இன்னல் தீர்த்த சாதனை நல்லதொரு முன்னுதாரணம். அந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் மட்டுமல்ல, பாரதத்தின் எந்த மாநிலத்திலும் இந்த உத்தி நிச்சயம் பலன் தரும்.
உதாரணமாக வேகமாகத் தொழில் மயமாகி வருகிறது விசாகப்பட்டினம். விட்டுவிட்டு மழை பெய்த போதிலும் அந்த மாவட்டத்தின் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக கீழே இறங்கி விட்டது. நிலத்தடி நீரை அறுவடை செய்வதில் தமிழகத்தின் சாதனையை பின்பற்றி ஆந்திரா போன்ற மாநிலங்கள் பயன் பெற முடியும். அது மாநிலங்களிடையே நல்லுறவுக்கும் வழி வகுக்கும். அடுத்து, தேசத்திலேயே மிக அதிக அளவு உபரியாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துள்ள கர்நாடகாவுக்கும் திருவள்ளூர் வெற்றிக்கதை கைகொடுக்கும்.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலேயே கூட ஒரு விவசாய குடும்பம் அக்கம்பக்கத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு தென்பட்டால் ஆட்சியர் முருகனின் உத்தியை கையாண்டு பாசன நீர் வளத்தை அதிகரிக்க வழிதேடலாம்.
நிலத்தடி நீரை நம்பி உள்ள தேசங்களின் பட்டியலில் உலகிலேயே பாரதம் முன்னணியில் உள்ளது என்பதால் திருவள்ளூர் மாவட்ட சாதனை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது (ஒரே மாதத்தில் 1,100 குளங்களை வெட்டி பிரதாப் ஐ.ஏ.எஸ், கின்னஸ் சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்தார் என்பதும் முன்னதாக பேசுபொருளானது).