தமிழகத்தில் ரயில்வே வளர்ச்சிக்காக ரூ.6 ஆயிரத்து 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனறு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரயில்வே துறை பணிகள் மற்றும் டாடா தொழிற்சாலையில் ஐ-போன் ஆலை அமையுள்ள இடத்தை நேற்று ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ரயில்வே பணிகளுக்கு 2009-2014-ல் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதாவது 7 மடங்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாமல்பட்டி, ஓசூர் உள்ளிட்ட 75 ரயில் நிலையங்கள் உலகத் தரத்துக்கு இணையாக மாற்றியமைக்கப்பட உள்ளன.
ஓசூர்-ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம், மிக நீளமான சுரங்கப் பாதை அமைப்பதால் ஏற்படும் அதிக செலவு காரணமாக தாமதமானது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். 2014-ல் ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு ரூ.34 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.2.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 5,200 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெங்களூரு-ஓசூர் இணைப்பு ரயில் பாதையை நான்கு வழிப் பாதையாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, ஓசூர்-ஓமலூர் பாதையை இரு வழிப்பாதையாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓசூரில் பல்முனை ரயில்வே சரக்கு முனையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.