ராஜா சர் முத்தையா செட்டியார் என்று பரவலாக அறியப்பட்ட செட்டிநாடு ராஜா சர் அண்ணாமலை முத்தையா செட்டியார், பிரபல தொழிலதிபர், வங்கியாளர், அரசியல்வாதி, கொடையாளர் மற்றும் கலாச்சார ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்டவர். 1933ல், மெட்ராஸ் நகரத்தின் முதல் மேயராகவும், கலால் மற்றும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றியவர்.
அவரது தந்தை ராஜா சர் அண்ணாமலை செட்டியார், ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் தமிழ்நாட்டின் சிதம்பரம் நகரில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவியவர். மேலும், `நைட்’ பட்டம் பெற்ற மூன்றாவது நாட்டுக்கோட்டை செட்டியார் இவரே. முதல் இருவர் அவரது மருமகன் மற்றும் தந்தை ஆவர். 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, செட்டிநாடு ராஜாவும், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தின் புகழ்பெற்ற உறுப்பினருமான டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். 1922ல், சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்ற பின், தனது குடும்பத்தின் தொழிலுக்காக பர்மாவுக்குச் சென்று, வங்கித் துறையில் நிபுணத்துவம் பெற்றார். தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் உறுப்பினரானார். மெட்ராஸ் சட்டமன்றக் கவுன்சிலில் உறுப்பினரானார். 1929ல், மெட்ராஸ் மாநகராட்சியில் உறுப்பினராகவும், 1933ல், மேயராகவும் தேர்வானார். 1943ல், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின், கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். `இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா’ தற்போது `ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ மற்றும் `இந்தியன் வங்கி’யுடன் தொடர்புடையவராக இருந்தார்.
கல்வி மீதான ஆர்வம், அவரது குடும்பப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீ மீனாட்சி கல்லூரியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மையமாக மாற்றுவதில், அவர் தனது தந்தையுடன் இணைந்து பணியாற்றினார். நீதிக் கட்சியின் தலைமைக் கொறடாவாகவும், சட்டமன்றத் தலைவராகவும் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்தபோதும், அவர் கல்வி மீதான தனது ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொண்டார், ஓராண்டுக்கும் மேலாக சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார். பச்சையப்பா அறக்கட்டளைகளின் நிர்வாகக் குழுவில் 33 ஆண்டுகள் நீடித்தார். 1948-ல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். அண்ணாமலைநகரில் முத்தையா பாலிடெக்னிக் மற்றும் செட்டிநாட்டில் அண்ணாமலை பாலிடெக்னிக் ஆகியவை நிறுவப்பட்டன. தமிழ் மொழி, இலக்கியம், இசை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் ஆய்வில் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் முன்னேற்றத்திற்கான அவரது சேவைகளுக்காக அவருக்கு `தமிழ் இசைக் காவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
1941ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி மன்னரின் பிறந்தநாள் கௌரவங்களில் அவருக்கு ‘நைட்’ பட்டம் பாரதத்தின் வைஸ்ராயால் வழங்கப்பட்டது. செட்டிநாடு மாளிகையில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் எடின்பர்க் கோமகனுக்காக மதிய விருந்து நடந்தது. மத்திய அரசு அவருக்கு 1973ல் `பத்மபூஷன்’ விருதை வழங்கியது. நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் 1982ல், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அவர் 1984 மே 12 அன்று, சென்னையில் காலமானார். மத்திய அரசு 1987 டிசம்பர் 21 அன்று, அவரது நினைவாக ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டு அவரைக் கௌரவித்தது.