சென்னையைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், கோயம்பேடு பகுதியில் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் காதர் என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, திருத்தணியை சேர்ந்த கிருபாகரன் என்பவர், ஓடாத ஒரு பழைய காரை வாங்கி வந்து, ரிப்பேர் செய்து தருமாறு கேட்டனர். அதற்கு, கடை உரிமையாளர், 1 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார். இதற்கு கிருபாகரன் சம்மதித்தார், இதனையடுத்து காரை பழுது பார்க்கும் பணி துவங்கப்பட்டது. இதுவரை ரூ. 61,000 மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டு பணிகள் நடந்துள்ளது. கிருபாகரனிடம் இதற்கான பணத்தைக் கேட்டபோது அவர் பணத்தை தராமல் இழுத்தடித்துடன் தி.மு.க. பிரமுகர் ராகுல் மற்றும் 7 பேருடன் அங்கு வந்து மெக்கானிக் காதரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால், காதரின் தலை மற்றும் முகத்தின் எலும்புகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், காரையும் அப்போதே பொருத்தித் தரசொல்லி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த காதர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் ஆதாரத்தோடு கோயம்பேடு காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டமன்றம் நடப்பதாகக் கூறி, காவல்துறையினர் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ராகுல் தி.மு.க. பிரமுகர் என்பதால் காவலர்கள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆவுடையானூரில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வி.ஏ.ஓ.வாக இருப்பவர் செந்தூர்பாண்டியன். இவர், அங்குள்ள தி.மு.க.வினருக்கு ஆதரவாக போலி பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட சிலர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, தென்காசி கோட்டாட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, தொடக்க வேளாண்மை வங்கியின் துணைத் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான சுப்பிரமணியன், வி.ஏ.ஓ.வுக்கு ஆதரவாகப் பேசியதோடு, அங்கிருந்த சமூக ஆர்வலர்களையும் தாக்க முயன்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.