பல நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம், நம் அண்ணன் தர்மர் தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும் கர்ணனை ஏன் தானம் செய்வதில் சிறந்தவன் என்கின்றனர் என்பது தான் அது.
இதை அறிந்த கிருஷ்ணன் தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பாண்டவர்களை அழைத்தார். இந்த இரு மலைகளையும் மாலை பொழுதுக்குள் தருமம் செய்து விட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று ஒப்புக் கொள்கிறேன்,” என்றார்.
பாண்டவர்கள் இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் வெட்டித்தர, தருமர் அதை மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப் பொழுதானது, இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், ‘எங்களால் முடியாது கண்ணா’ என்று தோல்வியை ஒப்புக் கொண்டார்.
கிருஷ்ணன், கர்ணனை வரவழைத்தார். “கர்ணா, இந்த இரண்டு மலைகளை நீ ஒரு நாழிகைக்குள் தானம் செய்ய வேண்டும். உன்னால் முடியுமா?” என்றார். கர்ணன், “இப்போதே செய்கிறேன்” என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, “நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.
பாண்டவர்கள் அதிசயித்தனர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன்.
தர்மருக்கும் பரந்த மனது தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனது உடையவன் கர்ணனே என்பதை பாண்டவர்களுக்கு சொல்லாமல் உணர்த்தினார் கிருஷ்ணன்.