தேசத்தில் பயங்கரவாத அசிங்கம் மறுபடியும் தலைதூக்குகிறதே? டெல்லி செங்கோட்டை பக்கத்திலேயே குண்டுவெடிக்கிறதே? அதுவும் இதில் முஸ்லிம் டாக்டர் கும்பலுக்குத் தொடர்பாமே? குற்றப்பின்னணி உள்ள முஸ்லிம் ஒருவர் நடத்தும் பல்கலைக்கழகமே பயங்கரவாத பாசறையாமே? இவ்வளவு படித்தும் மதவெறி கோரதாண்டவமாடுகிறதே? … இரு வாரங்களாக மக்கள் மனதில் ஓங்கி ஒலிக்கும் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்? நவம்பர் 19 தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை ஒன்றில், தேசிய சிந்தனையாளர் வினய் சஹஸ்ரபுத்தே சித்தரிக்கும் சில காட்சிகள் கவனம் கவர்கின்றன:
‘வெள்ளை கோட் பயங்கரவாதம்’ தலைதூக்கும் இந்த வேளையில், சீர்திருத்தவாதி ஹமீது தல்வாயின் அவதானிப்பு (8ம் பக்க பெட்டி செய்தியை பார்க்கவும்) பற்றி ஆழமாக பகுப்பாய்வு செய்வது அவசியம். எது பாரதம் என்பது பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கல்வித் திட்டம் தேவை. எது பாரதம் என்பது பற்றிய புரிதலை எவ்வாறு இளைஞர்களிடையே பரிமாறுவது? பாரதத்தில் உள்ள அனைத்து இளைஞர்களின் சிந்தனையிலும்- (முஸ்லிம்கள் உட்பட) உண்மையிலேயே நவீனமான எதிர்காலம் காணுவதற்கான அணுகுமுறையை எவ்வாறு அறிமுகப்படுத்துவது? அடுத்த தலைமுறை பாரதியருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய குறைந்தது ஐந்து முக்கியமான விஷயங்கள் உள்ளன.
முதலாவது, உலக சமூகத்தை ஒரே குடும்பமாகப் பார்ப்பது. ஜி20 தலைமையின் போது, பாரதம் மிகவும் கவனமாக அந்த சபைக்கான குறிக்கோளைத் தேர்ந்தெடுத்தது: ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’. அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான எதிர்காலத்துடன் கூடிய ஒரே குடும்பம் என்பதே அதன் சேதி. எனவே, ‘வசுதைவ குடும்பகம்’ அல்லது ஒரு குடும்பமாக உலகளாவிய சமூகம் என்ற பாரதிய சிந்தனை வெறும் தத்துவ ரகம் அல்ல. ஒரு குடும்பமாக வாழ்ந்து காட்டியாக வேண்டும்.
இரண்டாவதாக, நமது ஆன்மீக ஜனநாயகம். இந்த நாடு ஒருபோதும் ஒரு மதஅரசாக இருந்ததில்லை, ஒருபோதும் இருக்க முடியாது. ‘ஏகம் சத், விப்ராஹா பஹுதா வதந்தி’ (உண்மை ஒன்று, ஞானிகள் அதை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள்) என்ற நம் அணுகுமுறை, வழிபாட்டு முறைகளில் ஏகபோக போக்கை நிராகரிக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஆக்ஸ்போர்டில் சொற்பொழிவாற்றும்போது, டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்: “உலகில் இப்போது இனம், கலாச்சாரம், மதம் இவை பற்றி தவறான புரிதல்களே காணப்படுகிறது. நமது தற்கொலை மோதல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் சில சாதனங்களை நாம் அரை மனதுடன் தேடிக்கொண்டிருக்கிறோம். மத மோதல் பிரச்சினைக்கு ஹிந்து (அதாவது பாரத) வழி நமக்கு நிச்சயம் பயன்படும்.
ஹிந்துக்களின் ஆன்மீக / கலாச்சார ஜனநாயகம், மற்றவர்களை மட்டம் தட்டும் எந்தவொரு போக்கையும் வெறுக்கிறது. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம் பிடிக்கும் மனப்பன்மையை முளையிலேயே கிள்ளியெறிகிறது”.
மூன்றாவது, இரண்டாவதன் அடியொற்றுகிறது. நமது வெளிப்படையான பன்முகத்தன்மை, எண்ணற்ற வழிகளில் நமது உள்ளார்ந்த ஒற்றுமையின் வெளிப்பாடு மட்டுமே என்பதை ஏற்றுக்கொள்ள மட்டுமல்லாமல் கொண்டாடவும் தூண்டுகிறது. இயற்கையாகவே, எந்த மொழி பேசினாலும், வழிபாடு எது என்றாலும், ஒருவர் வெவ்வேறு அடையாளங்களுடன், ஒரே நேரத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் உராய்வு இல்லாத சகவாழ்வை வழங்குகிறது பாரதம்.
“கிராமம் ஜனபதாஸ்யார்த்தே, ஸ்வாத்மார்த்தே பிருதிவீம் த்யஜேத்” என்ற நன்கு அறியப்பட்ட ஹிதோபதேச வரி இதையே சொல்கிறது (ஒரு பெரிய அடையாளத்தின் அம்சமாகிட சிறிய அடையாளங்களைக் கைவிடுங்கள்).
தலைதூக்கும் வெள்ளைக்கோட் பயங்கரவாதம், மதவெறியின் பிடியை உதற, வெறும் படிப்பு போதாது என பொட்டில் அடித்தாற்போல சொல்கிறது. முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரு வகையான மறுமலர்ச்சி ஏற்படுவது மிகவும் முக்கியம்.
‘மதச்சார்பற்ற இந்தியாவில் முஸ்லிம் அரசியல்’ என்ற தல்வாயின் புத்தக முன்னுரையில் சமூக சீர்திருத்த சிந்தனையாளரான ஏ.பி. ஷா: “1,300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் மறுமலர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை என்பதே அதன் அடிப்படை பிணி என்கிறது தல்வாய் ஆய்வறிக்கை” என்று பதிவு செய்கிறார்.
“முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும்போதெல்லாம், அவர்கள் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரின் சம உரிமைகளை அங்கீகரிக்க மறுத்துவிட்டனர்; அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் இடங்களில், அவர்கள் பொதுவாக தங்களை மதமற்ற தேசத்தின் ஒரு பகுதியாகக் கருதத் தயங்குகிறார்கள். இது ஆழமாக வேரூன்றிய நீண்ட வரலாற்று / மத மரபில் வருவது” என ஹமீது தல்வாயே ஒரு நூலில் பதிவு செய்கிறார்.
மொத்தத்தில், மனதில் தொற்றிக் கொண்டிருக்கும் எதிர்மறைவாத இருளை நீக்க படிப்பு மட்டும் போதாது. உண்மையான பாரதிய அறிவொளி பரவினால்தான் வெள்ளை கோட் பயங்கரவாத மிரட்டலை தேசம் முறியடிக்க முடியும்.
தமிழில்: பெரியசாமி